வெள்ளி, 23 மே, 2014

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் சிதம்பரம்!

சிவகங்கையில் மீண்டும் போட்டியிட மறுத்து விட்ட, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் ராஜ்யசபா எம்.பி., ஆவதற்கு, காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் போக்கால், ஏற்கனவே கடும் அதிருப்தி அடைந்துள்ள, கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன், இந்த விவகாரத்தில், என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற, பரபரப்பு தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கலாசாரம்: தமிழக காங்கிரஸ் கட்சியில், வாசனுக்கும், சிதம்பரத்துக்கும் இடையே உள்ள பகை உச்சத்தில் உள்ளது. இருவரும் இணைந்து செயல்பட முடியாத அளவுக்கு, நிலைமை முற்றிப் போய் விட்டதாக, இருவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.  எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிதம்பரம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. ஒரோருவரின் தராதரம் பற்றி மக்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம், நாட்டை வழிநடத்த வேண்டிய அரசியல் கட்சிகளும் அப்படி இருந்து விட முடியாதே........
இந்த தேர்தலில் கூட, இருவரும் இணைந்து, ஒரு கூட்டத் தில் கூட பேசவில்லை. ஆதரவாளர்கள் விஷயத்திலும், இவர்களது செயல்பாடுகள் நேர்மாறாக உள்ளன. ஆதரவாளர் யார், ஆதர வாளர் அல்லாதவர் யார் என்று கோஷ்டி தலைவர்கள், பிரித்துப் பார்த்து பழகுவது என்பது, காங்கிரசில் காலங்காலமாக உள்ள கலாசாரம். அதுவே இப்போது, வாசன் ஆதரவாளரா என்று பார்த்து, சிதம்பரம் ஒதுங்குவதும், சிதம்பரம் ஆளா என்று அறிந்து, வாசன் ஓரங்கட்டுவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் மேலிடத்தின் போக்கு காரணமாக, கட்சிக்குள் வாசன் கடும் அதிருப்தி அடைந்து காணப்படுகிறார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுலின் நம்பிக்கையை, அவர் இழந்து விட்டது தான் முக்கிய காரணம் என, சிதம்பரம் தரப்பு காங்கிரசார் கூறுகின்றனர். இதன் காரணமாக, கொஞ்ச நாட்களாகவே, வாசன் தனிக் கட்சி துவங்கும் சிந்தனையில் மூழ்கி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைமை பதவி தற்போது, வாசன் அணி வசம் உள்ளது. தலைவராக உள்ள ஞானதேசிகன், வாசனின் தீவிர ஆதரவாளர். இதற்கிடையில், தேர்தல் முடிவுக்கு பின், ஞானதேசிகன் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.



வலுவிழந்து வருகிறது:

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. அதுவும், அவரது படுதோல்வி காரணமாக, வலுவிழந்து வருகிறது. ராகுல் எதிர்பார்த்த அளவுக்கு அவர், இந்த தேர்தலில் ஓட்டுகள் பெறாததும் காரணம். ஆனாலும், காங்கிரஸ் மேலிடத் தலைவர் திக்விஜய் சிங்கின் தீவிர ஆதரவு இருப்பதால், தலைவர் பதவியை பிடிக்க, அவர் கடும் முயற்சி எடுத்து வருகிறார். இதை தடுத்து, மீண்டும் தலைவர் பதவியில் அமர்ந்தால் தான், காங்கிரசில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும் என, வாசன் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் போன்ற மேலிட தலைவர்கள், இந்த விஷயத்தில் வாசனுக்கு ஆதரவாக உள்ளனர்.



பொருத்தமானவர்:

இதனால், இந்த விஷயத்தில், காங்கிரஸ் மேலிடம், முடிவை தள்ளிப் போட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், சிதம்பரத்தை மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆக்கி விடவேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு காரணம், லோக்சபாவில் காங்கிரஸ் பலம் இழந்து நிற்கிறது. ராஜ்ய சபாவில், காங்கிரஸ் தரப்பில் வலுவாக வாதிடக்கூடிய ஒருவர் அவசியம் என, காங்., மேலிடம் கருதுகிறது. அதற்கு, சிதம்பரம் மிகப் பொருத்தமானவர் என்பதால், அவரை எம்.பி.,யாக்க முன்வந்துள்ளது. கர்நாடகாவில் அடுத்த மாதம் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி., பதவிகளில் ஒன்றை, சிதம்பரத்திற்கு வழங்க, காங்., மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை, அம்மாநில முதல்வர் சித்தராமையா, சூசகமாக வெளியிட்டுள்ள தகவலும், வாசன் அணியினரை வந்தடைந்துள்ளது. இதனால், ஏற்கனவே அதிருப்தி அலையில் மூழ்கி கிடக்கும் வாசன் அணியினர், இப்போது, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.



பயமுறுத்தும் திட்டம்:

வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கொடுக்காமல், தமிழக காங்., தலைவர் பதவி யும் தராமல் போனால், என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து, அந்த வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தனிக் கட்சி துவங்கும் திட்டத்தில், 'தமிழ்நாடு காமராஜர் தேசிய காங்கிரஸ்' பெயரையும், கொடியையும் பயன்படுத்தும் நோக்கத்தில், அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசிய தகவல் ஏற்கனவே வெளியானது. ஆனால், இது மேலிடத்தை பயமுறுத்தும் திட்டம் என்று, சிதம்பரம் அணியினர், கட்சி மேலிடத்திடம் புகார் கூறியுள்ளதாக தெரிகிறது. தலைவர் பதவியை பெறுவதற்காக, மேலிடத்திற்கு அழுத்தும் கொடுக்க, இந்த குறுக்கு வழியை வாசன் தேர்வு செய்துள்ளார் என்றும் கூறியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாசன் விஷயத்தில் காங்., மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்பதும், கட்சிக்குள் சிதம்பரம் கை ஓங்கும் நிலையில், வாசன் வழி என்னவாக இருக்கும் என்பதும், தமிழக காங்கிரசார் மத்தியில் மிகப் பெரிய விவாதத்தையும், கட்சி வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: