திங்கள், 30 அக்டோபர், 2017

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தலைவர்கள் வெளியேற்றம் ...


மின்னம்பலம் : ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசத்திலிருந்து வரிசையாக தலைவர்கள் விலகி வருகிறார்கள்.
தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவரும் தெலங்கானாவில் இருக்கும் தெலுங்கு தேச எம்.எல்.ஏவுமான ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் (அக்டோபர் 28) அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இதுகுறித்து விளக்குவதற்காக விஜயவாடா சென்ற ரேவந்த் ரெட்டி, முதல்வரைச் சந்திக்க முடியாமல் அவரது முகாம் அலுவலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துத் திரும்பிவிட்டார்.
தனது விலகல் கடிதத்தில், ‘தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியமான தலைவர்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.
இதுகுறித்து தலைமைக்குப் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை. இதைக் கேட்டால் நான் கட்சியிலிருந்து ஒதுக்கப்படுகிறேன். எனவே இனி இந்தக் கட்சியில் இருந்து பயன் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. இவரோடு, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவருமான நரேந்தர் ரெட்டியும் விலகியுள்ளார்.
இந்த இரு தலைவர்களும் அடுத்ததாக காங்கிரஸில் சேர உள்ளதாக பேசப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தெலங்கானாவின் முக்கிய தலைவர்கள் விலகிவருவதை அடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: