புதன், 3 மே, 2017

நீதிபதி கர்ணன் அதிரடி : 7 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடி ஆணை ,, ஜாமீனில் வெளிவரமுடியாது

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளுக்கு ஜாமீனில் வர இயலாத பிடி வாரண்ட் - நீதிபதி கர்ணன்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்பட 7 நீதிபதிகளுக்கு ஜாமீனில் வர இயலாத பிடி வாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததுடன் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்து விட்டார். இதனால் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகு நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் காரசார வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். எந்த உத்தரவையும் ஏற்க மாட்டேன் என்று மறுத்தார். இதையடுத்து நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டி வரும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீதிபதி கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து வருகிற 5-ந்தேதி மருத்துவ குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும், இந்த மருத்துவ குழுவை கொல்கத்தா அரசு மருத்துவமனை நியமித்து தனது அறிக்கையை மே 8-ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து தனக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட 7 நீதிபதிகளுக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என பதில் உத்தரவை கர்ணன் பிறப்பித்தார். இந்நிலையில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஜேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடி வாரண்டை இன்று அவர் பிறப்பித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் நீதிபதி கர்ணண் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருவதால் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: