வியாழன், 12 பிப்ரவரி, 2026

கோபண்ணா : தவேகவுக்கு என்ன கொள்கை? பாஜகவை எதிர்க்க தயங்கும் தவேகாவோடு நாங்கள் கூட்டணி சேரவே முடியாது

 Showketh Hussain :  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ. கோபண்ணா அவர்கள் மின்னம்பலம் இணையதள “அறச்சீற்றம்” செய்திப் பிரிவில் பேட்டி கொடுத்திருந்தார், முழுமையாக பார்த்தேன். இணை ஆசிரியர் கலைச்செல்வி சரவணன் நல்லதொரு கேள்விகளை கேட்டு, அதற்கான தெளிவான பதிலை கோபண்ணா அவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார். காங்கிரஸாருக்கு இது தேவையான நேரத்தில் அவசியமான அறிவுரை…!  
பாஜகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தோழர்கள் 
அவரது பேட்டியை அவசியம் பார்க்கவும். அந்த நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் கட்சியின் முதன்மை நோக்கம் என்ன…? 
தேசிய நலன். பாஜகவை வீழ்த்துவது அதற்கான கூட்டணி. 
கூட்டணியின் நோக்கம் என்ன…? 


ஒன்றியத்தியில் திரு. ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.  தமிழ்நாட்டில் திரு. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். இதுதான் இந்தக் கூட்டணியின் நோக்கம்…! 
காங்கிரசில் சிலருக்கு திமுக மீது அதிருப்தி இருக்கிறது. அது தனிப்பட்ட அதிருப்தி. அது கொள்கை சார்ந்து இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவிலேயே இன்று பாரதிய ஜனதாவை எதிர்த்து, வகுப்புவாத சக்திகளை எதிர்த்து பேசுகிறவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினும், திமுகவும் தான். 
சமீபத்தில் ராகுல்காந்தியை நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தொகுதி எண்ணிக்கையை மாநிலத்தில் பேசிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். 
திமுக பேச்சுவார்த்தைக் குழு அமைத்த பிறகு, காங்கிரஸ் குழுவுடன் பேசி எண்ணிக்கை முடிவு செய்யப்படும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் ராகுல்காந்தி தலையிட்டு முதல்வர் ஸ்டாலினுடன் பேசி எண்ணிக்கையை முடிவு செய்வர். இந்தக் கூட்டணி எண்ணிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்படுவது அல்ல. இது கொள்கை சார்ந்த கூட்டணி.
இந்த நாட்டில் மோடியின் சர்வாதிகார அராஜக பாசிச ஆட்சியை எதிர்க்க வேண்டுமென்று சொன்னால்… 
தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடக் கூடாது என்றால்…
திரு. ஸ்டாலின் ஆதரவும், திமுக ஆதரவும் காங்கிரஸுக்குத் தேவை…!
மன வருத்தங்களுக்காக கொள்கை சார்ந்த கூட்டணியை விட்டு, கொள்கையே இல்லாத, கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத தவெகவுடன் நாம் போக முடியாது…!
பாஜகவை எதிர்க்கத்  துணிவற்ற, தயங்குகிற தவெகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி சேரவே முடியாது. சேருவதற்கான வாய்ப்பும் இல்லை. அப்படி நீங்கள் தவெகவோடு சேருவீர்கள் என்றால், அதனால் பலனடையப் போவது பாஜக அதிமுக கூட்டணியே தவிர காங்கிரஸ் கட்சி அல்ல…!
திமுகவை பலவீனப்படுத்துவது பாஜகவை வலிமைப்படுத்துவதற்கு நாம் உதவி செய்கிறோம் என்று பொருள். திமுக காங்கிரஸ் கூட்டணி மூலம் தான் பாஜக அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க முடியுமே தவிர, தவெகவோடு சேர்ந்தால் பாஜக அதிமுக தான் வெற்றி பெறும். அப்படி பாஜக வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் காங்கிரஸ் கட்சியில் தவெகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்…!
பேட்டியின் இறுதியில் ஒன்றை தெளிவாக கோபண்ணா அவர்கள் பேசி இருக்கிறார். இந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தனிப்பட்ட முறையில் எனக்கென்று எந்த பலனும் இல்லை. எந்த பொறுப்புக்களிலும் நான் இல்லை. முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்தார். ஆனால் இந்த ஆட்சியில் எனக்கு எதுவும் இல்லை. பதவியை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் இருக்கலாம் என்ற ரீதியில் அவரது பேட்டி முடிவடைந்தது…!
முதிர்ச்சியான பக்குவப்பட்ட அரசியல் மூத்த தலைவரின் கண்ணியமான மின்னம்பலம் பேட்டியை பார்க்கலாம்...!

கருத்துகள் இல்லை: