டெல்லி: 10 ஆண்டுகால காங்கிரஸ் எதிர்ப்பு அலை பலமாக வீசிவிட்டது..
இந்த எதிர்ப்பு அலையை மோடி சுனாமியாக மாற்றிய பாரதிய ஜனதா அதன் முன்னுள்ள
விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் 'சித்தாந்தங்களை'
நிறைவேற்ற முனைந்தால் காங்கிரஸுக்கு நேர்ந்த கதிதான் நாளை அக்கட்சிக்கு
ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 10 ஆண்டுகாலம்
நாட்டை ஆண்டது. அக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் 100 நாள் வேலைத்திட்டம்,
தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற ஒருசில நடவடிக்கைகள்தான் மக்களுக்கு
பயனைத் தந்தது.
அதே நேரத்தில் இப்படியான சட்டங்களை இயற்றிவிட்டு கண்மூடித்தனமாக
விலைவாசி உயர்வுக்கு வழியையும் ஏற்படுத்தியது காங்கிரஸ் அரசு. அதனால்தான்
மக்கள் கோபத்தில் கொந்தளித்துப் போயினர். அந்த கோப அலைதான் வலுவான மாற்றம்
தேவை என பாரதிய ஜனதாவுக்கு வாக்குகளாகவும் மாறியது.
காங்கிரஸை வீழ்த்தி பாஜக அரியணையில் அமர்ந்த போதும் பாஜகவுக்கு எதிராக
மொத்தம் 70% பேர் வாக்களித்துள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
மோடி சுனாமி என்று பாஜக தம்பட்டம் அடித்துக் கொண்டால் ஆகக் குறைந்தது
ஊடகங்கள் கணித்தபடி 50% வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும் பாஜக.
வழக்கமான பாஜகவின் வாக்கு சதவீதத்துடன் மக்களின் கோப அலை இணைந்து கொண்டதால்
மட்டுமே அக்கட்சி அரியணை ஏற முடிந்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தமாகவே பாரதிய ஜனதா கட்சி 31% வாக்குகளைத்தான்
பெற்றுள்ளது. மொத்தம் 17 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 549 வாக்குகளை
அக்கட்சி பெற்றுள்ளது. எஞ்சிய அத்தனை கோடி வாக்காளர்களும் பாஜகவை
ஏற்கவில்லை.
10 ஆண்டுகால காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடுகளால் அக்கட்சிக்கு
19.3% வாக்குகள்தான் கிடைத்துள்ளன. ஆனால் 10 கோடியே 69 லட்சத்து 36
ஆயிரத்து 765 பேர் மட்டுமே அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத பகுஜன் சமாஜ் கட்சி 4.1%
வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 2 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 102
வாக்குகளை பகுஜன் பெற்றுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடியே 12 லட்சத்து 59 ஆயிரத்து 681
வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய அளவில் 3.8% சதவீத வாக்குகளை திரிணாமுல்
பெற்றுள்ளது.
5 இடங்களைக் கைப்பற்றிய சமாஜ்வாடி கட்சி 3.4% வாக்குகளைப்
பெற்றுள்ளது. சமாஜ்வாடிக்கு 1 கோடியே 86 லட்சத்து 72 ஆயிரத்து 916 பேர்
வாக்களித்துள்ளனர்.
37 இடங்களைப் பெற்றுள்ள அதிமுக 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிமுகவுக்கு 1 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 825 வாக்குகள்
கிடைத்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3.2% வாக்குகளைப் பெற்றுள்ளது.
இக்கட்சிக்கு மொத்தம் 1 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரத்து 773 பேர்
வாக்களித்துள்ளனர்.
தெலுங்குதேசம் மற்றும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சிகள் தலா 2.5% வாக்குகளைப் பெற்றுள்ளன.
ஆம் ஆத்மிக்கு 2% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து 635 வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லாத திமுக தேசிய அளவில் 1.7%
வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 96 லட்சத்து 36 ஆயிரத்து 430 வாக்குகளை
திமுக பெற்றுள்ளது.
20 தொகுதிகளை வென்ற பிஜூ ஜனதா தளம் 1.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 94 லட்சத்து 91 ஆயிரத்து 497 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் 1.6%, ராஷ்டிரிய ஜனதா தளம் 1.3%.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 1.2%. ஐக்கிய ஜனதா தளம் 1.1%. ஐக்கிய ஜனதா தளம்
0.8%, மதச்சார்பற்ற ஜனதா தளம் 0.7% வாக்குகளைப் பெற்றுள்ளது.
இப்படி பாஜகவுக்கு எதிராக சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மோடி சுனாமி என்றால் இத்தனை கட்சிகளும் காணாமல் போயிருக்க வேண்டும் என்பதை
பாஜகவினர் நினைவில் கொள்ள வேண்டும்.
இருப்பினும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டது பாரதிய ஜனதா. இப்போது
மக்களுக்கு தேவை.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது. மாதந்தோறும் மடங்கு
மடங்காக ஏறுகிற பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பது போன்ற அவசியத்
திட்டங்கள் தேவை.
அதைவிட்டு விட்டு மோடி சுனாமி எனும் பிம்பத்தை சமூக வலைதளங்கள் மூலம்
உருவாக்கிவிட்டதைப் போல தொடர்ந்தும் விளையாடிக் கொண்டே மக்களை சமாளிக்கலாம்
என பாரதிய ஜனதா எண்ணுமேயானால் காங்கிரஸை எப்படி மக்கள் தூக்கி
எறிந்தார்களோ அந்த கதிதான் நேரும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு
அந்தஸ்தில் கை வைப்பது, பொதுசிவில் சட்டம் போன்றவற்றைதான் நிறைவேற்றுவோம்
என்று அடம்பிடித்துக் கொண்டிருக்காமல் பல லட்சம் முறை உச்சரித்த "வளர்ச்சி"
என்பதை செயலில் காட்ட வேண்டிய கட்டாயம் மோடிக்கு இருக்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்கனவே தேர்தல்
வாக்குறுதியில் குறிப்பிட்டபடி ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களுக்குள்
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து காட்டாவிட்டால் போராட்டத்தில்
காங்கிரஸ் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான
ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இப்போதே எச்சரிக்கை விடுத்துள்ளார். செயலில் பாஜக
காட்டாவிட்டால் எதிர்க்கட்சிகள் 'வேலையை' காட்டுவார்கள் என்பதை புரிந்து
கொள்ள வேண்டும்.
எனது அரசு மக்களுக்கானது; நாட்டுக்காக வாழ்வதற்கான நேரமிது' என்று
தமது வெற்றி உரையில் மோடி குறிப்பிட்டதை செய்து காட்டினால் மட்டுமே பாஜக
தப்பிக்கும். அதை விட்டுவிட்டு கங்கைக்குப் போய் ஆரத்தி காட்டிக் கொண்டு,
சோஷியல் மீடியா மூலம் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என மோடி கருதினால்
காங்கிரசுக்கு ஏற்பட்ட கதி நிச்சயம் ஏற்படும் என்பதை பாஜக மனதில் கொள்ள
வேண்டும்.
Read more at: http://tamil.oneindia.in/
Read more at: http://tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக