புதன், 21 மே, 2014

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு 3 கட்சிகள் கூட்டணி?

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. மேலும் அதன் தலைவருக்கு மத்திய மந்திரி அந்தஸ்து உள்பட பல சலுகைகளும் உண்டு. பாராளுமன்ற சட்டம் 1977-ன் படி பார்த்தால் தற்போதைய பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்து இருக்கவேண்டும். ஆனால் 1998-ம் ஆண்டு அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி பாராளுமன்ற மொத்த உறுப்பினர்கள் (543) எண்ணிக்கையில் 10 சதவீதம், அதாவது 55 உறுப்பினர்கள் ஒரு கட்சிக்கு இருக்கவேண்டும். இதன் அடிப்படையில்தான் பிரதான எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர் அந்தஸ்து அளிக்கப்பட்டு வருகிறது.
 நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

இதனால் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தோ கிடைக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்.

அதேசமயம் அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் போட்டியில் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்க முடியும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் தற்போதைய 16-வது பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்களும், பிஜூ ஜனதாதளத்திற்கு 20 எம்.பி.க்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 34 எம்.பி.க்களும் இருக்கிறார்கள். இந்த 3 கட்சிகளுக்கும் மொத்தம் 91 எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்த போன்ற கூட்டணி சாத்தியமா? என்று பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் கேட்டபோது, "பாராளுமன்றத்துக்குள் பல்வேறு எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து தங்களுக்குள் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதி தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்கவும் செய்யலாம். இந்த கோரிக்கை சபாநாயகர் பரிசீலிக்கலாம்" என்று தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இல்லாத சூழ்நிலையில் பாராளுமன்றம் ஜனநாயக ரீதியில் செயல்பட இதுபோன்ற கூட்டு எதிர்க்கட்சி முறையை ஆதரிக்கலாம் என்று பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் காங்கிரசை பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவிடாமல் தடுக்க இந்த கூட்டு எதிர்க்கட்சி முறைக்கு மம்தா பானர்ஜி ஆதரவு கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதனால் சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற முடியாமல் போகும் நிலை காணப்படுகிறது.

1962-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை எதிர்க் கட்சி தலைவர் இல்லாமலேயே பாராளுமன்றம் இயங்கியது குறிப்பிடத்தக்கது. maalaimalar,com

கருத்துகள் இல்லை: