சனி, 15 டிசம்பர், 2018

1984 சீக்கிய கலவரத்தில் கமல்நாத் மீது கொலை குற்றசாட்டு ? மத்திய பிரதேச முதல்வராக எதிர்ப்பு?


தினத்தந்தி :புதுடெல்லி, 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மாறி மாறி கூடுதல் இடங்களை பிடித்து, கடும் இழுபறி நிலவி வந்தது.
 கடைசியில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 109 இடங்கள் கிடைத்தன.
பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும்,
சமாஜ்வாடி 1 இடத்திலும்,
சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படுகின்றன. 114 இடங்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினரும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆக, காங்கிரஸ் கட்சிக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விட்டது. எனவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இருப்பினும் முதல்வர் யார்? என்பது இன்னும் தெளிவாகவில்லை.


மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், இளம் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வரை ராகுல் காந்தி தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கமல்நாத்திற்கு கடும் எதிர்ப்பு

இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கோரிக்கை கமல்நாத்திற்கு எதிராக எழுந்துள்ளது. இதேபோன்று சீக்கிய கலவரத்தில் அவருடைய பங்கு இப்போது பெரும் பிரச்சனையாக முன் வந்துள்ளது. அவரை முதல்வராக நியமனம் செய்ய சீக்கியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 1984-ல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது காங்கிரஸ் கையில் கழுவமுடியாத கரையாக தொடர்கிறது. இதில் கமல்நாத் பங்கும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக அமெரிக்காவிலும் வழக்கு நடந்தது.

“காங்கிரஸ் குடும்பம் எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் 1984-ல் கலவரம் செய்தவர்களை பாதுகாக்கிறது. இப்போது ராகுல் காந்தியும், காந்தி குடும்பமும் கமல்நாத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் பொறுப்பை வழங்குகிறது. 1984 சீக்கிய கலவரத்தில் சீக்கியர்களை கொலை செய்தவர்கள் கவலையடைய வேண்டியதில்லை என்ற செய்தியை தெரிவிக்க ராகுல் காந்தி விரும்புகிறார்,” என்று அகாலி தளம் தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை: