வியாழன், 22 மே, 2014

Iran பெண்களும் ஆண்களும் நடனமாடியதற்காக கைது !


அமெரிக்கப் பாடகர் பரேல் வில்லியம்சின் 'ஹேப்பி' என்ற ஆல்பத்தின் பாடல் ஒன்றுக்கு ஈரானைச் சேர்ந்த மூன்று பெண்களும், இளைஞர்களும் இணைந்து வீட்டுக் கூரையின் மீதும், குறுகிய சந்துகளிலும் நடனம் ஆடியதாக
எடுக்கப்பட்டிருந்த வீடியோ பதிவு ஒன்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதளத்தில் 2,65,000-க்கும் மேற்பட்டமுறை மக்களால் பார்க்கப்பட்ட இந்த நடனக்காட்சியில் இடம் பெற்றிருந்த ஆறு பேரையும் நேற்று ஈரான் காவல்துறை கைது செய்தது. இத்தகைய நடனங்கள் பொதுமக்களின் புனிதத்தைக் காயப்படுத்தியதாக டெஹ்ரான் காவல்துறை தலைவர் ஹோசன் சஜடெனியா தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த செய்தி பல்வேறுவிதமான விமர்சனங்களை அங்கு எழுப்பியது. பொதுமக்களில் பலரும் இதுகுறித்து தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி சந்தோஷமாக இருப்பது ஈரானில் குற்றமாகக் கருதப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர். இசை ஆல்பத்தினை வெளியிட்டிருந்த பாடகர் வில்லியம்சும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கும் மேலாக தற்போது சீனாவில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஈரானிய அதிபர் ஹசன் ருஹானி கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவான தனது கருத்தை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

மகிழ்ச்சியாக இருப்பது நமது மக்களின் உரிமை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எந்த செயலையும் நாம் கடுமையாகத் தண்டிக்கக்கூடாது என்று ருஹானி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தேர்தல் வெற்றிக்குப்பின்னர் பேசியிருந்த உரையின் ஒரு பகுதியை அவரது ஆதரவாளர்கள் மேற்கோளாக நேற்று வெளியிட்டிருந்தனர்.இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நேற்றே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நடனத்தில் பங்கு பெற்றிருந்த பேஷன் போட்டோகிராபரான ரெஹானே தாராவதி இந்த செய்தியை இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும் ஈரானிய அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை என்றும், இந்த வீடியோ பதிவின் இயக்குனர் இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. .maalaimalar.com/

கருத்துகள் இல்லை: