திங்கள், 30 அக்டோபர், 2017

ஒரே நாள் மழையில் சாலைகளில் நீர் தேங்கிய அவலம் ... ஸ்டாலின் !

tamilthehindu :சென்னையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தேங்கிய மழைநீர் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (30-10-2017) சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒருவாரத்துக்கு முன்பாகவே எனது அறிக்கையை வெளியிட்டு, தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். வானிலை ஆராய்ச்சி மையம் பருவமழை குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது, எனவே, 'குதிரை பேர' ஆட்சி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கையும் வைத்திருந்தேன்.

ஆனால், நான் இதை அரசியலாக்குவதாக சொல்லி, வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான பிரச்சாரம் செய்தார்கள். எனவே, அடுத்த நாளே நான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று, அங்கிருக்கக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் நேரில் பார்த்து, மழை தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்த கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்து, குப்பைகளை அகற்ற வேண்டும், ஓரிரு நாட்களில் இந்தப் பணிகளை அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ளாவிட்டால், திமுகவினர் தங்களால் முடிந்தவரையில் அந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று சொல்லி இருந்தேன்.
நான் பார்த்துவிட்டு வந்தபிறகு, அந்தப் பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு சீர்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நேற்றைய தினம் வந்திருக்கிறது. இதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, அந்தப் பகுதியில் மட்டுமல்ல, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்னைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அங்கெல்லாம் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஈடுபட்டிருந்தால் ஒருநாள் மழைக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது" எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: