வியாழன், 4 மே, 2017

ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை : பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவை நாங்கள் யாருமே பார்க்கவில்லை என்று, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மே 3ஆம் தேதி மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, 'ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது உடனிருந்தவர் பன்னீர்செல்வம்தான்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தூத்துக்குடியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது நாங்கள் யாரும் அவரைப் பார்க்கமுடியாத சூழ்நிலை இருந்தது. எனவே, புகழேந்தியின் கருத்துக்கு பதிலளிக்கத் தேவையில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அறிக்கையை மட்டுமே நாங்கள் முழுவதும் நம்பினோம்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அவ்வப்போது தன்னுடைய அரசியல் காரணங்களுக்காக யாருமே சிந்திக்க முடியாத வகையில் கருத்துகள் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நான் முதல்வராக இருந்த காலத்திலேயே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்' என்று தெரிவித்தார்.
அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'புகழேந்திக்கு எல்லாம் பதில் கூற முடியாது. அவரிடம் புகைப்படமெல்லாம் எதுவும் கிடையாது' என்று தெரிவித்தார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: