சனி, 4 நவம்பர், 2017

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் படமெடுக்கத் தடை!

கடற்கரை பகுதிகளில் படமெடுக்கத் தடை!மின்னம்பலம் :தமிழ் சினிமாவின் பல காதல் காட்சிகள் அரங்கேறிய சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த ஏற்கெனவே தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது சென்னை மெரினா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் வரை எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு நிரந்தரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் மெரினா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் ரோடு வரையில் இனி படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் பொது நிகழ்வுகள், அமைப்பு சார் ஒன்று கூடல் போன்றவற்றுக்கு அரசு அனுமதி வழங்க மறுத்தது. அதையும் மீறி எவரேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: