புதன், 3 மே, 2017

ஹரியானாவிலும் பசுக்களுக்கு ஆதார் அட்டை .. உபியை தொடர்ந்து .. இனி பசுக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு?

அரியானாவில் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலைகளில் பசுக்களை சாலைகளில் நடமாடவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்று அரியானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பசுக்களைப் பாதுகாக்க பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ‘பசுக்களை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்று அரியானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியானா மாநிலத்தில், மனோகர்லால் கட்டா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நேற்று முன்தினம் (மே 1ஆம் தேதி) நடைபெற்றபோது, முதல்வர் மனோகர்லால் கட்டா பேசுகையில், “அரியானாவில் சாலைகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. குறிப்பாக பசுக்கள் ரோடுகளில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பசுக்கள் வளர்ப்பில் போதிய கவனிப்பின்றி இருந்தால் உரிமையாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வங்காள தேச எல்லையில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று முதல்வர் கூறியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: