ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பாகுபலி ! அக்மார்க் தெலுங்கு டப்பிங் படம். No doubt.,, காட்ஸில்லாவை மனிதனாகக் காட்டும் புதுவித சூப்பர்ஹீரோ படம்

Charu Nivedita · இதையே எனது பாகுபலி 2 விமர்சனமாகக் கொள்ளவும். நல்லவேளை, நான் எழுதியிருந்தால் நிறைய கெட்ட வார்த்தைகள் சேர்த்திருப்பேன். ராஜேஷ் நல்லவர், கனவான். எனவே அதையே இங்கு கொடுக்கிறேன்.
karundhel.com :பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள் செய்வார்கள். இதுவரை அப்படித்தான் இருந்துவந்தது.
;பாஹுபலியின் முதல் பாகத்தில் இதை ராஜமௌலி உடைத்தார். ‘ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் எல்லாம் ஜுஜுபி..அந்தப்பக்கம் போயி விளையாடுங்கடா.. நாங்கல்லாம் டிரெய்னையே விரலை அசைச்சே ரிவர்ஸ்ல ஓட வைக்கும் தெலுங்கு டைரக்டருங்கடா.. இப்பப்பார்டா என் வித்தையை’ என்று சூளுரைத்து, ராட்சத மிருகங்களான கிங் காங், காட்ஸில்லா, டைனோசார், காய்ஜு ஆகியவை மனிதவடிவில் வந்தால் என்னாகும் என்று படம் எடுத்தார். அதுதான் பாஹுபலி 1. பின்னே? கிங் காங் சைசில் உள்ள சிலையை குட்டியூண்டு ஹீரோ அசால்ட்டாகத் தாங்குவது, அருவியின் கீழிருந்து சரசர என்று ஏறி அருவியையே தாண்டுவது என்று காட்ஸில்லாவும் கிங்காங்கும் செய்ததையெல்லாம் ஹீரோவை செய்யவைத்து அட்ராசிடி செய்தார். ஹீரோ இப்படி என்றால், வில்லனோ மாமிசமலை சைசில் உள்ள எருமையை அடக்குவது என்றெல்லாம் டபிள் டைனாசாராக மாறினான்.

;இதெல்லாமே ட்ரிப்பிள், எட்டு மடங்கு, ஆயிரம் மடங்காக இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் பாஹுபலி 2. ஹீரோ அட்ராசிடீஸ் இதில் உச்சகட்டம். காட்ஸில்லாவை மனிதனாகக் காட்டும் புதுவித சூப்பர்ஹீரோ படம் இது. பக்காவான, அக்மார்க் தெலுங்கு டப்பிங் படம். No doubt.>வானில் பறக்கிறார்கள்.. மரத்தைப் பிடுங்கி அடிக்கிறார்கள்.ஐம்பதடி அறுபதடி பாலத்தை வெறும் குதிரை மேலிருந்து ஹீரோ அசால்ட்டாகத் தாண்டுகிறான்..கல்லாலான பிரம்மாண்டமான தேரில், அதைவிட பிரம்மாண்ட பிள்ளையார் சிலையை ஜாலியாக இழுத்து வீசுகிறான்.. ஏ யப்பா.. மனுசப்பயலா எதாச்சும் செய்யுங்கடா என்று அலறலாம் போலவே தோன்றியது. அட இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஆனால், மதில் சுவற்றுக்கு வெளியே இருந்து ஹீரோவின் அத்தனை படைகளும் கோட்டைக்குள் ஜிங்ஜிங் என்று குதிப்பதற்கு ஒரு ஐடியா செய்திருக்கிறார் பாருங்கள் ராஜமௌலி.. (ரயில் விரலசைவால் ரிவர்சில் போவதை நினைத்துக்கொள்ளவும்). அசல் தெலுங்கு இயக்குநர் ஒருவர், அசல் தெலுங்கு ஆடியன்சுக்காக எடுத்திருக்கும் அச்சு அசல் தெலுங்குப்படம் என்பதற்கு அதுவே போதும்’.
–இந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் நேற்று பாஹுபலி 2 பார்த்ததும் எழுதியிருந்தேன். அது எப்படி இந்தியாவின் மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றைச் செய்த ஒரு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி எழுதலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். உண்மையைச் சொன்னால், எனக்கு எந்தப் படத்தின் மீதும் வெறுப்பு இல்லை. நான் பாஹுபலியைப் பற்றி மேற்சொன்னவாறு எழுதியதற்குப் பல காரணங்கள் உண்டு. விரிவாகக் கவனிக்கலாம்.
முதலில், எனது முதல் பாக விமர்சனம் இங்கே. படிக்க விரும்புபவர்கள் படித்துக் கொள்ளலாம். முதல் பாகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், இரண்டு பாகங்களின் பின்னணியைப் பற்றியும் அதில் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்.

Baahubali 1- The Beginning- Review


Spoiler Alert.
முதலில், படத்தைப் பற்றிய என் கருத்து. முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது, படத்தின் சில காட்சிகள் எனக்குப் பிடித்தே இருந்தன. துவக்கத்தில், சிவகாமியின் ஆணைப்படி, நாட்டைச் சுற்றிவந்து, மக்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கட்டப்பாவோடு மாறுவேடத்தில் பாஹுபலி கிளம்பும் காட்சியைத் தொடர்ந்த, குந்தளநாட்டுக்கு அவன் செல்வது, அங்கே தேவசேனாவைப் பார்ப்பது, காதல் கொள்வது, பன்றி வேட்டைக்கு அவர்கள் செல்வது, காதல் காட்சிகள் ஆகிய காட்சிகள்தான் அவை. படத்துவக்கத்தில் வரும் இக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் feel சுவாரஸ்யமாக உள்ளது.  அனுஷ்காவை இவ்வளவு அழகாக எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை. போலவே படத்தின் இடைவேளைக் காட்சியும் மிகவும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. எனக்குப் பிடித்தது.
ஆனால், இவற்றுக்குப் பின்னர் வரும் காட்சிகளில் பல பிரச்னைகள் உள்ளன. அவை, கதைக்குள் போகமுடியாமல் தடுத்தன. எவை அவை என்று சொல்கிறேன்.
  1. சிவகாமிதேவி, முதல் பாகத்தில் எப்படிக் காட்டப்படுகிறார்? ஒரு நேர்மை தவறாத ராணியாக, குடிமக்கள் மேல் பாசம் உள்ள ராணியாகவே, மிகுந்த கம்பீரத்துடன் அவர் காட்டப்படுகிறார். பாஹுபலியை முதல் பாகத்தில் இளவரசனாகவும் அறிவிக்கிறார். ஆனால் இந்தப் பாகத்தில், தேவசேனாவை பாஹுபலி அழைத்துவரும் இடத்தில் எப்படிக் காட்டப்படுகிறார்? பாஹுபலியைத்தான் தேவசேனா விரும்புகிறாள்; பல்வாள் தேவனை அல்ல என்ற உண்மை புரிந்ததுமே, மகனுக்கு வாக்குக்கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால், குடிமக்களின் மேல் அத்தனை பாசம் உள்ள ராணி, அந்தக் குடிமக்களுக்கு பாஹுபலியின் மீது எத்தனை பாசம் உள்ளது என்பதை நன்றாக அறிந்த ராணி, ஒரே கணத்தில், பாஹுபலியைப் பதவி இறக்கி, பல்வாள் தேவனை இளவரசன் ஆக்கிவிடுகிறாள். ஒரு ராணி, தனது சொந்தக் காரணங்களுக்காக இப்படி இஷ்டத்துக்குப் பதவிமாற்றம் செய்துகொண்டிருக்கலாமா? செய்யலாம். ஒரு கொடுங்கோல் ராணி அப்படிச் செய்யலாம். மண்டையில் மசாலா இல்லாத ராணி அப்படி தாரா ளமாகச் செய்யலாம். ஆனால் எல்லா அம்சங்களிலும் சிறந்தவர் என்று நமக்குக் காட்டப்பட்ட சிவகாமியின் கதாபாத்திரம் இப்படிச் செய்தால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? இத்தனைக்கும் பாஹுபலி மக்களுக்காகச் சேவை செய்வதில் எந்தக் குழப்பமும் செய்யவில்லை. மக்களை நட்டாற்றில் விடவில்லை. கொஞ்சகாலம் முன்னர்தான் குந்தள தேசத்தில் நடைபெற்ற மாபெரும் படையெடுப்பைத் தோற்கடித்து, மகிழ்மதியையே காப்பாற்றியுள்ளான் வேறு (குந்தள தேசம், மகிழ்மதியின் எல்லையில் உள்ளது என்று படத்தில் சொல்லப்படுவதை மறந்துவிடவேண்டாம்).  எனவே, தான் தனது மகனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக, டமால் என்று     பாஹுபலியைப் பதவி இறக்கிவிட்டு, மகனை இளவரசனாக அவசரமாக அறிவிக்கும் சிவகாமிக்கும், முதல் பாகத்தில் அத்தனை சிறப்பாகக் காட்டப்பட்ட சிவகாமிக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? ஏன் இத்தனை பெரிய முரண் இந்தக் கதாபாத்திரத்தில்? இத்தனைக்கும் இந்தப் பதவி மாற்றம் மக்களுக்காக அல்லவே அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முற்றிலும் சுயநலமான மாற்றம் இது. ஒரு  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் ஒரு லாஜிக் வேண்டாமா? இப்படித்தான் கண்டபடி ஒரு கதாபாத்திரத்தைச் சிதைப்பதா?

  1. பாஹுபலி தேவசேனாவைத் திருமணம் செய்கிறான். வில்லன் பல்வாள்தேவன், ஒன்பது மாதங்கள் சும்மாவா இருந்தான்? எந்தப் பிரச்னையும் செய்யவில்லையா? கரெக்டாகக் குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில்தான் பிரச்னை செய்வானா? அப்படியென்றால் அவன் வில்லனா இல்லை பைத்தியமா? ஏனெனில், ஒன்பதாவது மாதம்தான் பாஹுபலி மனைவியோடு அரண்மனை விட்டு வெளியேறவேண்டும். அப்போதுதான் குழந்தை பிறக்கையில் பாஹுபலியைக் கட்டப்பா கொல்ல முடியும். எனவே, நடுவே எதையும் காட்டத் தேவையில்லை. ஆடியன்ஸ்தான் நாம் எதைக் காட்டினாலும் நம்புவார்களே? பக்கா தெலுங்கு டெக்னிக். அப்படியே, பல்வாள்தேவனின் நோக்கம்தான் என்ன? நாட்டை ஆளவேண்டும். இதைத்தவிர, பாஹுபலியைப் போட்டுத்தள்ள வேண்டும். ஓகே. ஆனால் பல்வாள்தேவனைப்பற்றி எதுவுமே நமக்குத் தெரிவதில்லை. ஆங்காங்கே வருகிறான். க்ளைமேக்ஸில் சண்டை போடுகிறான். அவ்வளவே. ஒரு உறுதியான வில்லனாக இல்லாமல், சப்பை வில்லனாக மட்டுமே பல்வாள்தேவன் இருக்கிறான்.

  1. தன் மனைவியை மட்டும் இல்லாமல், போகிற, வருகிற அத்தனை பெண்களையும் கண்டபடி தடவும் ஒருவனை பாஹுபலி கொல்கிறான். கொல்வதற்கு முன்னர், அவனது விரல்களை வெட்டியதற்காக தேவசேனாவைக் கைது செய்து இதே சிவகாமிக்கு முன்னர் நிறுத்துகின்றனர். அப்போது விசாரணை நடக்கிறதா? குற்றம் சாட்டப்பட்டவனை மட்டுமே விசாரிக்கின்றனர். தேவசேனா, உண்மையைச் சொல்ல, அதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். சத்தியசந்தையாகப் போற்றப்படும் சிவகாமி கூட உண்மையைத் தீரவிசாரிக்காமல், அவசர அவசரமாக தேவசேனாவுக்கு தண்டனையே கொடுக்க நினைக்கிறாள். ஏன்? தன்னை முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்டவள் தேவசேனா என்ற காழ்ப்பினால் மட்டுமே. மறுபடியும் கேட்கிறேன். அப்படியென்றால் சிவகாமியின் கதாபாத்திரம் உண்மையில் எப்படிப்பட்டது? ஏன் கண்டபடி இந்தக் கதாபாத்திரத்தை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார்கள்? அவ்வளவு பெரிய சபையில் இதைக்கூடவா சரியாக விசாரிக்காமல் டுபாக்கூர்தனமான தீர்ப்பு வழங்குவார்கள்? இது ஏனென்றால், அரண்மனை விட்டு பாஹுபலி வெளியேற்றப்படவேண்டும் . அப்படியென்றால் என்ன செய்யலாம்? எழுது ஒரு சீனை. வெட்டு விரல்களை. யாரையும் விசாரிக்காதே. கொல்லு அவனை. அவசரமான தீர்ப்பு வழங்கு.. வெளியேற்று இருவரையும். இதற்குத்தான்.

  1. பாஹுபலி அரண்மனையை விட்டு வெளியேறியாகிவிட்டது. இதன்பின் வில்லன் பல்வாள்தேவன் என்ன செய்கிறான்? ஒருவனைத் தேர்வு செய்து, அவனிடம் தந்தை பிங்களதேவனை விட்டு, பல்வாள்தேவனைக் கொன்றால்தான் இனி பாஹுபலி நிம்மதியாக இருப்பான் என்று சொல்கிறான். அவன் ஒரு மரமண்டை (???!!) என்பதால் பல்வாள் தேவனைக் கொல்லச் செல்ல, அங்கே பல்வாள்தேவன் இதை எதிர்பார்த்து, அவனைக் கொல்கிறான். இதெல்லாம் எதற்கு? சிவகாமியிடம் இதைச் சொல்லி, பாஹுபலிதான் பல்வாள்தேவனைக் கொல்ல ஆள் அனுப்பினான் என்று சொல்லி, பாஹுபலியைக் கொல்ல ஆணை பிறப்பிக்கவேண்டுமாம் (??!!). இதில் எங்காவது லாஜிக் இருக்கிறதா? எதைச்சொன்னாலும் சிவகாமி நம்பிவிடுவாள் என்றால், முதல் பாகத்தில் பெரிய சூரி (சூரனுக்கு எதிர்ப்பதம்) போல அவளை ஏன் காண்பித்தீர்கள்? ஏனெனில் அது முதல் பாகம். அப்போது எதை வேண்டுமானாலும் சொல்வோம். இது இரண்டாவது பாகம். இதிலும் எதை வேண்டுமானாலும் சொல்வோம். நாங்கள் எதைச் சொன்னாலும் நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்ற தெலுங்கு டெக்னிக்தான். கூடவே, அந்த மரமண்டை, பாஹுபலியின் கத்தியை வைத்துக்கொண்டு இறந்தால், உடனடியாக பாஹுபலியை அழைத்து விசாரிக்காமல், முட்டாள் போல அவனைக் கொல்ல வேண்டும் என்றா சிவகாமி தீர்ப்பு சொல்வாள்? இதில் ஏதேனும் லாஜிக் உள்ளதா?

  1. பாஹுபலியைக் கொல்லவேண்டும். உடனடியாகக் கட்டப்பா வரவழைக்கப்படுகிறான். அவனிடம் சிவகாமி, போய் பாஹுபலியைக் கொல் என்று சொல்கிறாள். கட்டப்பா மறுக்கிறான். உடனே சிவகாமி சொல்வது என்ன? நீ கொல்கிறாயா நானே கொல்லட்டுமா? உடனே கட்டப்பா சம்மதித்து விடுகிறார். பாஹுபலி என்ன கசாப்புக்கடையில் இருக்கும் ஆடா யார் கொல்லலாம் என்று ஷாட் பூட் த்ரீ போட்டுப் பார்த்து ஜாலியாக முடிவுசெய்வதற்கு? நாடே போற்றும் வீரன். ஒரு முன்னாள் இளவரசனை, சேனாதிபதியை இப்படித்தான் படுமுட்டாள்தனமாகத் திட்டம் (???!!) போட்டுக் கொல்வார்கள்? இதில் துளிக்கூட எந்த லாஜிக்கும் இல்லை. இல்லவே இல்லை.

  1. சரியப்பா. கட்டப்பா ஒத்துக்கொண்டுவிட்டார். கொன்றும் விட்டார். திரும்பி வந்து பல்வாள்தேவனின் சதியை சிவகாமியிடம் சொல்கிறார். உடனே சிவகாமி உண்மையை உணர்ந்துவிடுகிறாள். அப்படிப்பட்ட கட்டப்பா, படத்தின் ஆரம்பத்திலேயே, பிங்களதேவன், தன் மனைவி சிவகாமியைக் கொல்லவேண்டும் என்று பேசுவதை ஒட்டுக்கேட்டபின்னரும் ஏன் அதை சிவகாமியிடம் சொல்லாமல் மவுன விரதம் காத்துவந்தார்? அடேய் லூசு கட்டப்பா. இதை முன்னாலேயே சிவகாமியிடம் சொல்லியிருந்தால் பல்வாள் தேவனையும் பிங்களதேவனையும் கம்பி எண்ணவைத்துக் களி தின்ன வைத்திருக்கலாமே? சிவகாமிதேவிதான் யார் எதைச் சொன்னாலும் மண்டையை மண்டையை ஆட்டும் முட்டாள் என்றுதானே இந்தப் படத்தில் ராஜமௌலி எழுதிவைத்திருக்கிறார்? பின் ஏன் சிவகாமியிடம் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லவில்லை? சொன்னால் படமே முடிந்துவிடும் என்பதால்தானே?

  1. இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். சிவகாமி, இளம் பாஹுபலியுடன் தப்பிக்கும்போது கட்டப்பா என்ன செய்கிறார்? பல்வாள் தேவனைப் பொடனியிலேயே ஒரு அடி போட்டுத் தள்ளிவிட்டுவிடுகிறார். கட்டப்பா ஒரு அடிமை. சொன்னசொல் தவறாத அடிமை. இதைக் கட்டப்பாவே ஒத்துக்கொள்ளும் வசனமும் படத்தில் உண்டு. அப்படிப்பட்ட ஒரு அடிமை, இளவரசனை அள்ளையிலேயே போடும்போது இளவரசன் என்ன செய்திருக்கவேண்டும்? கட்டப்பாவைக் கைமா செய்திருக்கவேண்டாமா? ஆனால் இதன்பின்னரும் கட்டப்பா 25 வருடங்கள் அங்கேயே சேவகம் செய்கிறார். இத்தனைக்கும் பெற்ற தாய் சிவகாமியைப் பல்வாள்தேவனே அம்புவிட்டுக் கொல்வதையும் இரண்டு முட்டைக் கண்களால் பார்க்கிறார் வேறு. அப்படியென்றால் கட்டப்பாவும் லூசுதானே? எவனாவது, தன் அன்புக்குப் பாத்திரமான இளவரசன் இறந்து, அதைவிட அன்புக்குப் பாத்திரமான அரசியைப் பெற்ற மகனே கொன்றதைப் பார்த்துக்கொண்டும் அடிமுட்டாள் போல 25 வருடங்கள் அங்கேயே வேலை செய்வானா? இது ஏன் என்றால், அப்போதுதான் மகேந்திர பாஹுபலி வருவான்.. அவனிடம் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல ஒரு வீணாகப்போன தண்டம் வேண்டும். அது கட்டப்பாவைத்தவிர வேறு யார் என்று ராஜமௌலிகாரு யோசித்து ஆஸ்கர் வெல்லும் திரைக்கதை எழுதியதால்தான் (???!!). பின்னால் ஒரு இடத்தில், ராஜமௌலி இதை சமாளிக்க ஒரு வஜனம் எழுதியிருக்கிறார் பாருங்கள் – அற்புதமான வஜனம் அது. இந்த வஜனம் ஒன்றே ஆஸ்கர் பெறும் தகுதி கொண்டது – ‘அரசி குழந்தையுடன் இறந்துவிட்டாள் என்று எண்ணிதான் இங்கேயே 25 வருடங்கள் வேலை செய்தேன்’. இதுதான் அந்த வஜனம். அட மண்டையில் மசாலா இல்லாத கட்டப்பாவே- உன் அரசியை உன் கண் முன்னரே அவள் மகன் கொன்றிருக்கிறான். அதைப் பார்த்தபின்னுமா வெட்கம் கெட்டு அங்கேயே இருந்தாய்? ஒரே ஒரு எதிர்ப்பைக் கூடக் காட்டாத நீ ஒரு வெட்டி முண்டம் வீணாகப்போன தண்டம் தானே?

  1. இத்தனை ஃப்ளாஷ்பேக்கையும் கேட்கும் ஷிவு என்ற ஜுனியர் பாஹுபலி, உடனடியாக வீரம் கொண்டு கிளம்புகிறான். ஒரு பயிற்சியும் இல்லை. ஆனால் கச்சிதமாக அம்பெய்கிறான். அந்த அம்போ, ஒரு தலையைப் பல கிலோமீட்டர்கள் carry செய்து, பல்வாள்தேவனின் மண்டையின் அருகே போடுகிறது. ஒரு sniper போல இவ்வளவு துல்லியமாக அம்பெய்தும் ஜூ.பாஹுபலி, ஒரே அம்பில் பல்வாள்தேவனை அங்கிருந்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே? படம் சீக்கிரம் முடிந்திருக்குமே?

  1. ஜூ.பாஹுபலி, கோட்டையின் வெளியே இருக்கிறான். பல்வாள்தேவன், பாஹுபலியின் அம்மா தேவசேனாவைக் கடத்திக்கொண்டு கோட்டைக்குள் போய்விட்டான். பாஹுபலி, 50-60 அடி உயரம் உள்ள கோட்டையின் வாசலை ஒரே தாண்டாகத் தாண்டி (???!!) உச்சிக்குப் போ ய்விட்டான். பல்வாள் தேவன் அம்பெய்து அவனை வீழ்த்திவிட்டான் (தனது பரம எதிரி – குழந்தையிலேயே அவனைப் போட்டுத்தள்ளவேண்டும் என்று நினை த்தவன் மீது அம்பெய்கிறான். ஆனால் காயம் மட்டுமே படுத்துகிறான். கொல்லவில்லை. ஏன்? ஏனெனில் க்ளைமேக்ஸில் கிங்காங் Vs காட்ஸில்லா சண்டையை இருவரும் போடவேண்டுமே?).  இப்போது எப்படிக் கோ ட்டைக்குள் செல்வது? சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவனைப்போலவே ராஜமௌலியும் புஜங்கள் துடிக்க அங்குமிங்கும் பார்த்தபடி யோசிக்கிறார். ஆ!! கோட்டை வாயிலைச்சுற்றிப் பனைமரங்கள் உள்ளன. ஐடியா!! பாஹுபலி ஓடிச்சென்று பனைமரத்தை வளைக்கிறான். வீரர்கள் பிடித்துக்கொள்கின்றனர். எப்படியும் 60-70 வயதாகியிருக்கும் கட்டப்பாவை இழுத்துக்கொண்டு (முதியோர் வன்கொடுமை!) வளைக்கப்பட்ட பனைமரத்தின் மீது ஏறுகிறான். இவனுடன் 3-4 வீரர்களும் ஏறுகின்றனர். உடனே என்ன செய்கிறார்கள்? பனைமரத்தை விடுகின்றனர். வளைக்கப்பட்ட பனைமரம் சொய்ங் என்று நிமிர்கிறது. அத்தனை பேரும் மதிலைத் தாண்டி உள்ளே தூக்கி எறியப்படுகின்றனர். உடனேயே வானில், பல அடி உயரத்தில் அனைவரும் கச்சிதமாக இணைந்துகொள்கின்றனர். உள்ளே எறியப்பட்டதும் அதைவிடக் கச்சிதமாக, செம்மையாக லாண்டிங் ஆகிப் போர் புரிகின்றனர். அட்டகாசம்! அற்புதம்! இதை நேரில் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும் (???!!!). விஜய் ரயிலைத் தாண்டியது, ரஜினி பலூனில் ஜம்ப் செய்து சறுக்கியது ஆகியவற்றையெல்லாம் பார்த்துச் சிரித்தவர்கள், இந்தக் காட்சிக்குப் புளகாங்கிதம் அடைவதைப் பார்க்கவேண்டுமே?

  1. நான் முதலிலேயே சொன்னதுபோல, ஒரு நடமாடும் கிங் காங் குரங்கைப்போல் பாஹுபலி ஸ்டண்ட் செய்கிறார். ஒரு மனிதனால் துளிக்கூட முடியாத பல வேலைகளை ஜாலியாகச் செய்கிறார். இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? இதைக் கொஞ்சம் கூட ராஜமௌலி எங்கேயும் விளக்கவில்லை. பாஹுபலி ஒரு ஹல்க் போல உலா வருகிறான். அவ்வளவுதான். எந்தவிதமான லாஜிக்கோ பின்னணியோ இல்லாமல் எப்படி இதை நம்புவது? (இதற்கு நான் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பருக்குக் கொடுத்த பதில் இது – ‘சிம்பிளா சொல்லணும்னா, கதாபாத்திரத்தை நம்பத்தகுந்ததா உருவாக்கணும். அந்தக் கதாபாத்திரத்துக்கு நம்பத்தகுந்த பின்னணி இருக்கணும். பாஹுபலி ஒரு மனிதன். கடவுளோ கந்தர்வனோ இல்லை. சாதாரண மனிதன் ஒருத்தன் அவ்ளோ பெரிய சிலையை எப்படி அசைக்க முடியும்? என்ன காரணம்? எந்த ஃபேண்டஸி படமா இருந்தாலும், நல்ல படமா இருந்தா இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இயல்பா உருவாக்கிருப்பாங்க. ஒருத்தன் மரத்தைப் பிடுங்கி அடிக்கிறான்னா அவனுக்கு அது எப்படிச் சாத்தியம்? எதுவுமே சொல்லாம, இஷ்டத்துக்கு ஒருத்தன் என்ன வேணா செய்யலாம்னு உருவாக்குவது ஆடியன்சை ஏமாற்றும் செயல்’). 
  2. முதல் பாகத்தில் என்ன நடந்தது? ஜூனியர் பாஹுபலி உள்ளே வரும்போது அத்தனை படைவீரர்களும் சந்தோஷப்பட்டு, பூமி அதிர வரவேற்பு கொடுக்கிறார்கள்தானே? அனைவருக்கும் பாஹுபலி மறுபடியும் வந்தது சந்தோஷம். ஆனால், இந்தப் பாகத்தில் என்ன நடக்கிறது? க்ளைமேக்ஸ் சண்டையில், அப்படி பாஹுபலியை ஆதரித்த ஒரு படைவீரன் கூட இவன் பக்கம் வரவில்லையே? அது ஏன்? ஏனென்றால் ராஜமௌலி அப்படி எடுத்துவைத்திருக்கிறார். அதனால்தான்.

மேலே நான் சொன்ன காரணங்களை நன்றாக ஒருமுறை படித்துப் பாருங்கள். உலகம் முழுக்கவே பல ஃபேண்டஸிக்கள் வெளியாகி உள்ளன. அவற்றில், தரமான ஃபேண்டஸிக்கள், ஆடியன்ஸின் புத்திசாலித்தனத்தை அறவே மதிக்காமல், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடியன்ஸ் வளைவார்கள் என்று ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்காது. மாறாக, ஆடியன்ஸைப் பரிவுடன் நண்பர்களாகவே நடத்தும். பாஹுபலி அப்படிப்பட்ட ஃபேண்டஸி அல்ல. அல்லவே அல்ல.
நான் சொல்லும் விஷயம் எளிமையானது. உங்களுக்குப் பாஹுபலி இத்தனை அபத்தங்களையும் தாண்டிப் பிடித்திருக்கலாம். தவறே இல்லை. ஆனால், அதில் இந்த அபத்தங்கள் உள்ளன என்பதைக் கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் என்பதையே நான் சொல்கிறேன். ராஜமௌலி ஒரு அக்மார்க் தெலுங்கு இயக்குநர். தெலுங்கு ஆடியன்ஸுக்காக இத்தனை ஓட்டைகள் உள்ள ஒரு திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் என்பது என் கருத்து. அதை நான் படம் பிடித்திருக்கிறது என்று சொல்பவர்கள் மேல் திணிக்கவே இல்லை. அதேபோல், இதுதான் இந்தியாவின் தலைசிறந்த காவியம்.. ஹா ஹூ என்று உணர்ச்சிவசப்பட்ட கருத்துகளை என் மீது திணீக்காதீர்கள். இந்தப் பதிவில் நான் சொல்லியிருப்பவைகளை ஒருமுறையேனும் படித்து, யோசித்துப் பாருங்கள்.
வெறும் ஸிஜியை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு படத்தை – சொல்லப்பட்ட கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு வளைக்கப்பட்ட படத்தை – எப்படிக் கண்மூடித்தனமாகப் பாராட்ட முடியும்?

கருத்துகள் இல்லை: