செவ்வாய், 8 நவம்பர், 2011

புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கிய கருணாநிதி


உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார் உறந்தை உலகப்பன். மணப்பாறையைச் சேர்ந்த வசந்தகலா நாடக மன்றத்தின் நிர்வாகி அவர். எளிமையான முறையில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த அவருக்கு பிரபலங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தும் ஆசை வந்தது. அதன்மூலம் தன்னுடைய நாடகத்துக்கு விளம்பரமும் கிடைக்கும்; கூடுதல் வசூலும் கிடைக்கும் என்று நினைத்தார்.
ஆசை வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர். கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். இருவருக்கும் முறைப்படி கடிதம் எழுதினார் உலகப்பன். இருவருமே தேதி கொடுத்தனர். 5 ஏப்ரல் 1952 அன்று நடந்த அரும்பு நாடகத்துக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதி. முன்னிலை வகித்தவர் எம்.ஜி.ஆர்.

நாடகம் தொடங்கியது. சில நிமிடங்களில் கருணாநிதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார் உறந்தை உலகப்பன். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை இந்த மேடையில் வைத்து நீங்கள் கொடுக்கவேண்டும். தலையசைத்துவிட்டு மேடையேறினார் கருணாநிதி.
அன்பு மூன்றெழுத்து. பாசம் மூன்றெழுத்து. காதல் மூன்றெழுத்து. வீரம் மூன்றெழுத்து. களம் மூன்றெழுத்து. வெற்றி மூன்றெழுத்து. அந்த வெற்றியை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து. அதைப் போலவே மூன்றெழுத்துக்காரரான எம்.ஜி.ஆருக்கு இந்த மேடையில் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
பிறகு எம்.ஜி.ஆர் பேசினார். புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கிய கருணாநிதிக்கும் உலகப்பனுக்கும் நன்றி தெரிவித்தார். புரட்சி நடிகராகவே தன்னைக் கழகத்துக்கு அர்ப்பணித்துக் கொள்வதாகச் சொன்னவர், கலைஞருடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே தனக்கு இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு வந்தது; என் உடலில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும்வரை அண்ணாவுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் கடைசி வரை உழைப்பேன் என்றார். கழகத்தில் இணைகிறேன் என்று எம்.ஜி.ஆர் சொன்னதில் கருணாநிதிக்கு நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி.
நிற்க.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்தான் மேலே இருப்பது. காலம் எத்தனை வேகமாக சுழல்கிறது… அந்த வேகத்தில் எத்தனை முரண்பாடுகள் முளைக்கின்றன… தன்னுடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே திமுகவில் இணைந்ததாகச் சொன்ன எம்.ஜி.ஆர் தற்போது தனக்கு எதிராகவே சண்டமாருதம் செய்யத் தயாராகி விட்டார் என்பதில் கருணாநிதிக்கு ஆச்சரியம் அதிகம். அதிர்ச்சி அதைவிட. ஆகட்டும் பார்த்துவிடலாம் என்று கருணாநிதியும் தயாராகிவிட்டார்.
எம்.ஜி.ஆரின் திருக்கழுக்குன்றம் மற்றும் ராயப்பேட்டை பேச்சுகள் திமுக தொண்டர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை எழுப்பியிருந்தன. தலைவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கத் தயாராகிவிட்ட எம்.ஜி.ஆரை இனியும் கழகத்தில் விட்டுவைக்கக்கூடாது என்று ஆவேசப்பட்டனர் சிலர். வாத்தியார் வரிந்துகட்டிவிட்டார், கருணாநிதியை ஒருகை பார்த்தே தீரவேண்டும் என்றனர் இன்னும் சிலர். தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல; கட்சியின் மூத்த மற்றும் முக்கியத் தலைவர்கள் மத்தியிலும் இதே ரீதியிலான விவாதங்கள்தான்.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பற்றிய செய்திகள் எல்லாம் கருணாநிதியின் கவனத்துக்கு வந்துகொண்டே இருந்தன. ஆலோசனைகளும்தான். எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசுங்கள்; எல்லாம் சரியாகிவிடும் என்றார் ஒருவர். இல்லையில்லை, எல்லை மீறிப் பேசுபவர்கள் எவரும் திமுகவின் எல்லைக்குள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என்றார் இன்னொருவர்.
வெறுமனே வாய்வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்த சிலர் எழுத்து மூலமாகவே வற்புறுத்தத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட இருபத்தியாறு செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட முறையீட்டு மனு 10 அக்டோபர் 1972 அன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியனிடம் தரப்பட்டது.
கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாரம். க. அன்பழகன், என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, சாதிக் பாட்சா, சத்தியவாணி முத்து, ப. உ. சண்முகம், க. ராசாராம், மதுரை எஸ். முத்து, ஏ.வி.பி. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் அந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் அவசரம் வேண்டாம் என்றார் நாஞ்சில் மனோகரன். அதை முரசொலி மாறனும் வழிமொழிந்தார். பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ளமுடியும் என்றுதான் இருவருமே விரும்பினர். ஒழுங்கு நடவடிக்கை திமுகவை இரண்டாகப் பிளந்துவிடும் என்பதை மனோகரன், மாறன் இருவருமே அனுமானித்திருக்கக்கூடும்.
எனினும், தம்வசம் வந்த முறையீட்டு மனுவைப் பரிசீலித்தார் திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன். ‘இந்த விண்ணப்பத்தை ஏற்று எம்.ஜி.ஆர் அவர்களைக் கழகத்தின் எல்லா பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக விலக்கி வைத்து, விளக்கம் கேட்கலாம்’ என்று குறிப்பு எழுதினார். அந்தக் குறிப்புடன் கூடிய முறையிட்டு மனு திமுக தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
மக்களைச் சந்திப்பேன், மக்கள் முன்னால் நிறுத்துவோம், தூக்கி எறிவோம் என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களை கருணாநிதி துளியும் ரசிக்கவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளை எம்.ஜி.ஆரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவும் இல்லை. விளைவு, எம்.ஜி.ஆர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தார் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக துணைப் பொதுச்செயலாளர் என்.வி. நடராசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் மீது திமுக தலைமை எடுத்திருக்கும் நடவடிக்கையை வாசித்துக் காட்டினார்.
தலைமைக் கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர் அவர்கள், அண்மைக் காலத்தில் கழகக் கட்டுப்பாடுகளை மீறியும் கழகத்துக்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளின்மூலம் செயல்பட்டு வருவதால் அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார். அவர் பெயரில் விரைவில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊடகங்களுக்குச் சொல்லியாகிவிட்டது. அடுத்தது, உரியவருக்குச் சொல்லவேண்டும். திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பினார். எம்.ஜி.ஆர் மீது செயற்குழு உறுப்பினர்கள் கொடுத்த முறையீட்டு மனுவின் விவரம், அது தொடர்பாக திமுக தலைமை எடுத்த நடவடிக்கை போன்ற சங்கதிகள் அந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர் தன்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு பதினைந்து நாள்கள் அவகாசமும் தரப்பட்டது.
ஆபத்து சூழ்ந்துகொண்டிருக்கிறது; அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் தீவிரம் காட்டினர். எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினர். ம்ஹூம். எதற்கும் எம்.ஜி.ஆர் அசைந்து கொடுக்கவில்லை. கருணாநிதியும் இறங்கிவருவதாக இல்லை. சமாதானம் ஏற்படுவதற்கான சூழல் எதுவுமே தட்டுப்படவில்லை.
12 அக்டோபர் 1972 அன்று திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் தொடங்கின. அதில் பேசிய நாஞ்சில் மனோகரன், ‘எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டங்களில் பேசிய கருத்துகள் தவறானவைதான். என்றாலும், அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு யோசிக்க வேண்டும்’ என்றார். ஆகட்டும் என்றார் கருணாநிதி. அவகாசம் தரப்பட்டது.
திமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் பெரியாரின் கவனத்துக்குச் சென்றது. திமுக உடைவதையோ, திமுக அரசுக்கு ஆபத்து வருவதையோ பெரியார் விரும்பவில்லை. உடனடியாக எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசினார். ஆனால் எம்.ஜி.ஆரோ, ‘என் மீது தவறு இல்லை. திமுக தலைமைதான் சரியாக நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் நண்பர்களுடன் கலந்துபேசி முடிவு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
பிறகு முதலமைச்சர் கருணாநிதி, பெரியாரைச் சந்திக்கச் சென்றார். கூடவே, அமைச்சர்கள் நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டோரும் சென்றனர். பெரியாருக்கு மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டய விருதை அவரிடம் கொடுப்பதற்காக வந்திருந்தனர். அப்போது, கட்சியின் ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி பிளவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கருணாநிதிக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பினார் பெரியார்.
நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் சென்று எம்.ஜி.ஆரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதிருப்தி. ஆதங்கம். வெறுப்பு. வேதனை. எல்லாவற்றையும் பற்றிப் பேசப்பட்டது. அவற்றுக்கான சமாதான நடவடிக்கைகள் பற்றியும் அலசப்பட்டன. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். எம்.ஜி.ஆர் கரைந்துகொண்டிருந்தார். இருவரும் எம்.ஜி.ஆரின் மனத்தைக் கரைத்துக்கொண்டிருந்தனர்.
சரி, திமுக தலைமைக்கும் கடிதம் எழுதுகிறேன். கடிதத்தின் உள்ளடக்கம் பற்றி பிற்பகலில் விவாதிக்கலாம் என்றார் எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் மனோகரன். கூடவே, மாறன். ஆனால் திடீரென அந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. கடிதம் எழுதுவதாக முதலில் ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் திடீரென பின்வாங்கியதற்குக் காரணம் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு.
எதிர்முனையில் பேசியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்; எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியதால்தான் எம்.ஜி.ஆர் பின்வாங்கினார் என்றனர் கருணாநிதி ஆதரவாளர்கள். ஆனால் ரசிகர்களை திமுகவினர் தாக்குகிறார்கள் என்ற செய்தி எம்.ஜி.ஆருக்குத் தொலைபேசி மூலமாகக் கிடைத்தது. அதுதான் எம்.ஜி.ஆர் மனத்தை மாற்றிவிட்டது என்றார்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள்.
விளக்கங்கள் கொடுத்த குழப்பங்களுக்கு மத்தியில் திமுக செயற்குழு கூடியது. அதிரடி தீர்மானம் ஒன்று அங்கே நிறைவேறியது.
கழக நலனுக்காக எம்.ஜி.ஆர் அவர்கள் வருத்தம் தெரிவித்து, கழகப் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தும் கூட அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாதது வருந்தத்தக்கதாகும். எனவே, அவர் கழகத்தின் ஒழுங்கு முறைகள் குலையும் அளவுக்கு நடந்துகொண்டதற்காக பொதுச் செயலாளர் அவர்மீது கழகச் சட்டதிட்ட விதி 31-ன்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்தச் செயற்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, இந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழுவுக்குப் பரிந்துரை செய்கிறது.
செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் பொதுக் குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 310 பேர். அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் 277 பேர். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவுக்குள் உண்மையிலேயே புரட்சி வெடித்திருந்தது!
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: