திங்கள், 7 நவம்பர், 2011

44 நிகர்நிலை பல்கலை.களில் தேவையான தகுதிகள் குறைவு

மத்திய அரசால் அங்கீகாரம் ரத்து செய்யப்படவிருந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழங்களில், யு.ஜி.சி (பல்கலைக்கழக மானிய குழு)  வரையறைப்படி தேவையான தகுதிகள் குறைவாக உள்ளது என உச்சநீதிமன்றம் நியமித்த குழுவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வர்த்தக ரீதியில் செயல்படுவதாகவும், இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இது குறித்து ஆய்வு செய்த டாண்டன் குழு, நாட்டில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் யு.ஜி.சி விதித்த வரையறை இல்லை, தனிப்பட்ட நபர்களின் ஆதிக்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இவைகள் நிகர்நிலை அந்தஸ்துக்கு தகுதியற்றவை என மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.  இதன் அடிப்படையில் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அந்தஸ்தை பறிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு முடிவெடுத்தது. இதை எதிர்த்து அந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை பெற்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய அசோக் தாக்கூர், என்.கே. சின்கா, எஸ்.கே.ராய் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழு விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும், சுயமாக செயல்பட்டு புதிய படிப்புக்களை நடத்துவதற்கான வசதிகள் குறைவாக உள்ளதையும்,

சாதாரண கல்லூரிகள் போலத்தான் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட முடியும் என பெரும்பாலான நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஒத்துக்கொண்டுள்ளன. கல்வியாளர்கள் அடங்கிய மறு ஆய்வுக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துக்கு மாறாக கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, வழக்கு தொடர்ந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு பின்னடைவாக இருக்கும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: