திங்கள், 7 மார்ச், 2016

ஜாதி மோதலில் கல்லூரி மாணவர்கள்

மதுரை: 'துரதிஷ்டவசமாக தேவையற்ற குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். ஜாதி மோதல் என்ற பெயரில், ஒருவரை துன்புறுத்தி இன்பமடையும் நோக்கில் செயல்படுகின்றனர். தேவகோட்டை கல்லுாரியில் இருந்து, 3 மாணவர்களை நீக்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் ஜன., 7ல் இரு சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பி.ஏ.,(பொருளாதாரம்) இறுதி ஆண்டு படிக்கும் மூன்று மாணவர்களை, கல்லுாரியை விட்டு முதல்வர் நீக்கினார்.மாணவர்கள், 'எங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. முதல்வரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.


நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு: மனுதாரர்கள் விளக்கம் அளிக்க, கல்லுாரி நிர்வாகம் போதிய வாய்ப்பு அளித்துள்ளது. கல்லுாரியில் ஒழுக்கம், கட்டுப்பாட்டை பேணிக்காக்க மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவனை தாக்கிய போது, மனுதாரர்கள் பிடிபட்டுள்ளனர்.'மனுதாரர்கள் கல்லுாரியில் தொடர்வது ஏற்புடையதல்ல' என நிர்வாகம் சரியான நிலைப்பாடு எடுத்துள்ளது.இவ்வாறு நடவடிக்கை எடுக்க, கல்லுாரி நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது.'சில குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, விளக்கம் பெற வேண்டிய அவசியமில்லை,' என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி, அவர்களுக்கு அனுப்பிய நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில், இதுபோன்ற ஒழுங்கீனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தொடர் பிரச்னையாக உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள, மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். துரதிஷ்டவசமாக தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஜாதி மோதல் என்ற பெயரில், ஒருவரை துன்புறுத்தி இன்பமடையும் நோக்கில் செயல்படுகின்றனர். மனுதாரர்களுக்கு கருணை காட்ட முடியாது. அவர்களை நீக்கியதற்கான காரணங்களை முதல்வர் தெரிவித்துள்ளார். இதுமாதிரி விவகாரங்களில் தலையிட்டால், கல்வி நிறுவனங்களை சுமூகமாக நடத்துவதில் சிரமம் ஏற்படும். மனுக்களை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு உத்தரவிட்டார்.   dinamalar.com

கருத்துகள் இல்லை: