வியாழன், 2 நவம்பர், 2017

ஏரிக்கரைகளை உடைத்தால் நடவடிக்கை!


ஏரிக்கரைகளை உடைத்தால் நடவடிக்கை!
மின்னாம்பலம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிக்கரைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை பெய்துவருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. கனமழையால் பல ஏரிகள் நிரம்பிவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 67 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அந்த மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் 18.6 அடியாக உயர்ந்துள்ளது. நந்திவரம், சோமங்கலம், ஒரட்டூர், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட 67 ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 912 ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு உள்ளதாகப் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஏரிக்கரைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தொடர்மழை காரணமாக தாம்பரம் அஞ்சுகம் நகரில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால், 500க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: