திங்கள், 7 நவம்பர், 2011

திருப்பூரில் கன மழை: ஆற்றில் வெள்ளப் பெருக்கு : சிறுமி உள்பட 14 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி!

திருப்பூர்: திருப்பூரில் கொட்டித் தீர்த்த கன மழையால் நொய்யல் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 10 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாய், மகள் மற்றும் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தனர். இதனையடுத்து இதுவரை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பெண் உள்பட 5 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் தொடர்ச்சியாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்றிரவு திருப்பூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நொய்யல் ஆறு மற்றும் கிளை ஓடைகளான சங்கிலிபள்ளம், ஜம்மனைபள்ளம் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவு 1.30 மணியளவில் வெள்ளத்தின் அளவு அதிகரித்தது. சங்கிலிபள்ளம், ஜம்மனைபள்ளம் ஓடைகள் முழுமையாக மூழ்கின. இதை ஒட்டியுள்ள சங்கிலிபள்ளம், பெரிய தோட்டம், சுகுமார் நகர், வெங்கடேஸ்வரா நகர், காயிதே மில்லத் நகர், தில்லை நகர், புஷ்பா நகர், அண்ணா நகர், சத்யா நகர், பூலவாரி சுகுமார் நகர், செம்மேடு உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை அதிகாரிகள் மீட்டு அங்குள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் 500 வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது.

சுகுமார் நகரை சேர்ந்த அபுதாஹீர் வீடும் வெள்ளத்தில் சிக்கியது. அபுதாஹீர், மனைவி திரிஷாத் (30), மகள்கள் நெலாமா (12), சகினா (7), மகன் அப்துல்லா (8) ஆகியோர் உயிருக்கு பயந்து வீட்டு கூரை மீது ஏறி நின்றிருந்தனர். வெள்ளம் பாய்ந்த வேகத்தில் திடீரென வீடு இடிந்து விழுந்தது. 5 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் திரிஷாத், சிறுமி சகினா இருவரது உடல்களும் இன்று காலை கரை ஒதுங்கின. அபதாஹீர் மற்றும் குழந்தைகளின் கதி என்ன என்று தெரியவில்லை. சங்கிலிபள்ளம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரசு (40). மாநகராட்சி சுகாதார பணியாளர். மகள்கள் புவனேஸ்வரி (25), ஞானம்மாள் (18) ஆகியோருடன் வசித்து வருகிறார். புவனேஸ்வரிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஞானம்மாள் திருப்பூர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று அதிகாலை கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளத்தில் இவர்கள் வீடும் இடிந்து விழுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 3 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரத்தில் சரசு மட்டும் ஒரு மரத்தை பிடித்து கரையேறி உயிர் தப்பினார். ஞானம்மாள் உடல் அதே பகுதியில் மீட்கப்பட்டது. புவனேஸ்வரி என்ன ஆனார் என தெரியவில்லை. இதே குடியிருப்பில் வசிக்கும் சண்முகம் (45) என்பவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். சங்கிலிபள்ளம், சுகுமார் நகர் பகுதியில் மேலும் சிலர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீயணைப்பு படையினரும் போலீசாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களின் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

பல்லடம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 200 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் மதிவாணன், மேயர் விசாலாட்சி, எஸ்.பி. பாலகிருஷ்ணன், எம்எல்ஏ தங்கவேல், ஆர்டிஓ செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும். இன்று காலை பக்ரீத் பண்டிகை கொண்டாட தயாராகியிருந்த நிலையில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பண்டிகை கொண்டாட முடியாமல் பலர் சோகத்தில் மூழ்கினர். பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளிலும் மழை நீர் புகுந்தது. பல கடைகள், நிறுவனங்கள் மழைநீரில் முழுமையாக மூழ்கின. 50க்கும் அதிகமான பனியன் கம்பெனிகள் மழைநீரில் மூழ்கியதால் இயந்திரங்களும் பொருட்களும் பாதிக்கப்பட்டன.

விடிய விடிய கூரை மீது தவித்த பொதுமக்கள்!

வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பீதியடைந்த பொதுமக்கள், உயிரை காப்பாற்ற வீட்டின் ஓட்டை பிரித்து மேலே ஏறினர். சுகுமார் நகர், காயிதேமில்லத் நகர், பூலவாரி சுகுமார் நகர் பகுதியில் 100க்கும் அதிகமான வீடுகளின் மீது பொதுமக்கள் ஏறி உயிர் தப்பினர். காயிதேமில்லத் நகரில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையுடன் மேற்கூரையில் விடிய விடிய காத்திருந்த பெண், உயிர் தப்பினார். அதிகாலை 3 மணிக்கு வீட்டின் மீது ஏறிய பொதுமக்கள் காலை 9 மணி வரை அங்கேயே அமர்ந்திருந்தனர். காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

கருத்துகள் இல்லை: