சனி, 12 மார்ச், 2016

ஜெ.,வுக்கு பணத்துடன் தான் கூட்டணி: போட்டுத்தாக்கும் பழ.கருப்பையா

ஜெயலலிதாவின் ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில், இரண்டாவது கருத்து இல்லை. வலிமையான காளையால்தான், காலை ஊன்றி, நுரை தள்ளி, தலையை குனிந்து, மேட்டில் பார வண்டியை இழுக்க முடியும். ஆனால், வண்டிக்காரனும், பக்கத்தில் இருப்போரும், சக்கரத்தில் கை வைத்து, அதற்கு உதவுவதில்லையா?,'' என, 'மாஜி' எம்.எல்.ஏ., பழ.கருப்பையா தெரிவித்தார். நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி: ஐந்து ஆண்டுகள் ஆளுங்கட்சியில், எம்.எல்.ஏ.,வாக இருந்துவிட்டு, பதவி காலம் முடிவடையும்போது, ஆளுங்கட்சிநடவடிக்கைகளை, கடுமையாக விமர்சிப்பது ஏன்?

சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட, முதல் நிதியாண்டில், காவல் துறை மானியத்தில், நான் பேச வேண்டும் என, முதல்வர் விரும்புவதாக, கொறடா கூறினார். நான், 20 மணித் துளிகள் பேசினேன். முதல்வர், 30 மணித் துளிகள், பூசி மெழுகி, தவித்து விடையளிக்க நேரிட்டது.
எதிர்க்கட்சிக்காரனுக்குத்தான், முதல்வர் மறுமொழி சொல்வது வழக்கம். தன் கட்சி சட்டசபை
உறுப்பினருக்கே, முதல்வர் விடை சொல்ல நேரிட்டுவிட்ட, அந்த நிகழ்வுதான், சட்டசபையில் நான் பேசிய கடைசி நிகழ்வாகும்.அதற்கு பின், முதல்வர் என்னை பேச சொன்னதுமில்லை; நானாக முன்வந்து பேசியதுமில்லை. எந்த ஒரு எதிர்ப்பும், ஆதரவும், ஒரே நாளில் முகிழ்ந்து
விடுவதில்லை.பல கட்சிகள் மாறி வந்துள்ளீர்களே?
ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அவனோடேயே வாழ்ந்து மடிந்து போகும், கற்புடைய பெண்ணின் மனநிலை, அரசியலுக்கு எவ்வாறு பொருந்தும்? கற்பு வாழ்க்கை வேறு; கருத்து வாழ்க்கை வேறு.
'ஒரு தலைவனுக்கே விசுவாசம், ஒரு முதலாளியிடம் மட்டுமே ஊழியம்' என்பவை எல்லாம்
தலைவனையும், முதலாளியையும் பொறுத்தே அமையக் கூடியது.

விடுதலை பெற்ற இந்தியா மீண்டும் அடிமைப்பட்டது, நெருக்கடி நிலை காலத்தில். அப்போது நெருக்கடி நிலையை ஆதரித்த, எம்.ஜி.ஆர்., உடன் சேர்ந்து பணியாற்றுவது, கொள்கை சார்ந்ததா அல்லது நெருக்கடி நிலை எதிர்ப்பாளிகளான தலைவர் காமராஜர், மொரார்ஜி தேசாய் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது, கொள்கை சார்ந்ததா?
அப்பழுக்கற்ற தலைவன் மொரார்ஜி தேசாய், தலைமை அமைச்சர் என்னும் நிலையில், ஈழ உருவாக்கம் சிந்தனையை, தேசத் துரோகமாக பார்த்த போது, கட்சி விசுவாசம் என்னும் பெயரால், மொரார்ஜியுடன் சேர்ந்து, ஈழத் தமிழின எதிர்ப்புப் பணியை தொடர்ந்து செய்திருந்தால், அது ஏற்புடைய செயலா?
அல்லது, நேற்று வரை போற்றி புகழ்ந்த மொரார்ஜியை, கடுமையாக விமர்சித்துவிட்டு, ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில், நேற்று வரை விமர்சித்து வந்த கருணாநிதி தலைமையிலான, தி.மு.க.,வில் இணைந்து செயல்பட்டது ஏற்புடைய செயலா?
ஜெயலலிதா கட்சியில், 'முழு விசுவாசி' என்று விளம்பரம் கொடுக்கிறவன் தான், 'முழுப்பாய்
சுருட்டியாக' இருப்பான்.
சாதாரண விமர்சனம் என்றால் கூட, அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவதுாறு வழக்கு போடும் ஆளும்கட்சியினரை பற்றி, எப்படி தைரியமாக
விமர்சிக்கிறீர்கள்?
ஜெயலலிதாவின் ஆட்சி - ஊழல் மயமானது என்பது உண்மை வாக்குமூலமா, அவதுாறா? பதவியை விட்டு இறங்கி விட்டால், அவருக்கு போதை தெளிந்து விடும்.தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி என, விஜயகாந்த் சொல்லப்படுகிறாரே!

முழு சட்டைக்கு, ஒருவனிடம் துணி இருக்கும். ஆனால், பை வைக்க துணியிருக்காது. அதற்கான துணியை தருகிறவன், 'நான் இல்லாவிட்டால், இவர் பேனாவை எதில் செருகுவார்' என்று, நாளைக்கு பெருமைப்பட்டு கொள்ள முடியும். அந்தப் பெருமை நியாயமானது தான்.
இன்று விஜயகாந்த் பெற்றிருக்கும் இடம், நேற்றைய அரசியலில் வைகோ பெற்றிருந்த இடம். சரியான அரசியல் முடிவுகள் தான், ஒரு கட்சி நிலை பெற வழிவகுக்கும்.

ஜெயலலிதா, கொஞ்ச பாடா படுத்தினார் விஜயகாந்தை, அவரது எம்.எல்.ஏ.,க்களை, சந்தைப் பொருளாக்குகிறார். அவரை, சட்டசபைக்கு வரவிடாதவாறு செய்தார். யார் வர வேண்டும் என்பது
இருக்கட்டும்; யார் வரக்கூடாது என்பது தான் முதன்மையானது.பா.ஜ.,வோடு கூட்டு சேர, விந்தியத்திற்கு வடக்கிலா விஜயகாந்த் அரசியல் நடத்துகிறார்? ஒரு முறை, பா.ஜ., உடன் கூட்டு சேர்ந்தது, அதனுடன் சேர்ந்த யாருக்கும் உதவவில்லை. வரலாற்றில் இல்லாதவிதமாக, 39க்கு, 37 இடங்களில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதைத்தானே இப்போதும் ஜெயலலிதா விரும்புகிறார். அதை, விஜயகாந்த் விரும்ப முடியாதே!

பா.ம.க.,வின் தலைவர் ராமதாஸ், மக்கள் நலக் கூட்டணி என, இவர்கள் எல்லாம் குறைவானவர்கள் அல்லர். அவர்கள் ஆசை நிறைவேறினால், அது

நல்லதுதான். லோக்சபா தேர்தலில் அது நிறைவேறியதா... ஜெயலலிதாவை முடிசூடா ராணியாக ஆக்கத்தானே, அது பயன்பட்டது. இப்போது மட்டும் வேறுவிதமாக எப்படி இருக்க முடியும்?
அதிகாரிகளும், அமைச்சர்களும், கைகோர்த்து, ஊழலில் ஈடுபட்டனர் என கூறினீர்களே... எந்த மாதிரியான ஊழலில் ஈடுபட்டனர்?
ஆளுங்கட்சியினர் தீர்மானங்கள் மூலம், ஆளும் முறையை மட்டும் தீர்மானிக்கின்றனர். நிதி ஒதுக்குவதோடு, அவர்களின் வேலை முடிந்து விடுகிறது. உண்மையான அதிகாரம், அதிகாரிகள் கையில் உள்ளது.

உங்கள் வீட்டிற்கு குடிநீர் குழாய் வேண்டும் என்றால், பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். இதில் கவுன்சிலருக்கு, எந்தவிதமான தொல்லையும் கிடையாது. ஆனால் அதிகாரி, கவுன்சிலரை பார்த்துவிட்டு வரும்படி சொல்கிறார். அதன்படி பார்க்காவிட்டால், வீட்டுக்கு குடிநீர் குழாய்
வந்து சேராது.

இப்போது, கவுன்சிலர் அதற்கான தொகையை தீர்மானிக்கிறார். அதை அவரும், அதிகாரியும் பகிர்ந்து கொள்கின்றனர். கீழ் மட்டத்தில் இப்படி என்றால், மேல் மட்டத்தில் துறை செயலரும், அமைச்சரும் கைகோர்த்து, சலுகைகளை அளித்தோ, சலுகைகளை பறித்தோ, பணம் திரட்டுகின்றனர். இவற்றை அரசின் தலைமையும் அனுமதிக்கிறது. இதற்கு முன்னதாக ஊழல் இருந்தது. அவை உதிரி, உதிரியாக இருந்தன. இப்போது ஜெயலலிதா ஆட்சியில், ஊழல் மையப்படுத்தப்பட்டு விட்டது.
ஊழல் என்று கூறி, ஒரு அமைச்சரை நீக்குவார். ஆறு மாதம் கழித்து, அவரை மீண்டும் அமைச்சராக்குவார். அதனுடைய பொருள், கணக்கு வழக்கில், சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
அடிக்கடி அமைச்சரவை மாற்றப்படுகிறதே ஏன்?
ஒரு வேட்டைக்காரன் நாயை பழக்கி வைத்திருப்பது, முயலை அடித்து தன் காலில் கொண்டு வந்து போடத்தான். நாயே முயலை அடித்து சாப்பிட்டு விடுமானால், வேட்டைக்காரன் நாயை வளர்ப்பதற்கு, அர்த்தம் இல்லாமல் போய்விடும். இதுதான் இந்த ஆட்சியின் கொள்கை.

அமைச்சர்கள் கூட, ஜெயலலிதாவை கண்டதும், குனிந்து வணக்கம் போடும் கலாசாரம் பரவி உள்ளதே?அவர்கள் வணக்கம் போடும் முறையை, நேரில் பார்த்தால் நிரம்ப வேடிக்கையாக இருக்கும். ஒரு ஓட்டப் பந்தயக்காரன், விசில் சத்தத்திற்கு பரபரப்பாக காத்திருப்பது போல, ஜெயலலிதா கார் வருவதற்கு முன்பே, குனிவதற்கு தயாராக, அவர்கள் நிற்கிற பாங்கு அழகாக இருக்கும். அவ்வளவு பக்தி அவர் மீதா அல்லது அவர் வழியே வரும், 'வரும்படி' மீதா?
'வரும்படி' அளவு கூடினால், வளைவின் அளவும் கூடும். பல சமயங்களில், ஜெயலலிதாவின் கார் போய் விட்டதென்று, அங்கு நிற்கும் போலீசார், அவர்களை நிமிர்த்தி விடுவர்.
தி.மு.க., மேடைகளில் விரைவில் உங்களைக் காணலாம் என சொல்லப்படுகிறதே?
அப்படி ஒன்றும் இல்லை. எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சி
தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில், இரண்டாவது கருத்து இல்லை. வலிமையான காளையால்தான், காலை ஊன்றி, நுரை தள்ளி, தலையை குனிந்து, மேட்டில் பார வண்டியை இழுக்க முடியும். ஆனால், வண்டிக்காரனும், பக்கத்தில் இருப்போரும், சக்கரத்தில் கை வைத்து, அதற்கு உதவுவதில்லையா?
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றிக்கு பின்னணியில், பெரும்
பண விளையாட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்மையா?'அம்மா'வின் ஒரே கூட்டணி பண கூட்டணி. அவர் கூட்டணி இல்லாமல் நிற்பார்; பண கூட்டணி இல்லாமல் நிற்க மாட்டார். சட்டசபை தேர்தலில், எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு?
யானை மட்டும் என்றில்லை; பூனையும், 'நான்தான் வெற்றி' பெறுவேன் என்று சொல்லும். ஆகவே அத்தகைய பதிலைக் கூற விரும்பவில்லை. எந்த கூட்டணி வெல்ல வேண்டும் என கேட்டால்,
ஜெயலலிதாவை வீழ்த்தவல்ல, கருணாநிதி - காங்கிரஸ் கூட்டணி வெல்ல வேண்டும் என சொல்வேன்.
தி.மு.க., ஊழல் - அ.தி.மு.க., ஊழல் எது
அதிகப்படியானது?தி.மு.க., ஊழல் உதிரி, உதிரியான ஊழல்.
தனி மனித நிலை சார்ந்தது. அ.தி.மு.க., ஊழல் மையப்படுத்தப்பட்ட ஊழல்; அமைப்பு ரீதியானது.
விஜயகாந்த் தனித்து போட்டி என, அறிவித்துஉள்ளாரே?
இதோடு விஜயகாந்த் சகாப்தம் முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று, 12 சதவீதம் ஓட்டு வாங்கி, பின் ஜெயலலிதாவோடு சேர்ந்து, சில எம்.எல்.ஏ.,க்களை பெற்றார். பலரை அவரிடமே பறிகொடுத்து, இன்று சேர வேண்டிய கூட்டணியில் சேராமல், தனித்து நிற்கிறேன் என்ற முடிவு, அவரது 5 சதவீத ஓட்டை போக்கி, அவரை ஒன்றுமில்லாமல் ஆக்கப் போகிறது.
வைகோ இதுபோல் தேர்தல் சமயங்களில், எடுக்கக் கூடாத முடிவுகளை எடுத்ததால், இந்த நிலைக்கு உள்ளாகி உள்ளார். இப்போது அவரது இடத்திற்கு வந்த விஜயகாந்த், இப்போது வைகோவை பின்பற்றி, இந்த தற்கொலை முயற்சியில் இறங்கி உள்ளார்.

பயோ - டேட்டா
பெயர் : பழ.கருப்பையா
வயது : 73
பதவி : முன்னாள் எம்.எல்.ஏ.,
படிப்பு : பி.யு.சி.,

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.அகம்

கருத்துகள் இல்லை: