புதன், 3 மே, 2017

உச்சநீதிமன்றம் :அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? அமைச்சர் சட்டத்துக்கும் மேலானவரா?

அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டும், இன்னும் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை, அமைச்சர் என்றால் சட்டத்துக்கும் மேலானவரா? என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவர் அமைச்சர் காமராஜ் மீது 30 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஏன் இன்னும் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறதா?. இல்லை, வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்யட்டுமா? என்று கேள்வி எழுப்பியதுடன், அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து, மே 3ஆம் தேதி (இன்று) உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ஆஜரானார். விசாரணையில், 'உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. மனுதாரர் புகார் அளித்தபின் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என்று கேட்ட நீதிபதி, அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கும் மேலானவரா? என்று தமிழக அரசுக்கு வினா எழுப்பினார்.
இதற்கு தமிழக அரசுத் தரப்பிலிருந்து, 'அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்துள்ள மனுதாரர் குமார் ஒரு மோசடிதாரர்' என்று வாதம் செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி, 'மனுதாரர் மோசடியாளர் என்றால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவும், வழக்கு பற்றி வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கை ஒத்திவைத்தார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: