செவ்வாய், 11 டிசம்பர், 2018

தொடங்கியது 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை! காங்கிரஸ் வட்டாரம் " மகிழ்ச்சி"

5 மாநிலத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!மின்னம்பலம் : அடுத்த வருடம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கருதப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 11) வெளியாகின்றன.
வடகிழக்கு மாநிலமான மிசோரம், வடஇந்திய மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய இந்தியாவான மத்தியப் பிரதேசம், தென்னிந்திய மாநிலமான தெலங்கானா என்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பதால் இது ஒட்டுமொத்த இந்தியாவின் தேர்தல் முடிவாக எதிர் நோக்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12, 20 தேதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் டிசம்பர் 28ஆம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் இன்று ஒரே தேதியில் வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மிசோரமில் காங்கிரஸும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் ஆட்சியில் இருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. ம.பியில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது என்றும் வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன.
ராஜஸ்தான் மக்கள் மீது உள்ள அதீத நம்பிக்கையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்றே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்கிறது.
மக்களின் தீர்ப்பு என்ன என்பது இன்று முற்பகல் வாக்கில் தெரியத் தொடங்கும். பிற்பகலில் தெளிவாகிவிடும். இந்த ஐந்து மாநில மக்களின் தீர்ப்பை அறிய ஒட்டுமொத்த இந்திய மக்களுமே ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: