ஞாயிறு, 6 மார்ச், 2016

இந்திய தூதரகத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆஜர் - காணொலி காட்சியில் சென்னை நீதிபதி விசாரணை

குற்றப் பத்திரிகையில் எந்த இடத்திலும் டக்ளஸ் தேவானந்தா மீது போலீஸார் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தபடி காணொலி காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸ்) மூலமாக விசாரணைக்கு ஆஜரானார். சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி எம்.சாந்தி, மூடிய அறையில் விசாரணை நடத்தினார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவரும், இலங்கை முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு வெடி வெடித்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் சூளைமேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு (28) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அமைந்தகரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 30 ஆண்டுகளாக சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராகாததால், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் டக்ளஸ் தேவானந்தா நேற்று காலை 9.30 மணிக்கு ஆஜரானார். வீடியோ, ஆடியோ இணைப்பு 10.45 மணிக்கு துல்லியமாக கிடைத்தது. அதன் பிறகு, சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி எம்.சாந்தி முன்பு விசாரணை தொடங்கியது. எழுந்து நின்று நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, சுமார் ஒரு மணிநேரம் இந்த விசாரணைக்கு ஆஜரானார்.
சம்பவத்தை நேரில் பார்த்த குருமூர்த்தி (60), பன்னீர்செல்வம் (48), மணி (42), வீரமுத்து (51) ஆகியோரை அரசு தரப்பு சாட்சிகளாக அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் எம்.பிரபாவதி ஆஜர்படுத்தினார். இதில் குருமூர்த்தியும், வீரமுத்துவும் டக்ளஸ் தேவானந்தாவை காணொலி காட்சி திரையில் அடையாளம் காட்டி, ‘‘இவரும், இவரது ஆதர வாளர்களும்தான் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர்.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் திருநாவுக்கரசு பலியானார்’’ என சாட்சியம் அளித் தனர். டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ராஜன், ‘‘குற்றப் பத்திரிகையில் எந்த இடத்திலும் டக்ளஸ் தேவானந்தா மீது போலீஸார் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. எனவே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றத்தை நீக்க வேண்டும்’’ என மனு தாக்கல் செய்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.பிரபா வதி, ‘‘இந்த வழக்கு தேவையின்றி 30 ஆண்டுகளாக இழுக்கடிக்கப் படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது டக்ளஸ் தேவானந்தா ஆஜராகியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 மற்றும் உடன் இணைந்த 149 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே கொலைக் குற்றத்தில் அவருக் கும் பங்கு உள்ளது. இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யப்படும்’’ என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி எம்.சாந்தி அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வெளிநாட்டு நபரிடம் தமிழகத்தில் இருந்து காணொலி காட்சி முறையில் விசாரணை நடத்தப் படுவது முதல்முறை என்பதால், நீதிமன்றத்தில் ஏராளமான செய்தியாளர்கள் திரண்டிருந்தனர். அவர்களை வெளியே அனுப்ப உத்தர விட்ட நீதிபதி, மூடிய அறைக்குள் விசாரணை நடத்தினார். போலீஸார், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், சாட்சிகள் தவிர வேறு யாரும் நீதி மன்றத்துக்குள் அனுமதிக்கவில்லை  tamil.hindu.com

கருத்துகள் இல்லை: