வெள்ளி, 11 நவம்பர், 2011

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தள்ளிவைப்பு: ரஷ்யாவுக்கு திரும்பும் வி்ஞ்ஞானிகள்


Kudankulam Nuclear Plant
கூடங்குளம்: கூடங்குளத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருந்த மின் உற்பத்தியை மத்திய அரசு 3 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இதனால் ரஷ்ய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம்,கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலைக்கான பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவற்றில் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் மாதக்கணக்கில் நடந்து வருகிறது. போராட்டத்தின் தீவிரம் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 13ம் தேதி முதல் அணுஉலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.

இதனிடையே யூனிட் 1 மின்சாரம் தயார் நிலையில் உள்ளதாகவும், அந்த அணு உலையில் மாதிரி எரிபொருளை நீக்கி யுரேனியத்தை நிரப்புவது போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அணுசக்தி கழக இணையதளத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய யூனிட் 1ல் 2012 மார்ச் மாதத்திலும், யூனிட் 2ல் 2012 டிசம்பர் மாதத்திலும் மின் உற்பத்தி தொடங்கும் என புதிய தகவல் இடம் பெற்றுள்ளது.

மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய சுமார் 1000 ஊழியர்கள் கூடங்குளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்களும் பணி முடக்கம் காரணமாக ஊர் திரும்பிவிட்டனர். பணி முடக்கம் காரணமாக அணுமின் நிலையத்தில் உள்ள எலக்ட்ரிகல், எலக்ரானிக்ஸ் உபாகரணங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, மின் உற்பத்தி செய்ய 3 மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய விஞ்ஞானிகள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை: