புதன், 1 நவம்பர், 2017

தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மேகம் எப்போது விலகும்

savukkuonline.com :  தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மேகம் எப்போது விலகும், எப்போது விடியல் வரும் என்றே பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் நடந்த பல்வேறு அவலங்களுக்கான தீர்வுகளை நாடி, பல்வேறு தரப்புகளும் நீதிமன்றத்தை அணுகி, இன்று நீதிமன்றத்தின் கரங்களில் தமிழக ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   இது ஒரு துரதிருஷ்டமான சூழல்தான் என்றாலும், மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அணியும், ஒன்று சேர்ந்து சேர்ந்திசை வாசிக்கையில், ஜனநாயக முறைப்படி நீதிமன்றத்தை நாடுவதுதானே சரியான வழி முறை ?  அதைத்தான் எதிர்க்கட்சிகள் செய்திருக்கின்றன.
பெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சி தொடரும் ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தின் முகத்தில் விழும் கரும்புள்ளி என்பதை மக்கள் உணர்ந்தே என்று இந்த அவலம் தீரும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.  ஆனால் நீதிமன்றங்களோ மந்தகதியில் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றன.
1991 ஜெயலலிதா ஆட்சிகாலத்தில், அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டியிடம், முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க அனுமதி வேண்டி டாக்டர் சுப்ரமணிய சுவாமி மனு அளித்தார்.  அவரது மனுவை ஏற்ற சென்னா ரெட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

6 ஏப்ரல் 1995 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.   ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதிட்டார்.  வாதத்தை ஒரு மணி நேரம் கேட்ட நீதிபதி பாட்டீல், இந்த வழக்கு முக்கியமானது.  ஆகையால் இந்த வழக்கை டிவிஷன் பென்ச் விசாரிக்க பரிந்துரைத்து, தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் என்றார்.  அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி கே.ஏ.சுவாமி.   அவரிடம் வழக்கு சென்றதும், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சீனிவாசன் மற்றும் எஸ்எஸ்.சுப்ரமணி ஆகிய நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பென்ச் விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.
20 ஏப்ரல் 1995 அன்று இந்த வழக்கின் விசாரணை டிவிஷன் பென்ச் முன்பு தொடங்கியது.   காலை 10.30 முதல் மாலை 4.30 வரை இந்த ஒரே வழக்குதான்.  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.  வழக்கம் போல தீர்ப்பு வர மாதக்கணக்கில் ஆகும் என்றுதான் எதிர்ப்பார்க்கப்பட்டது.  ஆனால் ஏழே நாட்களில் 27 ஏப்ரல் 1995 அன்று ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க ஆளுனர் அனுமதி வழங்கியது சரியே என்று தீர்ப்பளித்ததோடு, நீதிமன்றத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.  ஏனென்றால் அப்போதெல்லாம் ஜெயலலிதா நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதிமுக ரவுடிகளை விட்டு நீதிமன்றத்தையே தாக்கும் வகையில்தான் ஆட்சி நடத்தி வந்தார்.   இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான், தீர்ப்பளித்த நீதிபதி எம்.சீனிவாசனின் வீட்டுக்கு மின்சாரமும், குடிநீரும் துண்டிக்கப்பட்டன.  அந்த நீதிபதி இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூட இல்லை.  இரண்டு நாட்கள் கழித்து வழக்கறிஞர்களுக்கு விபரம் தெரிந்து போராட்டத்தில் இறங்கியதும்தான் அது சரி செய்யப்பட்டது.
11 மே 1995 அன்று உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு தடை பெற்றார் ஜெயலலிதா.  அந்த வழக்கு இன்று வரை நிலுவையில் இருக்கிறது.  அன்று வெற்றி பெற்றாலும் 1996 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அதிமுக சந்தித்தது. ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றார்.  இவையெல்லாம் வரலாறு.
இன்றும் நீதிமன்றம் மட்டுமே தமிழகத்துக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்த முடியும் என்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.   நீதிமன்றத்தில் திமுக சார்பாகவும், டிடிவி தினகரன் சார்பாகவும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இவை என்ன வழக்குகள், அவற்றின் நிலை என்ன, அவை என்ன ஆகப் போகிறது என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.   அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை எடுத்து வந்தார்கள் என்று முக.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த பிறகு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதுதான் எடப்பாடி மற்றும் சபாநாயகர் தனபாலின் திட்டம். திமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தால், அது நாளை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என்பது தனபாலுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர்கள் நீதிமன்றம் சென்று, அந்த வழக்கு இறுதி முடிவை எட்டும் வரை, ஆட்சியை தடையில்லாமல் நடத்தலாம் என்ற திட்டமே.   அந்த அடிப்படையில்தான் 21 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.   ஆனால் திமுக உடனடியாக நீதிமன்றத்தை அணுகி சபாநாயகரின் நோட்டீசுக்கு தடை பெற்றது.  7 செப்டம்பர் 2017 அன்று இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை, திமுக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்கக் கூடாது என்றும், உரிமைக் குழு இந்த விவகாரத்தின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.  இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
எடப்பாடிக்கும் தனபாலுக்கும் 28 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது என்பது உடனடியாக நடக்காது என்பது தெரிய வந்தது.   வாக்கெடுப்ப நடத்தாமல் நீண்ட காலம் காலதாமதம் செய்வதும் அத்தனை எளிதல்ல என்பது புரிந்தது.  இந்த அடிப்படையில்தான் டிடிவி அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தனர்.

இவர்கள் தகுதிநீக்கம் செய்வதற்குள், திமுக நீதிமன்றத்தை அணுகி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுத்தது.    இந்த வழக்கு 14 செப்டம்பர் 2017 அன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் மனுதாரர் முக.ஸ்டாலின்.  தலைமைச் செயலாளர், சபாநாயகர், ஆளுனரின் செயலாளர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எதிர் மனுதாரர்கள்.   இந்த வழக்கில் முக்கிய கோரிக்கை சபாநாயகருக்கு வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்பதுதான் என்றாலும்,  டிடிவி தரப்பு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து விட்டு வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் திட்டமிட்டுள்ளார் என்ற விவகாரத்தை எடுத்து வாதிட்டது.  இதை அரசுத் தரப்பு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.    ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது, சபாநாயகர், டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா, எடுக்க மாட்டாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.  அது அவரது அதிகாரம்.  அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று வாதிட்டார்.    இதனால் நீதிபதி 20 செப்டம்பர் 2017 வரை, வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் திமுக சார்பில் கபில் சிபல் வாதிட்டார்.
இதற்கு அடுத்த விசாரணை 20 செப்டம்பர் 2017.  ஆனால் 18 செப்டம்பர் 2017 அன்று சபாநாயகர் தனபால் டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
20 செப்டம்பர் 2017 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  திமுகவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரும், தங்களை தகுதிநீக்கம் செய்தது தவறு என்று மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர்.  வழக்கு விசாரணை தொடங்கியதும், அரசுத் தரப்பில், திமுக வழக்கை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிடப்பட்டது.  ஏனென்றால், சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதால், வாக்கெடுப்பை விரைவாக நடத்தி, வெற்றி பெற்று விடலாம் என்பதே அவர்கள் எண்ணம்.  ஆனால் திமுகவினர், டிடிவி எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு முடிவு செய்யப்படும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று வாதாடினர்.   டிடிவி தரப்பும் இதையே வலியுறுத்தியது.
நீதிபதி, அடுத்த உத்தரவு வரும் வரை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை 4 அக்டோபர் 2017க்கு தள்ளி வைத்தார்.   இதற்குள் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமி மாறி அவருக்கு பதிலாக நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரணை நடத்தத் தொடங்கினார்.
வழக்கின் போக்கு தங்களுக்கு எதிராக போகிறது என்பதை அரசுத் தரப்பு உணரத் தொடங்கியது.   4 அக்டோபர் 2017 அன்று வாதாடிய எடப்பாடி தரப்பு மூத்த வழக்கறிஞர் அரியாம சுந்தரம், வழக்கை தாமதப்படுத்த நேரம் வாங்குவதிலும், திமுக முதலில் தொடர்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வழக்கில் உத்தரவு பெறுவதிலுமே கவனமாக இருந்தார்.   இந்த வாதங்கள் தீவிரமடைந்ததும் ஒரு கட்டத்தில் நீதிபதி அரியாம சுந்தரத்திடம், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை முடிவு செய்யும் வழக்கு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு.   சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை நான் முடிவு செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எப்படி உத்தரவிட முடியும் என்று வெளிப்படையாக கேட்டார்.  இதனையடுத்து அரியாம சுந்தரமும் அமைதியானார்.
வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.  குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸ் வந்ததுமே திமுக உடனடியாக நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றது போலவே, டிடிவி தரப்பு, சபாநாயகரின் நோட்டீஸ் வந்ததுமே நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றிருந்தால், சபாநாயகரால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாமல் போயிருந்திருக்கும்.   ஆனால் அது எப்படி தகுதி நீக்கம் செய்வார்கள் என்று இறுமாப்பாக டிடிவி அணி இருந்ததன் விளைவே இந்த தகுதிநீக்கம்.
இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே திமுக அடுத்த வழக்கை தாக்கல் செய்தது.   இந்த வழக்கை தாக்கல் செய்தவர் திமுக சட்டப்பேரவை கொறடா சக்ரபாணி.   இந்த வழக்கு என்னவென்றால், மானஸ்தர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கு. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சபாநாயகரின் செயலாளர், சபாநாயகர் தனபால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள்.  சபாநாயகர், டிடிவி தரப்பைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் ஆளுனரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று மனு அளித்தனர்.  அந்த காரணத்துக்காக அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.  ஆனால் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடா அளித்த உத்தரவை அப்பட்டமாக பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரும் மீறினார்கள்.  ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியதாகும்.  ஆகையால் உடனடியாக அவர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவையும் தாக்கல் செய்திருக்க வேண்டியது டிடிவி தினகரன் தரப்பு.   ஆனால் மங்குணி தினகரன் இந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை. அப்பட்டமாக துரோகம் இழைத்த பன்னீர்செல்வத்தின் பதவியை பறிப்பதற்கு முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டியது டிடிவி தினகரனா இல்லையா ?  ஆனால் இந்த வழக்கையும் தாக்கல் செய்தது திமுகதான்.   இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கு அடுத்ததாக திமுக மற்றொரு வழக்கை தாக்கல் செய்தது.   இவ்வழக்கை திமுகவின் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி தாக்கல் செய்தார்.   இந்த வழக்கு ரிட் ஆப் கோ வாரண்டோ.   கோ வாரண்டோ என்றால் ஒருவர் எந்த அடிப்படையில் ஒரு பதவியை வகிக்கிறார் என்று அதன் அடிப்டையையே கேள்வி கேட்கும் ஒரு அரசியல் அமைப்புப் பிரிவு.  உதாரணத்துக்கு ஒருவர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.  அந்த பதவிக்கான கல்வித் தகுதி பிஎச்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அவர் பணியில்  சேர்ந்த பிறகு, அவரது பிஎச்டி பட்டம் போலி என்று தெரிய வந்தால் அவர் மீது ரிட் ஆப் கோ வாரண்டோ தொடுக்கலாம்.  ஏனென்றால் அவர் பிஎச்டி பட்டம் இல்லாமல் பேராசிரியராக இருக்கிறார்.  நீதிமன்றம் அவரை பதவிநீக்கம் செய்து உத்தரவிடும்.
அது போலவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் பிச்சாண்டி.  அவர் தனது மனுவில், உச்சநீதிமன்றம், ராஜேந்திர சிங் ராணா என்ற வழக்கில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்றால் அவர் அந்த தகுதிநீக்கத்துக்கான செயலை செய்த நாள் முதல் தகுதிநீக்கம் அடைந்ததாக கருதப்படுவார்.  மேலும், தகுதி நீக்க நாளை, சபாநாயகர் முடிவெடுக்கும் நாளில் இருந்து கணக்கில் கொள்ள முடியாது.  ஏனெனில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ள சபாநாயகர் அவர் இஷ்டம் போல முடிவெடுக்க இது வழி வகுக்கும்.  இது கட்சித் தாவல் தடை சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் தகுதிநீக்கத்துக்கான செயலை செய்திருந்தால், அந்த செயலை செய்த 15 நாட்களுக்குள் அந்த கட்சியின் நிர்வாகக் குழு கூடி, அந்த தகுதிநீக்கச் செயலை, மன்னிக்க வேண்டும்.  ஆனால் பிப்ரவரி மாதம் நடந்த வாக்கெடுப்பில் கொறடாவின் உத்தரவை மீறிய செயல் இன்று வரை, அதிமுக நிர்வாகக் குழுவால் மன்னிக்கப்படவில்லை.  எனவே, வாக்கெடுப்பு நடந்த 18 பிப்ரவரி 2017 முதல் பன்னீர்செல்வமும், மாபா பாண்டியராஜனும் தகுதிநீக்கப் பட்டவர்களாகவே கருத வேண்டும்.  இதனால் தகுதியில்லாதவர்களான மாபா பாண்டியராஜனும், பன்னீர்செல்வமும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும் தொடர்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தனது மனுவில் பிச்சாண்டி கூறியுள்ளார்.
இந்த மனுவையும் டிடிவி தினகரன்தான் தொடுத்திருக்க வேண்டும்.  செய்யவில்லை.
இந்த மனு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுவின் விசாணையின்போது, இந்த வழக்கை ஏற்கனவே நிலுவையில் உள்ள இது தொடர்பான இதர வழக்குகளோடு சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி கூறியதோடு, அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளாக இருப்பதால், அனைத்து வழக்குகளையும் வரும் நவம்பர் 2ம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.
அய்யய்யோ.. திரும்பவும் முதல்ல இருந்தா என்று உங்களுக்கு சலிப்பு ஏற்படும்.   முதலில் இருந்துதான் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரே ஒரு நம்பிக்கையூட்டும் விஷயம் ஒன்று உள்ளது.   ஒவ்வொரு வழக்கிலும், தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்படும்.   அந்த பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பில் மற்றொரு பதில் மனு தாக்கல் செய்யப்படும்.   இவையெல்லாம் முடிந்த பிறகே இறுதி வாதங்கள் தொடங்கும்.  இவை முடிவடைய மாதக் கணக்கில் ஆகும்.   வழக்கமாக, தோல்வி என்பது கண்ணில் தெரிந்தால், அரசுத் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய குறைந்தது 8 வாரங்கள் அவகாசம் கோரப்படும்.  8 வாரங்கள் முடிந்த பிறகும் மீண்டும் அவகாசம் கோரப்படும்.  அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் இவ்வாறு அவகாசம் கோருகையில், பெரும்பாலும் நீதிபதிகள் அவகாசம் வழங்கவே செய்வர்.  இதனால் மாதக்கணக்கில் கால தாமதம் ஆகும்.
ஆனால்  இந்த வழக்குகளில், ஆளுனர் மற்றும் சபாநாயகரை தவிர்த்து, ஏனைய எதிர் மனுதாரர்கள் அனைவரும் பதில் மனுக்களை தாக்கல் செய்து விட்டனர்.   டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி போன்றோர் வந்ததனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, கடைசியாக பிச்சாண்டி தாக்கல் செய்த வழக்கை தவிர, இதர வழக்குகளில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.
வரும் 2 நவம்பர் அன்று நீதிபதி ரவிச்சந்திர பாபு தலைமை நீதிபதிக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்குகளை மாற்ற பரிந்துரைத்தாரேயானால், தலைமை நீதிபதி 15 நாட்களிலோ, 20 நாட்களிலோ மூன்று நீதிபதிகள் அமர்வை அறிவிப்பார்.   அதன் பிறகு, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோருவதற்கான வாய்ப்பு இல்லை.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு என்பதால், வழக்குகளை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் விசாரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.   எடப்பாடி தரப்பு இதை தாமதப்படுத்த முயற்சிகள் எடுக்கத்தான் செய்யும்.  ஆனால் மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கை விரைவாக விசாரிப்பதற்காக அவகாசத்தை மறுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
விசாரணை முடிந்து, தை மாதம் தமிழகத்துக்கான விடியல் பிறப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.  அதன் பிறகு, எடப்பாடி தரப்பு உச்சநீதிமன்றம் செல்வார்கள்.  அங்கே என்ன நடக்கும் என்பதை சொல்ல இயலாது.
மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யாமல், ஒரே நீதிபதி இதை விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  ஒரு வேளை அவர் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று உத்தரவிட்டால், எடப்பாடி தரப்பு அதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல் முறையீடு செய்யும்.   அங்கே மனு, பதில் மனு, பதில் பதில் மனு ஆகியவற்றுக்கு 4 மாதங்களாவது ஆகும்.  அதன் பிறகு இந்த வழக்குகளில் முடிவு வருவதற்கு, அடுத்த ஆண்டு ஜுலை ஆகி விடும்.  அதன் பிறகு உச்சநீதிமன்றம் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஆலம்பூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சம்பத் குமார் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.  சபாநாயகர், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்ற கேள்வியோடு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.   இந்த மனு செப்டம்பர் 23 அன்று விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாகவும், அரசியல் சாசன அமர்வை அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிப்பதாகவும் கூறினார்.  நவம்பர் முதல் வாரம் வரப் போகிறது.
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்ரபாணி தொடுத்த வழக்கு, பன்னீர் அணியை வெகுவாகவே கலக்கியது.   வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டினால் அது கழுத்தை நெறிக்கும் என்பதை உணர்ந்தவர்கள், எம்எல்ஏ செம்மலை பெயரில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்கள்.   சபாநாயகரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆந்திர எம்எல்ஏ சம்பத் குமார் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அந்த வழக்கில் வழங்கப்பட உள்ள தீர்ப்பு சென்னையில் சக்ரபாணி தொடர்ந்துள்ள வழக்கை பாதிக்கும்.  ஆகையால், சக்ரபாணி தொடுத்த வழக்கை மட்டும் சென்னை உயர்நீதின்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு மனுவை இரண்டு வாரங்களுக்கு முன் தாக்கல் செய்தார்.   அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் 20 அக்டோபர் அன்று முறையிட்டிருக்க வேண்டும்.  ஆனால் செய்யவில்லை.  இதனால், வரும் 2 நவம்பர் அன்று இந்த வழக்குகள் அனைத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வர இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும், செய்தித்தாள் படிக்கிறார்கள்.  தொலைக்காட்சிகள் பார்க்கிறார்கள்.  தமிழகத்தில் ஆட்சி என்ற பெயரில் நடக்கும் அவலங்களையும் பார்க்கிறார்கள்.  ஜனநாயகத்தின் மாண்பை காக்கவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை நிலை நாட்டவும் வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.  அவர்கள் செய்யும் ஒவ்வொரு நாள் தாமதமும், தமிழகத்தில் குதிரை பேரங்கள் தொடரவும், தகுதியில்லாத இந்த ஆட்சியின் அமைச்சர்கள் கொள்ளையடிக்கவும் வழிவகை செய்வதோடு மட்டுமல்ல.  அரசியல் சாசன சட்டம், அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
இதை தடுத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டிய கடமை நீதிபதிகளுக்கு உண்டு.  காலத்தின் அருமை கருதி விரைவாக முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம்.  www.savukkuonline.com/

கருத்துகள் இல்லை: