புதன், 21 மே, 2014

100 படுக்கை வசதி கொண்ட 15 புதிய மருத்துவமனைகள்

சென்னையில் 100 படுக்கை வசதி கொண்ட 15 புதிய மருத்துவமனைகளை தொடங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நகர்ப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் விதமாக நகர்ப்புற சுகாதார திட்டத்தை (அர்பன் ஹெல்த் மிஷன்) மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த அரசு நிதியளிக்கிறது.
இந்த திட்டம் சென்னையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, சென்னையில் எத்தனை மருத்துவமனைகள் தேவை, அவற்றுக்கான நிதி எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் திரட்டப்பட்டன. இதன்படி முதல் கட்டமாக 140 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ. 42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 142 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்படும்.
இதில் 100 இடங்களில் ஏற்கெனவே உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
மீதமுள்ள 40 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான இடம் மற்றும் கட்டடங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புதிய கட்டடங்களும் கட்டப்படும்.
இப்போது குடும்பநல மையங்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் தனித்தனியாக செயல்படுகின்றன.
இவை இணைக்கப்பட்டால், குடும்ப நல சிகிச்சையும், பொது சிகிச்சையும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
இதற்கு தேவையான புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
100 படுக்கைகள் வசதி மருத்துவமனை: இதேபோல, இந்தத் திட்டத்தின் கீழ் 100 படுக்கை வசதி கொண்ட 15 மருத்துவமனைகள் அமைக்கப்படும். இப்போது சென்னையில் 19 அவசரகால மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன.
இதில் 7 மருத்துவமனைகள் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.
மீதமுள்ள 8 மருத்துவமனைகளுக்கு புதிய இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த புதிய மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும். இதன்மூலம் மிகவும் தீவிரமான பாதிப்புள்ள நோயாளிகள் மட்டுமே பெரிய அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள்.
மேலும் நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு ரூ. 150 கோடி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி மாலை நேர மருத்துவமனைகளும் பல் மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்படுகின்றன.
தேவைப்பட்டால், புதிய மருத்துவமனைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை: