ஞாயிறு, 18 மே, 2014

ஜெயலலிதாவின் வெற்றி தமிழர்களின் சரியான தீர்ப்பு – மதுரை ஆதினம் !


மதுரை: ஜெயலலிதாவை தமிழினம் மகிழ்வுடன் வாழ்த்துகிறது என்று தெரிவித்துள்ளார் மதுரை ஆதீனம். தேர்தல் வெற்றி பற்றி மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அ.தி.மு.க. வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளுக்கும் அறிவித்து தேர்தல் களத்தில் துணிவுடன் மக்களை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா.  எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத தைரியம் புரட்சித் தலைவிக்கு இருந்தது.
இதனால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. கடந்த 3 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள், மக்கள் திட்டங்களை தேர்தல் பிரசாரத்தில் புரட்சித்தலைவி குறிப்பிட்டதுடன் எதிர்கட்சிகளின் துரோகங்களையும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தமிழக விரோத போக்கையும் தோலுரித்து காட்டினார். நெருப்பாற்றில் நீந்திய சிங்கமாக சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்தார். இதனை தமிழக மக்கள் புரிந்து கொண்டு முதல்வர் புரட்சித்தலைவி மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்து அவர் தமிழக மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளுக்கு 100 க்கு 100 மதிப்பெண்களை வழங்கி மகத்தான வெற்றியை தந்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க அரசு சிறந்து விளங்குவதால் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி அலை எடுபடவில்லை. அம்மா அலைதான் தமிழகத்தில் ஏற்பட்ட காரணத்தால் அ.தி.மு.க அமோக வெற்றி கண்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள 120 கோடி மக்களின் நலன்களை பேணும் பெரும் பங்கை வகிக்கிற வகையில் தேசிய அளவில் 3 ஆவது கட்சியாக அ.தி.மு.க. திகழ்வது அனைவருக்கும் பெருமை தரக்கூடிய நிகழ்வாகும். சாதி, மத வேறுபாடுகளை கடந்து தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் புரட்சித்தலைவி மதநல்லிணக்க பேரரசியாக திகழ்கிறார். அவரது கரத்தை மேலும் வலுப்படுத்துகிற வகையில் தமிழக மக்கள் வழங்கி உள்ள தீர்ப்பு தமிழினத்தின் பாதுகாவலராக புரட்சித்தலைவி ஒருவர்தான் திகழ்கிறார் என்பதை உலகத்துக்கு எடுத்துக்காட்டி உள்ளது. இதனை தமிழினம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது, வாழ்த்துகிறது. அனைவருக்கும் ஆசீர்வாதம்" என்று கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: