திங்கள், 30 அக்டோபர், 2017

அழகிரி :பேசாம மதுரைக்கு வந்து எங்க கூட இருங்கப்பா...

Mayura Akilan Oneindia Tamil : சென்னை: அழகிரி மீது கருணாநிதிக்கு பாசம் அதிகம். சில ஆண்டுகள் கட்சியை விட்டு விலகியிருந்தாலும் தந்தை என்ற முறையில் வந்து சந்தித்து செல்வார் அழகிரி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தந்தையை பார்த்த அழகிரி, உருக்கமாக பேசினாராம். இதை உறவினர்களும் பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர். முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த கருணாநிதி, கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக வெளியில் செல்வதை தவிர்த்து வந்தார். மருத்துவமனை வாசம், ஓய்வு என்றிருந்த கருணாநிதி, சில வாரங்களாக வெளியில் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார். இன்று தனது மகன் மு.க முத்துவின் பேரன் மனு ரஞ்சித் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் கருணாநிதி குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். இதனால் கோபாலபுரமே களைகட்டியது.


அழகிரி தனது குடும்பத்தோடு கோபாலபுரம் வந்திருந்தார். நீண்ட நாட்கள் கழித்து தந்தையை பார்த்த உற்சாகத்தில் ஓடிப்போய் கையை பிடித்துக்கொண்டார். எப்படிப்பா இருக்கீங்க என்று கேட்க, அதற்கு நலம் என்பது போல தலையை உயர்த்தி சிரித்தார் கருணாநிதி.
 மதுரைக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருச்சே. கொஞ்சநாளைக்கு மதுரையில வந்து இருங்கப்பா என்று உருக்கமாக கூறினாராம் அழகிரி. அப்போது இருவருமே நெகிழ்ச்சியோடு பேசியதை உறவினர்கள் பார்த்தனர்.

 கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது மே மாதம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் கருணாநிதி. அடுத்த சில மாதங்களில் உடல்நலம் குன்றவே, வெளியூர் செல்வதை தவிர்த்து விட்டார்.

அண்ணா அறிவாலயம் கூட செல்வதில்லை. தற்போது மதுரைக்கு வருமாறு அழைத்துள்ளார் அழகிரி. மகனின் அழைப்பை ஏற்று கோபாலபுரத்தை விட்டு மதுரைக்கு செல்வாரா கருணாநிதி பார்க்கலாம்<

கருத்துகள் இல்லை: