செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
திரு ஜி ஜி பொன்னம்பலம் அமைச்சராக செய்த அபிவிருத்திப்பணியை வேறு எந்த தமிழ் தலைவரும் செய்யவில்லை
Varatharajan Mariampillai : ஜீ.ஜீ யின் நினைவு நாள் இன்று!
'கால் நூற்றாண்டுக்கு நான் தான் தலைவன்! என்னை அசைக்கேலாது!!'
-அசைந்த விமானத்தில் பதறாமல் சொன்ன ஜீ. ஜீ!
அமரர் கே.சிற்றம்பலம் அவர்கள் 'சுதந்திர' இலங்கையின் மூத்த அமைச்சர்களில் ஒருவர். அவர் மன்னாரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று ஐ.தே.க வில் இணைந்து தபால் தொடர்புகள் அமைச்சராகவும் பின்னர் கடற்றொழில் அமைச்சராகவும் பணியாற்றியவர். 1947 முதல் 1956 இல் தமிழரசுக் கட்சியின் அழகக்கோனிடம் தோற்கும் வரை மன்னாரைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
இலங்கை வானொலி நிலையம் திறப்பு க்கான கல்லில் அவரது பெயர் உள்ளது.
( அடிக்கற்களில் பெயர்கள் இடப்படக்கூடாது என்பதற்கு ஆதரவான நம்மவரின் கவனத்துக்கு)
ஜீ. ஜீ பொன்னம்பலம் 1931 இல் மன்னாரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து பின்னர் பருத்தித்துறையில் 1934 இல் இரு தேர்தல்களில் இருதடவையும் 1947, 1952, 1956, 1960 (ஜூலை), 1965 இல் யாழ்ப்பாணத்திலும் வென்று மக்கள் பிரதிநிதியானார்.
1960 மார்ச் தேர்தலில் அவரை வென்றவர் துரையப்பா ( சுயேட்சையாக)
ஜீ. ஜீ. 1960 மார்ச்சில் தோற்றவுடன் 'ஜீ.ஜீ செத்துப் போச்சி' என்றும் சிங்கத்தை வென்ற எலி என்று துரையப்பாவையும் பாராளுமன்றத்தில் நயந்தும் வியந்தும் குரல்கள் ஒலித்தன.
ஆனால் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் அமைச்சர் பதவி ஏதும் பெறாமல் ஆதரவை வழங்கினார்.
1970 இல் தமிழரசுக் கட்சி கத்தோலிக்கரும் ஜீ.ஜீ யின் ஆதரவுக் கோட்டையைச் சேர்ந்தவருமான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எக்ஸ். மாட்டீனை நிறுத்தி சில வாக்குகளால் ஜீ.ஜீ யைத் தோற்கடித்தது.
1970 இல் ஜீ. ஜீ தோற்ற போதும், அவரை ஒதுக்கி வைத்த தமிழர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் தலைவராக இணையக் கோரிய போது அதன் கூட்டுத் தலைமையை ஏற்றுக் கொண்டார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் குடியுரிமையை நீக்கும் வகையில் அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட ட்ரயல் அற் பார் வழக்கில் தலைவர்கள் அமிர்தலிங்கம், க.பொ.இரத்தினம், வி.என்.நவரத்தினம், க.துரைரத்தினம் ஆகியோருக்காக அவர் வாதாடினார்; வென்றார்.
இது நடந்தது 1976 ஜூலையில்.
1976 ஜனவரியில்
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதிக்கு எதிராக இந்திரா அரசாங்கம் மேற்கொண்ட கோதுமை ஊழல் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சக்காரியா முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கலைஞர் சார்பில் ஜீ.ஜீ. ஆஜரானார்.
அந்த வழக்கிலிருந்து கலைஞர் கருணாநிதி விடுதலையானார்.
ஒரு காலத்தில் பொது அறிவுப் போட்டியில் ' தமிழரின் தனிப்பெரும் தலைவர் யார்? என்றால் அதற்குரிய விடை ஜீ. ஜீ. பொன்னம்பலம் என்பதாகும்.
முதலாவது தமிழ் அரசியற் கட்சி ஒன்றை உருவாக்கினார் என்ற பெருமையைப் பெற்றார்.
குறுக்கு விசாரணையில் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞராயிருந்தார். வைத்தியர்கள் கைவிரல் அடையாள நிபுணர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் எனப் பலதரப்பினரையும் குறுக்கு விசாரணை செய்வதில் பெயர் பெற்ற சட்டவாதியாயிருந்தார்.
1948 முதல் 1953 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் தமது கைத்தொழில் அமைச்சர் பதவிக் காலத்தில் முழு இலங்கையிலுமே பாரிய மூன்று கைத்தொழிற்சாலைகளை தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் நிறுவினார்.
நான் முதலில் குறிப்பிட்ட அமரர் சிற்றம்பலமும் ஐந்தாண்டுகள் அமைச்சராயிருந்தவர்.
ஆனால் ஜீ.ஜீ செய்த அபிவிருத்திப்பணியை அவருக்கு முதலோ பிறகோ அமைச்சர்களாக வந்த நம்மவர் யாரும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இன்றும் உயர்ந்து நிற்கும் கே கே.எஸ் சீமேந்து ஆலையின் தோற்றத்தை 1949 இல் கற்பனை பண்ணிப் பார்த்தால் ஜீ.ஜீ யின் பணியின்பரிமாணம் அனறு எவ்வளவு விசாலமானது என்பது விளங்கும்.
ஜீ.ஜீக்குப் பிறகு தெற்கு யாருக்கும் கைத்தொழில் அமைச்சர் போன்ற பெறுமதிமிக்க அமைச்சினைத் தமிழர் எவருக்கும் வழங்கவில்லை.
சிறீமாவோ அரசாங்கம் குமார சூரியருக்கு தபால்த்தந்திச் சேவைகள் அமைச்சு பதவி வழங்கியதை- 1977 பொதுத்தேர்தல் மேடைகளில் வண்ணை ஆனந்தன் முத்திரை மந்திரி என்று நையாண்டி பண்ணிய நினைவு.
சரி இனி நான் சொல்ல வந்த கதைக்கு வருவோம்!
இது மூத்த ஊடகர்கள் அரசியற் பிரமுகர்கள் சட்டவாளர் எனப் பலர் சொன்ன கதையாகும்.
ஐம்பதுகளில் ஜீ.ஜீ பலாலிலியிலிருந்து கொழும்புக்கு அன்றைய ஏர்சிலோன் விமானத்திற் பயணமாகிறார்.
அவருக்கு அப்பாலுள்ள -நடுவில் வழி இருக்க- ஆசனத்தில் சிற்றம்பலம் அவர்களும் பயணம் செய்கிறார்.
வானில் விமானம் பறந்து கொண்டிருந்தது...
இடையில் படக் படக் என ஏதோ சத்தம்..
அது நிற்கவில்லை; தொடர்ந்தது.
பயணிகள் கலவரமடையத் தொடங்கினர்.
பைலட்- விமானி - அச்சப்படும் தேவையில்லை என்று அறிவிக்கிறார்.
இன்னும் சில நிமிடங்களில் விமானம் குலுக்கிக் கொண்டு அசைந்தபடி...
மக்கள் ஒருவரையொருவர் பார்க்கின்றனர்..
சிற்றம்பலம் ஜீ.ஜீ யைப் பார்க்கிறார்.
ஜீ. ஜீ தம்பாட்டில் ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இருக்கிறார்.
சிற்றம்பலம் அசையும் விமானத்தில் எழும்பியபடியே ஜீ.ஜீ யிடம் பொன்னா விமானம் அசைகிறதே ...
ஆம் அசைகிறது..எங்கள் விமானம் அல்லவா?
நீங்கள் குழம்பாமல் இருக்கிறீர்கள்?
டோன்ற் வொறி! கால் நூற்றாண்டுக்கு நான் தான் தமிழர்களின் தலைவன் என்று சாத்திரி சொல்லியிருக்கிறார்.
அதனால் எனக்கு ஒன்றும் நடவாது அதனால்...
உங்களுக்கும் எதுவும் நடவாது!'
என்ன பகிடியா விடுகிறீர்? இது என்ன கோட்டா( நீதிமன்றமா)?
'நடந்தால் விமானியை குறுக்கு விசாரணை செய்வேன்..'
“Don’t worry.
“If this plane crashes, I will cross-examine the pilot!”
என்றாராம் புன்னகைத்தபடி.
1931 இல் அவர் அரசியலுக்கு வந்தாலும் அவரது சோதிடர் சொன்னது போல கால் நூற்றாண்டுக்கு மேலாக அரசியலில் திகழ்ந்து தமது இறுதிக் காலத்தில் தமிழ் மக்களின் தலைவர்களைக் காத்த தனிப்பெரும் தலைவர் என்ற புகழுடனேயே மறைந்தார் !
படம்:-
கோதுமை ஊழல் வழக்கு விசாரணையில் கலைஞர் சார்பில் வாதிடுவதற்காக தமிழகம் சென்ற தலைவர் அமரர் ஜீ.ஜீ யை அமரர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பொன்னாடை போர்த்து வரவேற்ற காட்சி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக