ஞாயிறு, 6 நவம்பர், 2011

பல்லவ காலத்து கோவிலில் புதையல்? ரகசிய அறையை உடைக்க முடிவு

கும்மிடிப்பூண்டி : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவ காலத்து சிவன் கோவிலில், முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பது கண்டறியப்பட்டது. வரும் 8ம் தேதி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் முன்னிலையில், ரகசிய அறையை உடைத்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே, புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பல பகுதிகள் சிதிலமடைந்ததால், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2010 ஆகஸ்டில், புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சின்னராஜன், கோவிலில் வழிபடச் சென்றார்.


வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 6 அடி அகலம், 15 அடி நீளத்தில் முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்தார்.அறையின் நான்கு பக்கத்திலும் சுவர்கள் எழுப்பப்பட்டு, மேல் தளம் மூடப்பட்டு இருப்பதால், என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. தகவல் அறிந்த இந்து அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, முழுவதும் அடைக்கப்பட்ட ரகசிய அறை இருப்பதை உறுதி செய்தனர். ரகசிய அறையை உடைத்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 8ம் தேதி, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில், ரகசிய அறை உடைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, அக்கோவிலில் பாதுகாப்பு கருதி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: