நான் உங்களுக்கு கூறுகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கொலைகாரர்கள் வெள்ளையர்கள் தான்”“நான் குற்றஞ் சுமத்துகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கடத்தல்காரர்கள் வெள்ளையர்கள் தான்
அந்த
மனிதர்கள் போகாத ஓரிடமும் இந்த உலகத்தில் இல்லை. எல்லா இடங்களுக்கும்
சென்று அவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும்
கொண்டு வருவதாக. ஆனால் அவர்கள் மிக மோசமான நாசகாரர்கள். அடிமை வணிகம்
செய்பவர்களும், கொள்ளைக்காரர்களும் வெள்ளையர்கள் தான். அவர்கள் இதனை மறுக்க
முடியாதபடி வாழும் சாட்சியங்களாக நாங்கள் உள்ளோம். நீ அமெரிக்கன் இல்லை.
அமெரிக்கனால் பழிவாங்கப்பட்டவன். நீயும் நானுமே அதற்குச் சாட்சிகள்.” இந்த
வரிகளுடன் காட்சிப் படிமங்களினூடு செல்லும் ஸ்பைக் லீயின் கமெரா ஒரு
கறுப்பு இளைஞனை வெள்ளையினப் பொலிஸ் அடித்து நொறுக்குவதையும் அதன் காரணமாக
பற்றியெரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி பொசுங்கிப் போவதனையும், கொழுந்து
விட்டெரியும் அந்த நெருப்பு எக்ஸ் எனும் எழுத்தாக உருமாறுவதனூடாகவும்
வாழும் சாட்சியாக இருந்து தனது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி
விட்டுப் போன மாபெரும் கறுப்பினத் தலைவனான மல்கம் எக்ஸை உயிர்பெற
வைக்கின்றது.

அலெக்ஸ்
ஹெலி எழுதிய மல்கம் எக்ஸின் வாழ்க்கைக் காவியத்தைப் திரைக்காவியமாக
எமக்குத் தந்திருக்கிறார் ஸ்பைக் லீ. ஸ்பைக் லீ 1957ஆம் ஆண்டு
அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பிறந்த ஒரு கறுப்பினத்தவர். கலைத்துறையில்
முதுமாணிப் பட்டத்தைப் பெற்றவர். திரைப்படக்கலை சம்பந்தமாகவும் கற்றுத்
தேர்ச்சி பெற்றவர். 15க்கு மேற்பட்ட சிறந்த திரைப்படங்களையும், இசை
அல்பங்களையும், குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அது
மட்டுமில்லாமல் அவர் ஒரு எழுத்தாளரும் கூட. இயக்குனர், தயாரிப்பாளர்,
இசையமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல பரிமாணங்களில் பிரகாசிப்பவர்
ஸ்பைக் லீ. இவருடைய பல படங்கள் கறுப்பர்கள் மீதான வெள்ளையர்களின் இனவெறி
மற்றும் நிறவெறி பற்றியே பேசுகின்றன. இவருடைய மிக முக்கியமான
திரைப்படங்களிலொன்று மல்கம் எக்ஸ். இத்திரைப்படத்தின் மூலம் பலத்த
சர்ச்சைகளுக்கும் ஆளானவர். அந்த வகையில் மல்கம் எக்ஸ் திரைப்படம் மூலம்
கறுப்பர்களை மட்டுமல்லாமல் எம்மையும் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்க்க
வைக்கிறார் ஸ்பைக் லீ.
>திரைப்படம்
மல்கம் எக்ஸின் இளம்பராய வாழ்க்கையுடன் ஆரம்பிக்கிறது. இதில் இளம் பராய
மல்கம் எக்ஸின் தோழனாக ஸ்பைக் லீயே நடித்துள்ளார். கறுப்பின மக்களின்
விடுதலைக்காகப் போராடிய மல்கமின் தந்தை ஏர்ல் லிட்டில் ‘‘கு க்ளக்ஸ்
க்ளன்’’ எனும் வெள்ளையர்களின் கொலைவெறிப் படையால் கொலை செய்யப்படுகிறார்.
சிறந்த ஆளுமையும், சிறந்த பேச்சுத் திறமையும், மார்க்கஸ் கார்வியின்
‘‘உலகெங்கும் உள்ள கறுப்பர்கள் அனைவரும் ஆபிரிக்காவுக்குத் திரும்ப
வேண்டும்;’’ என்ற கொள்கைக்கான உலக நீக்ரோ முன்னேற்றக் கழக அமைப்பின் ஒமாஹா
பகுதியின் தலைவராகவும் இருந்த ஏர்ல் லிட்டில் மல்கமுக்கு ஆறு வயதாக
இருந்தபோதே படுகொலை செய்யப்படுகிறார். 

>மல்கமின்
சிறுவயதில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இளைஞனாகவுள்ள
மல்கம் நினைத்துப் பார்ப்பது போல் பின்னோக்கி நகரும் காட்சியின் உத்தியில்
திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறார் லீ.
>ஒரு
சந்தர்ப்பத்தில் பாடசாலையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களாக, நீங்கள்
அனைவரும் எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேள்வி
கேட்கிறார். அதற்கு வெள்ளையின மாணவர்கள் கூறும் பதிலால் திருப்தியடையும்
ஆசிரியர், மல்கமைப் பார்த்து நீ என்னவாக வர விரும்புகிறாய் எனக் கேட்க,
நான் ஒரு வழக்கறிஞராக வர விரும்புகிறேன் எனக் கூறும் மல்கமை நோக்கிய
ஆசிரியர் வெறுப்பும், சினமும் கொள்கிறார். அதனைக் காட்டிக் கொள்ளாதவாறு "நீ
ஒரு தச்சுத் தொழிலாளியாக வரலாமே'' என்று கூறுகிறார். இந்தப் பதில்
மல்கமின் பிஞ்சு மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களிலேயே
திறமைசாலியான மாணவனாக இருந்தும் கறுப்பன் என்ற காரணத்திற்காக அவன்
ஒதுக்கப்படுகிறான். பிஞ்சு மனங்களிலே நஞ்சு விதைக்கப்படுகிறது. கறுப்பு
மாணவன் என்ற காரணத்திற்காக அவனது விளையாட்டு ஆர்வமும் தடைப்பட்டுப்
போகிறது.

>சிறை செல்லும் மல்கம் வெள்ளைக் காவலர்களிடம் காட்டும் எதிர்ப்பின் காரணமாக பல சித்திரவதைகளை அனுபவிக்கிறார். எவ்வளவுதான் உல்லாசமாகத் திரிந்தாலும் அவ்வப்போது அவரது வெள்ளையர்கள் மீதான எதிர்ப்பும் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. சிறை மல்கமுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. சிறையில் சந்திக்கும் பெய்னிஸ் எனும் சக கைதியினால் கறுப்பின அடையாளத்தைப் பற்றியும், ‘நேஷன் ஒவ் இஸ்லாம்’ எனும் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவரான இலிஜா மொஹமட்டைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார். வெள்ளையர் பற்றிய மல்கமின் மாயையைத் தகர்த்து இலிஜா மொஹமட்டால் மட்டும் தான் உன்னையும், உனது மனதையும் வெளிக் கொண்டு வர முடியும் எனக் கூறுகிறான் பெய்னிஸ். கறுப்பர்கள் தான் உன்னதமானவர்கள். கடவுள் கூடக் கறுப்புத்தான். வெள்ளைக்காரர்கள் தான் கூறுகிறார்கள் ஜீஸஸ் வெள்ளை உடம்பும், நீலக் கண்களும், பொன்னிறத் தலைமயிரும் உடையவர் என்று. அதை நாமும் நம்புகிறோம். ஆனால் எல்லாமே கறுப்புத்தான், நாங்கள் தான் உண்மையான மனிதர்கள், இந்த உலகத்தில் முதன் முதலில் பிறந்தவர்கள் கறுப்பர்கள் தான் எனக் கறுப்பர்களின் பலம், ஆளுமை என்பவற்றைப் புரிய வைக்கின்றான். இந்தச் சம்பவமே மல்கமின் வாழ்வை இன்னொரு திசைக்கு இட்டுச் செல்ல வழி சமைக்கிறது. மேலதிகமாக வாசிக்கவும் அதனால் யோசிக்கவும் தூண்டுகிறது.
மல்கம் எக்ஸின் புகழ் கூடக் கூட அமைப்பிற்குள்ளேயே மல்கமிற்கு எதிரிகள் உருவாகத் தொடங்குகிறார்கள். மல்கமின் ஆளுமைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாக மாறுகிறார்கள். சிறையில் மல்கமுக்கு நேஷன் ஒப் இஸ்லாமை அறிமுகப்படுத்தும் பெய்னிஸ்ஸே ஒரு கட்டத்தில் மல்கம் மீது பொறாமை கொள்கின்றான். அவனுக்கு மல்கமின் வளர்ச்சி தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் மல்கமோ பெய்னிஸ் தனக்கு எதிரியாக மாறுவான் என நம்ப முடியாதவராக இருக்கிறார். பெற்றிக்கும் அவருக்குமான உரையாடலில் மல்கம் எவ்வாறு சகோதரர் பெய்னிஸை நம்பினார் என்பதை தெளிவுபடுத்துகிறார் லீ. சகோரதரர் பெய்னிஸ்தான் சிறைக்குள் விலங்கைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு கௌரவத்திற்குரிய இலிஜா மொஹமட்டை அறிமுப்படுத்தியவர். எனது வாழ்க்கையைப் பத்திரப்படுத்தியவரும் அவரே, அவரால் எனக்குத் துரோகம் செய்ய முடியாதென மல்கம் பெற்றியிடம் கூறுகிறார்.



புரட்சி என்பது இரத்தம் சிந்துவது, புரட்சி என்பது சமரசமற்றது. புரட்சி என்பது தனது பாதையில் எதிர்ப்படும் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போடுவது’ என்று தான் கூறிய இந்தக் கருத்திற்கு ஏற்றவாறே இறுதிவரை தனது மக்களுக்காகப் போராடி, தனது மக்கள் முன்னாலேயே இரத்த வெள்ளத்தில் காவியமாகிப் போனான் இந்தக் கறுப்பு மனிதன்.</சரிநிகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக