வெள்ளி, 23 மே, 2014

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலுவான கோரிக்கை ! கலைஞர் பிறந்த நாள் விழாவில் திருப்பங்கள் இடம்பெறும் !

தி.மு.க., தலைவர் கருணாநிதி யின், 91வது பிறந்த தினத்தை ஒட்டி, தந்தை என்ற முறையில், அவரை, கோபாலபுரம் இல்லத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, நேரில் சந்தித்து, ஆசி பெற வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தவிரவும், பிறந்த நாள் காரணத்தை வைத்து, சமீபத்தில் ஏற்பட்ட கசப்பு நிகழ்ச்சிகளுக்கு, தீர்வு காண்பதுடன், கட்சிப் பொறுப்பை மீண்டும் தரவும், முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
கட்சிக்கு எதிராக செயல்பட்ட தாக கூறி, தென் மண்டல அமைப்பு செயலர் பதவி, அழகிரியிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அழகிரி ஆதரவாளர்கள் 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகள், அதன் உச்சகட்டமாக, லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், 'அழகிரியை நான் மறந்து விட்டேன்' என்று, தி.மு.க., தலைவர் கூறும் அளவுக்கு, கசப்பு உணர்வுகள் அதிகரித்திருக்கிறது.;சொன்னது நடந்தது:
கட்சியில் இருந்து 'டிஸ்மிஸ்' ஆனபின், தி.மு.க.,வுக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்தார், அழகிரி. 'தமிழகத்தில், தி.மு.க., போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் தோற்கும்,' என, சாபம் விட்டு பேசினார். அவர் சொன்னது போலவே, தேர்தல் முடிவுகள் அமைந்துவிட, கட்சிக்குள் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினர், 'அழகிரி சொன்னது நடந்து விட்டதால், அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து, பழையபடியே, கட்சியை பலமுள்ளதாக வைத்திருக்க வேண்டும்' என, சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், ஸ்டாலின் குடும்பத் தரப்பில் இருந்து, இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 'எக்காரணம் கொண்டும் அழகிரியையோ, அவர் ஆதரவாளர்களையோ, மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து விடக்கூடாது என்பதில், அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இதனால், இந்த விஷயத்தில் அடுத்து எப்படி முடிவெடுப்பது என, புரியாமல் தவித்து வருகிறார்,

கருணாநிதி.காலை சிற்றுண்டி: இந்நிலையில், கருணாநிதியின் பிறந்த நாளன்று, தன் குடும்பத்தினர் அனைவருடன், கோபால புரம் வீட்டில், கருணாநிதி, காலை சிற்றுண்டி சாப்பிடுவது வழக்கம். இந்த பிறந்த நாளன்று, அழகிரி குடும்பத்தினரும் வர வேண்டும் என, கருணாநிதி மனைவி தயாளு, மகள் செல்வி ஆகியோர், விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதேசமயம், தந்தை என்ற முறையில் கருணாநிதியை, அழகிரி நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மதுரையிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள், 10 கார்களில், 100 பேர் கோபாலபுரத்திற்கு படையெடுத்து வந்து, கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். அழகிரியும், கருணாநிதியும் நேரில் சந்தித்து பேசி விட்டால், அனைத்து பிரச்னைக்கும் முடிவு ஏற்பட்டு விடும்' என, அழகிரி ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.


இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அழகிரியை, கட்சியில் மீண்டும் சேர்ப்பதில், எந்த முட்டுக்கட்டையும் இருக்காது. 'கருவின் குற்றம்' என்ற கவிதையை எழுதிய பின், மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரனுக்கு, துணைப் பொதுச் செயலர் பதவி வழங்கியது, தி.மு.க.,வின் வரலாறு. கோபாலபுரம் குடும்பத்தின் வீட்டு பெண்கள், வெள்ளைச் சேலை கட்டும் நிலை ஏற்படும் என, வைகோ ஆவேசமாக பேசியும், அவரை தன் தம்பி என, அழைத்து, அவருடன் மீண்டும் தேர்தல் கூட்டணி அமைத்தவர் தான், கருணாநிதி. 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்ட வைகோவை, மூன்று தடவைகளுக்கும் கூடுதலாக சிறைக்கு சென்று, பார்த்து திரும்பினார் கருணாநிதி.

தன் மூத்த மகன் முத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம், 5 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றார். சமீபத்தில், முத்து உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் இருந்த போது, அங்கு இரு நாட்களாக, முத்து அருகில் இருந்து கவனித்து, தந்தையின் பாசத்தை கருணாநிதி வெளிப்படுத்தினார். எனவே, எதிரியையும் தன்வசமாக்க நினைப்பவர் கருணாநிதி என்பதால், பெற்ற பிள்ளை அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, கருணாநிதி அதிகம் விரும்புவார். கட்சியில் நடக்கும் தவறுகளை தான், அழகிரி சுட்டிக் காட்டினாரே தவிர, கருணாநிதியை பற்றி அவர் குறை கூறவில்லை. எனவே, தென் மாவட்டங்களில், கட்சி ரீதியாக பிளவு படாமல் இருக்க, அழகிரியிடம் மீண்டும் தென் மண்டல அமைப்புச் செயலர் பொறுப்பு, ஒப்படைக்க வாய்ப்புள்ளது.>பதவிகள்: அதேசமயம், இளம் பருவத்திலிருந்து, கட்சிக்காக, உழைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, செயல் தலைவர் பதவியும், '2ஜி' வழக்கு தொடர்பாக, திகார் சிறைக்கு சென்று, குடும்பத்திற்காக தியாகம் செய்துள்ள, கனிமொழிக்கு துணை பொதுச் செயலர் பதவியும் வழங்கி, குடும்ப அரசியல் சண்டைக்கு, கருணாநிதி முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டு உள்ளார். இதற்கான முடிவு கள், ஜூன் 2ம் தேதி நடக்கும், உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மறுநாள், கருணாநிதி பிறந்த நாள் என்பதால், மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த, முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் தோல்வியால், அதிர்ந்துள்ள கட்சியினரை மீண்டும் ஒருங்கிணைக்க, இது உதவிடும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: