சனி, 12 நவம்பர், 2011

இரு பெரிய கட்சிகளில் ஒன்றுதான் வேல்முருகனின் பின்னணியில்!”

Viruvirupu
Chennai, India: PMK leader Ramadoss believes Velmurugan factor has outside push to break the party. To gain support against Velmurugan, PMK leadership has been conducting small group meetings across the region.பா.ம.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி சிதறல்கள் கடந்த சில தினங்களாக அமைதியாக இருப்பதுபோல தோன்றினாலும், உள்ளே நெருப்பு புகைந்து கொண்டுதான் இருக்கின்றது. வேல்முருகன் தரப்பு தனிக்கட்சியை நோக்கிச் சென்றுகொண்டு இருப்பதாகவே தகவல்கள் கிடைக்கின்றன.
பா.ம.க.வுக்குள் அவருக்கு உள்ள ஆதரவு வட்டமும் சுருங்காமல் உள்ளது. அத்துடன் புதிதாக சிலரையும் தன்பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளார் என்கிறார்கள்.
வேல்முருகன் கட்சிக்குள் ஊடுருவுவதை தடுக்க டாக்டர் ராமதாஸ் தன்பங்குக்கு முயற்சிகளைச் செய்து கொண்டுதான் உள்ளார். ஆனால் டாக்டரால் முன்புபோல கட்சியை முழுவீச்சில் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை என கட்சியிலுள்ள அவரது விசுவாசிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
வேல்முருகன் திடீரென புரட்சி செய்து புறப்பட்டது போன்று தோன்றினாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதற்கான ஏற்பாடுகளில் வேல்முருகன் இறங்கியிருந்ததாக டாக்டர் நினைக்கிறார் என்கிறார்கள். கட்சிக்குள் புரட்சி செய்வதற்கு அவருக்கு சில வெளித் தூண்டல்களும் இருந்தன என்கிறாராம் டாக்டர் இப்போது.
சமீபத்தில் கட்சியில் தனது தீவிர விசுவாசிகளை அழைத்து பேசிய டாக்டர், “தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளில் ஒன்று, வேல்முருகனுக்கு பின்னால் நின்று மறைமுக உதவிகளைச் செய்கின்றது. பா.ம.க.வை உடைப்பதே அந்தக் கட்சியின் நோக்கம். அந்த முயற்சியில் இருந்து கட்சியைக் காப்பாற்ற நீங்கள் அனைவரும் உறுதியாக என் பக்கம் நிற்க வேண்டும்” என்றாராம் உணர்ச்சிகரமாக.
கடந்த சில தினங்களாக, ராமதாஸ் ஆதரவாளர்கள் சிறுசிறு குழுக்களாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் முன்வைப்பது, ஜாதி ரீதியான ஒரு வாதத்தைத்தான் என்கிறார்கள், இந்த சந்திப்புகளில் கலந்துகொண்ட சிலர்.
“வேல்முருகன் தனிக்கட்சி தொடங்கினால், அது முழுமையாக வன்னியர் நலன்களைப் பேணும் கட்சியாக இருக்காது. அரசியல் ரீதியாக பல தரப்பட்டவர்களையும் ஒன்று சேர்க்கும் கட்சியாக அது மாறிப் போகும். அப்படியான கட்சி ஒன்று உருவாகுவதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமா?” என்ற ரீதியில் போகிறது இவர்களது கான்வசிங்.
மொத்தத்தில், வேல்முருகன் என்ற சக்திக்கு பா.ம.க. தலைமை ரொம்பவும் பயப்படுகின்றது என்றே தெரிகின்றது.

கருத்துகள் இல்லை: