முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக தேறி வந்தபோது திடீரென்று அவர் மரணம் அடைந்தது எப்படி? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை இப்படி திடீரென முடிவுக்கு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
68 வயதே ஆன நிலையில் அவர் காலமானது
தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் மட்டுமின்றி, உலகம்
முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியாகவும், சொல்ல
முடியாத துயரமாகவும் மாறியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்று வந்ததில் இருந்தே அவர் உடல் நலம் குன்றிதான் காணப்பட்டார்.
என்றாலும் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில்
மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் அவரிடம் புத்துணர்ச்சி
ஏற்பட தொடங்கி இருந்தது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம்
22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டபோது கூட அவர் குணமாகி வீடு திரும்பி விடுவார் என்ற
எண்ணம்தான் மக்கள் மனதில் நிலவியது.
அதை உறுதிபடுத்துவது போல உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை காரணமாக அவர் உடல் நலம் தேறி வந்தார்.
அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு தோன்றிய நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்துள்ளார்.
ஒரே நாளில் எப்படி இந்த தலைகீழ் மாற்றம்
ஏற்பட்டது என்பது அ.தி.மு.க.வினரிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும்
ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
எப்படி இந்த சோக முடிவு ஏற்பட்டது? 2 நாட்களுக்குப் பிறகு தற்போது அது பற்றிய தகவல்கள் வெளியில் வந்துள்ளன.
செப்டம்பர் 22-ந்தேதி இரவு ஜெயலலிதாவுக்கு
அதிக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை
பயப்படும்படியாக இருந்தது. என்றாலும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரை சற்று தேற வைத்தனர்.
அவரது சுவாசம் சீரான நிலையில், டெல்லி
எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம், நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு
டாக்டர்கள் வந்து சிகிச்சையை மேம்படுத்தினார்கள். இதனால் அவர் உடல் நலம்
சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றது.
இந்த நிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
பீலே மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்கள் அளித்த சிகிச்சை ஜெயலலிதாவை
நன்றாக குணம் அடைய செய்தது.
நவம்பர் 19-ந்தேதி ஜெயலலிதா தீவிர
சிகிச்சைப் பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர்
நர்சுகளிடம் சிரித்து பேசும் அளவுக்கு நலம் பெற்றார்.
உப்புமா, பொங்கல் உணவு வகைகளை வழக்கம் போல
சாப்பிடத் தொடங்கி இருந்தார். இதைத் தொடர்ந்தே முதல்-அமைச்சர் ஜெயலலிதா
குணமாகி விட்டார். அவர் வீடு திரும்புவதை அவரே முடிவு செய்வார் என்று
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறி வந்தார்.
இதய பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை
ஆகியவை காரணமாக ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம்
டாக்டர்கள் மத்தியில் இருந்தது.
எனவே தான் டாக்டர்கள் 3 குழுவாக இருந்து 24 மணி நேரமும் ஜெயலலிதா உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.
கடந்த மாத இறுதியில் ஜெயலலிதா உடல்நிலை
மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்ததும், இனி அவருக்கு மாரடைப்பு அபாயம் வர
வாய்ப்பு இல்லை என்றே டாக்டர்கள் கருதினார்கள்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட்டும் இதயக் கோளாறு நீங்கும் பட்சத்தில், இனி ஜெயலலிதா வீடு திரும்பலாம் என்று திருப்தி தெரிவித்திருந்தார்.
எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்த
நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) மாலை 4 மணிக்கு ஜெயலலிதா
தொலைக்காட்சி தொடர் ஒன்றின் பதிவை டி.வி.யில் போட்டு பார்த்துக்
கொண்டிருந்தார்.
4.10 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு
டாக்டர்கள் சென்று வழக்கமாக செய்யும் உடல் நல சோதனையை செய்தனர். அப்போது
அவர் சுவாசத்தில் மாறுபாடு ஏற்படத் தொடங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
கார்டியாக் அரஸ்ட் எனும் இதயம் செயல் இழப்பு, ஜெயலலிதாவுக்கு ஏற்படத் தொடங்கி இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஜெயலலிதா மீண்டும் தீவிர
சிகிச்சைப் பிரிவுக்குள் கொண்டு செல்லப்பட்டார். எல்லா பிரிவு சிகிச்சை
நிபுணர்களும் அங்கு வந்து விட்டனர்.
ஜெயலலிதாவின் இதயத் துடிப்பை
சீராக்குவதற்காக “எக்மோ” கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு
அந்தந்த பிரிவுக்குரிய டாக்டர்களும் தங்கள் சிகிச்சையை
தீவிரப்படுத்தினார்கள்.
சுமார் 3 மணி நேரம் டாக்டர்கள் குழு போராடி ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்கினார்கள்.
4-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவில் கூட
ஜெயலலிதாவை காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை அப்பல்லோ ஆஸ்பத்திரி
டாக்டர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் மறுநாள் (5-ந் தேதி) திங்கட்கிழமை காலை ஜெயலலிதா உடல்நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் திடீரென ஏற்பட்டது.
அன்று காலை டாக்டர்கள் அளித்த எந்த சிகிச்சைக்கும் ஜெயலலிதா உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
முதன் முறையாக ஜெயலலிதா உடல்நலம்
விஷயத்தில் டாக்டர்கள் நம்பிக்கை இழந்தனர். இதைத் தொடர்ந்தே அன்று மதியம்
12 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஜெயலலிதா உடல்நிலை
கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எக்மோ கருவிகள் மூலம் செய்யப்பட்ட கடைசி
சிகிச்சை தோல்வியை தழுவிய நிலையில் அன்று பிற்பகல் ஜெயலலிதா உடல் நிலை
மேலும் மோசமானது. அடுத்த சில மணி நேரத்துக்குள் அவர் உயிர் பிரிந்து
விட்டது.
கடைசி வரை டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை.
நன்றாக குணமாகி வந்த அவருக்கு 4-ந்தேதி
மாலை திடீரென கார்டியாக் அரஸ்ட் எப்படி வந்தது என்பதை டாக்டர்களாலேயே
புரிந்து கொள்ள இயலவில்லை.
டாக்டர் பிரதாப் ரெட்டி இதுபற்றி கூறுகையில், “ஜெயலலிதாவை காப்பாற்றி விட்டோம்.
மெடிக்கல் மிராக்கிள் நடந்து விட்டது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம். எப்படி அவரை இழந்தோம் என்றே தெரியவில்லை” என்றார்.
டாக்டர் பிரீதா ரெட்டி கூறுகையில்,
“விதியை மாற்றி விட்டோம் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அது எங்கள்
கைகளில் இல்லை. விதி வலியது என்பது பிறகே தெரிந்தது” என்றார். மாலைமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக