திங்கள், 7 நவம்பர், 2011

SRM பஸ் விபத்து நடந்தது எப்படி? ( படங்கள் )பெங்களூரில் இருந்து கோவைக்கு நேற்றிரவு 10.15 மணிக்கு எஸ்.ஆர்.எம். என்ற தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. குளு-குளு வசதி கொண்ட அந்த பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். 
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு அந்த ஆம்னி பஸ் ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற ஊரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழிழாம்பரப்பு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
நான்கு வழி சாலை என்பதால் ஆம்னி பஸ் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்னால் பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த டேங்கர் லாரி சென்னை தண்டையார்பேட்டையில் விமான எரிபொருள் ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியாகும். அந்த டேங்கர் லாரியை ஆம்னி பஸ் டிரைவர் சசிகுமார் முந்த முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் ஆம்னி பஸ் மிகப் பயங்கரமாக மோதியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த மோதலில் லாரி பின்பக்க டேங்கரில் துளை விழுந்து விமான எரிபொருள் நாலாபுறமும் சிதறி கொட்டியது.

பஸ் முன் பக்க என்ஜின் மீது அவை தெறித்து விழுந்ததால், அடுத்த வினாடி குபீரென தீ பிடித்தது. அசந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள், பஸ் முன் பகுதியில் தீ பிடித்து எரிவதை கண்டதும் உதவி கோரி அலறினார்கள். பஸ் மோதிய வேகத்தில் கதவு பகுதி நொறுங்கிப் போனதால் அதைத் திறக்க முடியயவில்லை.

நவீன சொகுசு பஸ் என்பதால் பயணிகளால் வலுவானகண்ணாடிகளையும் உடனே திறக்கவோ உடைக்கவோ முடிய வில்லை. புகை மூட்டத்தில் உயிருக்காக அலறியபடி போராடினார்கள்.   பஸ் முன்பக்கத்தில் பிடித்த தீ வேகம், வேகமாக பஸ் முழுவதும் பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் மகேஷ், பரத் உள்பட சில இளைஞர்கள் சமயோசிதமாக செயல்பட்டு பஸ் அவசர வழியை உடைத்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வழி திறந்து கொண்டது.

அந்த வழியாக சுமார் 15 பயணிகள் வெளியேறி உயிர் தப்பினார்கள். ஆனால் அதற்குள் பஸ் முன் பகுதி முழுவதும் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. அதில் 12 பயணிகள் சிக்கிக் கொண்டனர். “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்”, என்று அவர்கள் அலறித்துடித்த போதும், யாராலும் பஸ் அருகில் செல்ல முடியவில்லை. பஸ் மோதிய சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ள கிராம மக்களாலும் சிலரைத் தான் காப்பாற்ற முடிந்தது.   பஸ் முன் பகுதியில் இருந்தவர்கள் மற்ற பயணிகள் கண் எதிரில் துடிதுடிக்க தீயில் எரிந்து பலியானார்கள். 5 பேர் உடல் சம்பவ இடத்தில் கருகி கரிக்கட்டை போல மாறி விட்டது.

மொத்தம் 6 பேர் கருகி பலியாகி விட்டனர். பலியானவர்களில் ஆம்னி பஸ் டிரைவர் சசிகுமார், கோவையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கேபல்சந்த் ஆகிய இருவர் மட்டுமே அடையாளம் தெரிந்துள்ளது. பலி யான டிரைவர் சசிகுமார் சேலம் தலைவாசல் பகுதி யைச் சேர்ந்தவர். 23 வயதா கும் அவர் இருக்கையில் இருந்த படியே கருகி எலும்புக்கூடாக கிடந்தார்.   பலியானவர்களில் 2 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை ஆகிய 4 பேர் உடல் முழுமையாக கருகிப் போனது. அவர்கள் யார்-யார்? என்று அடையாளம் காண முடியவில்லை. அவர்களது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 23 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஈரோடு, பவானி, கோவையில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விசாகப்பட்டினம் மண்டல மேலாளர் முத்துக்குமார், மற்றும் இளவரசன் ஆகிய இருவரின் நிலைக்கவலைக் கிடமாக உள்ளது.   விபத்து காரணமாக சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ் தீ பிடித்த தகவல் அறிந்ததும் போலீசார்-தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்தது எப்படி என்று சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம், போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஆகி யோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புபணிகளை துரிதப்படுத்தினார்கள். காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி உடனடி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தனர்.

விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து டேங்கர் லாரி டிரைவர் வடிவேல்(26) ,

’’சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து விமானத்துக்கு பயன்படுத்தப்படும் ஒயிட் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு கோவை புறப்பட்டு வந்தேன். என்னுடன் கிளீனர் வெங்கடேசும் இருந்தார். இன்று அதிகாலை 3 1/2 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் சென்று கொண்டிருந்தோம். அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் பின் பகுதியில் மோதியது.

இதில் லாரியில் உடைப்பு ஏற்பட்டு பெட்ரோல் பஸ்சின் என்ஜின் பகுதியில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டதும் நான் டேங்கர் லாரியை 1 கிலோ மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தியதால் டேங்கர் லாரி தீ விபத்தில் இருந்து தப்பியது. பின்னர் நான் விபத்து குறித்து, 100, 101 போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு பெருந்துறை போலீசில் சரண் அடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.


கருத்துகள் இல்லை: