செவ்வாய், 2 மே, 2017

தமிழக மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அரசுக்கு வழங்க வேண்டும் .. உயர்நீதிமன்றம் ..

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் 50சதவிகித இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. By: Mayura Akilan
சென்னை: மருத்துவ மேற்படிப்பில் 50சதவிகித இடங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.டி., எம்எஸ் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தருவதில்லை என தொடரப்பட்ட வழக்கில் தனியார் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. மேலும் மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற சேவை செய்யும் மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 789 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 15 பிரிவுகளில் 396 மருத்துவ பட்டய மேற்படிப்புகளும், 8 பிரிவுகளில் 40 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1205 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழகம் உருவாக்கிய விதிகளைக் காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி அனைத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களும் வெளியாட்களைக் கொண்டு தான் நிரப்பப்படும் என்றும், அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாது என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கிராமப்புற மருத்துவ சேவைக்காக வழங்கப்படுகிற இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதால், வருங்காலத்தில் கிராமப்புற மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் என்று தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 14வது நாளாக இன்று மே 2ஆம் தேதியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 8ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்பு படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் தனியார் கல்லூரிகள் அவ்வாறு ஒதுக்குவதில்லை எனக் கூறி, அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற அரசுக்கு உத்தரவிட கோரி நாமக்கல்லை சேர்ந்த் டாக்டர் காமராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கடந்த 2000ம் ஆண்டு முதல் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து மாநில அரசு பெற்ற மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் எவ்வளவு, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி களில் மொத்தம் எத்தனை இடங்கள் உள்ளன, அவற்றில் எத்தனை இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றுள்ளது என்பது பற்றி ஏப்ரல் 3க்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல, ஆண்டுதோறும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படுகிறதா, அவ்வாறு இடங்களை ஒதுக்காத தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படிகிறதா, இல்லை என்றால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மருத்துவ மேற்படிப்பில் 50சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை: