திங்கள், 30 அக்டோபர், 2017

சிதைக்கப்படும் தஞ்சைப் பெரியகோயில்!

விகடன் வெ.நீலகண்டன், கே.குணசீலன்  ;கட்டுமானங்கள்... ஆழ்துளைக் கிணறு... வழிபாட்டு முறை மாற்றம்!
உலக கட்டடக்கலை நிபுணர்களையெல்லாம் தலை உயர்த்திப் பார்க்கவைத்து, வியப்பில் ஆழ்த்துகிறது தஞ்சைப் பெரிய கோயில். இதன் சதய விழா, வரும் 29, 30-ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது.
ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரியகோயிலின் வழிபாட்டுமுறைகள் திட்டமிட்டு மாற்றப்படுவதாகவும், கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுவதாகவும் அதிர்ச்சி கிளப்புகிறார்கள் தொன்ம  கட்டடக்கலை நிபுணர்கள்.
கோயில் கட்டடக் கலைஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன், “தஞ்சைப் பெரியகோயில், பழந்தமிழர்களின் கட்டுமானத் திறனுக்கும், வழிபாட்டு முறைகளுக்கும் சான்றாக மிஞ்சியிருக்கும் அடையாளம். இந்த அடையாளத்தை அழித்துவிட்டால் தமிழர்கள், பெருமை பேச முடியாது என நினைக்கிறார்கள்.இக்கோயிலை வலுவிழக்கச் செய்வதற்கான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. 2010-ல் பெரிய கோயில் விமானத்தின் மிக அருகில், 350 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டியிருக்கிறார்கள். 1000 ஆண்டுகால  உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு கோயிலின், விமானத்திலிருந்து 100 அடிக்குள் ராட்சத எந்திரத்தை வைத்து 350 அடி ஆழத்தில் போர் போடுவது எவ்வளவு விபரீதம்?
ஆழ்துளைக் கிணற்றுக்கான வேலை நடந்தபோதே, இங்கிருந்த தொல்பொருள் துறை அதிகாரி சத்யபாமா பத்ரிநாத்திடம் விசாரித்தோம். மழுப்பலாகப் பதில் சொன்னார். அப்போது தொல்பொருள் துறை இயக்குநராக இருந்த தயாளனிடம் பேசியபோது, ‘தஞ்சை பெரிய கோயிலில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முறைப்படி யாரும் அனுமதி வாங்கவில்லை. நீங்கள் தாராளமாக போலீஸில் புகார் செய்யலாம்’ என்றார். அதன்பிறகு தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக்குழுவினர் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அதற்குள் கிணறு தோண்டும் வேலை  முடிந்து  குழாயை இறக்கிவிட்டார்கள். நீதிமன்றம், அந்தக் கிணற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அப்படியே குழாய் இறக்கிய நிலையில் அந்தக் கிணறு இருக்கிறது. இன்னும் மூடப்படவில்லை.

போர்வெல் போடப்பட்டபோது, கீழே இருந்து தூய மணல் மட்டுமே வெளிப்பட்டது. கோயிலைச் சுற்றி எல்லா இடங்களிலும் சுக்கான் பாறைகள். இங்கு மணல் எப்படி வந்தது என்று ஆய்வு செய்தபோதுதான், பெரிய கோயிலின் கட்டுமான நுட்பமே புரிந்தது. பூமியின் அச்சு சாய்வதைக் கருத்தில்கொண்டு, இயற்கையாக கோயில் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் வகையில் தலையாட்டி பொம்மையின் வடிவமைப்பில் அமைத்திருக்கிறார்கள். பாறைக்கு நடுவில் தொட்டி போன்ற அமைப்பை உருவாக்கி, 350 அடி ஆழத்துக்கு மணலைக் கொட்டி அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் கட்டுமானத்துக்கு மிக அருகில்தான், இப்போது ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார்கள்.

இதுமட்டுமல்ல... கோயில் கருவறையையொட்டி இரட்டைச் சுவர்கள் உண்டு. ஒரு சுவரில் ஓவியங்களும், இரண்டாவது சுவரில் கரண சிற்பங்களும் உள்ளன. மூன்றாவதாக ஒரு இடைவெளி இருக்கிறது. இதுவரை யாரும் நுழைந்ததில்லை. அதில் நுழைவதற்கு இப்போது புதிதாக ஒரு பாதையை உருவாக்குகிறார்கள். பராமரிப்புப் பணிக்காக நுழைவதென்றால்,  கயிறு மூலமாக தொழிலாளர்கள் உள்ளே போய் வேலை செய்யலாம். ஆனால், சுவரை உடைத்து ஆறு அடி இரும்புக் குழாய்களைச் சொருகி, பலகை போட்டு வசதியாக ஒரு பாதையை அமைக்கிறார்கள். அது யாருக்கான பாதை என்பதுதான் இப்போதைய கேள்வி. கோயிலின் கட்டுமானத்தைப் பாதிக்கும் வகையில் இப்படியான வேலைகளைச் செய்ய யார் இவர்களுக்கு அனுமதி அளித்தது?

பெரிய கோயிலின் விமானம் என்பது, இருகாற்படையில் தொடங்கி ஒருகாற்படை நுட்பத்தில் கட்டப்பட்டது. மேலே செல்லச்செல்ல எடை குறைந்த ஒற்றைக்கல்லைப் பயன்படுத்திக் கட்டியிருக்கிறார்கள். இப்படிச் சுவர்களைச் சிதைக்கும்போது மொத்தக் கட்டுமானமும் ஆட்டம்கண்டுவிடும். வழிபாட்டு முறைகளையும் மாற்றியிருக்கிறார்கள். ராஜராஜன் காலத்தில் வாராகி சிலை இந்தக் கோயிலில் இல்லை. பிற்காலத்தில் அமைக்கப்பட்ட அந்த அம்மனுக்கு அமாவாசை நாள்களில் இப்போது சண்டி ஹோமம் செய்கிறார்கள்’’ என்றார். தஞ்சைப் பெரிய கோயில் தொல்பொருள் துறை பராமரிப்பாளர் சந்திரசேகரிடம் விளக்கம் கேட்டோம். “1000 ஆண்டுகள் கடந்து எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கி நிற்கிற இந்தக் கோயிலில், ஆறு அங்குல ஆழ்துளைக் கிணறு தோண்டுவதால் என்ன பாதிப்பு வந்துவிடும் எனத் தெரியவில்லை.கோயிலுக்குள் நீங்கள் சொல்வதுபோல எந்தக் கட்டுமான வேலையும் நடக்கவில்லை” என்றார்.

அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். “வாராகி சிலை நெடுங்காலமாக அங்கே இருக்கிறது. வழக்கமாக நடக்கிற வழிபாடுகள் மட்டுமே செய்யப்படுகின்றன. காரிய சடங்குகள் எதையும் செய்வதில்லை. முறைப்படி என்னென்ன வழிபாடுகள் உண்டோ, அவையெல்லாம் முறையாகச் செய்யப்படுகின்றன” என்கிறார்கள்.

‘‘கோயில் யானை இறந்து சில ஆண்டுகளாகி விட்டன. வேறு யானை வாங்கித்தர பக்தர்கள் தயாராக இருக்கிறார்கள். குடமுழுக்கு நடத்தப்பட்டால், அதற்கான நிதியில் சிதைவடைந்த பகுதிகளைப் புனரமைப்பு செய்ய முடியும்’’ என்கிறார்கள் பக்தர்கள்.

நம் தொன்ம அடையாளமாக இருக்கும் பெரிய கோயில்மீது சற்று கவனம் செலுத்துங்கள் முதல்வரே.< வெ.நீலகண்டன்
படங்கள்: கே.குணசீலன்</

கருத்துகள் இல்லை: