திங்கள், 1 மே, 2017

பேச்சுவார்த்தை குழுவை கலைக்க பன்னீர் முடிவு? 3 மந்திரிகள் சின்னம்மா குடும்ப நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டாய்ங்களாம்


சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 அமைச்சர்கள்: பேச்சுவார்த்தை குழுவை கலைக்க ஓ.பி.எஸ். முடிவு?இரட்டை இலை சின்னத்தை மீட்க அ.தி.மு.க.வை ஒன்று இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) இறங்கினர்.அதிமுக இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியாக அதிமுக அம்மா அணியினர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தனர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அமைத்தனர். இதையடுத்து, இரு அணிகளும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சகிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 2 முக்கியமான நிபந்தனைகளை வைத்துள்ளனர்.


இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாங்கள் விதித்த 2 நிபந்தனைகளை நிறை வேற்றினால்தான் பேச்சுவார்த்தை என்று உறுதியாக கூறிவிட்டனர்.

ஓ.பி.எஸ் அணியினர் வைத்துள்ள இரண்டு நிபந்தனைகளில், ஒன்று நீதிமன்றத்திலும் இன்னொன்று தேர்தல் ஆணையத்திலும் உள்ளபோது, அவற்றை எப்படி ஏற்க முடியும். வந்தால் லாபம், வரவில்லை என்றால் கவலையில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் கட்சியினரிடையே கூறியதாக கூறப்படுகிறது. இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.

இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் 3 தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டது அதிமுகவின் இரு அணிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் நேற்று சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சசிகலாவின் கணவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைகண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏக்கள் ரெங்கசாமி, கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனால் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.;

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் கே.பி.முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கே.பி.முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவை கலைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு, மே 5ஆம் தேதி முதல் ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ள ஓ.பி.எஸ்., தனது அணியை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். சுமார் ஒரு மாதம் இந்த பயணத்தை மேற்கொள்வார் என்றும், இந்த பயணத்தின்போது முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியினர சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

இதனிடையே இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது உறுதி என்று தெரிவித்தார். சசிகலா தரப்பினரை ஒதுக்கிவிட்டு முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வருவதாக சூசகமாக கூறிய அவர், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றார்.">-ராஜவேல்<  நக்கீரன்

கருத்துகள் இல்லை: