முழங்கால் அளவுக்கு காவி... மிடுக்கு குறைந்த முகம்... அசட்டையான சிரிப்பு... ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபர் அதிபன் போஸா இவர்? கனிமொழியுடன் திருமணம், விவாகரத்து என பரபரப்புப் புள்ளியாக இருந்த அதிபன், இப்போது ஆன்மிக அவதாரம் எடுத்து இருக்கிறார். சித்தர் குரு அய்யாவின் அடியவராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் அதிபன் போஸ், அவருடைய மந்திரங்களைப் பாடல்களாக்கி சி.டி-யாக வெளியிட்டு இருக்கிறார்
.
நந்தி சாமியாக தன்னை மாற்றிக்கொண்ட அதிபன் போஸிடம், ''என்ன, இப்படி மாறிட்டீங்க?'' எனக் கேட்டோம்.
''மாற்றம்கிறது நல்ல விஷயம்தானே... இதில் அனுதாபப்பட என்ன இருக்கு? நாம மட்டும் இல்லை... இந்த மரம், மண் எல்லாமே மாறிட்டுத்தான் இருக்கு. 'எல்லாம் நிரந்தரம்’னு நாம கற்பனை பண்ணிட்டு அலையுறோம். ஒரு கட்டத்தில் அந்த நினைப்பு தவிடுபொடியாகிடுது; வாழ்க்கையோட உண்மை புரியுது. இந்த அதிபன் மாறியதும் அப்படித்தான்!'' என்றபடி பலமாகச் சிரிக்கிறார்.
''இந்த ஒலிநாடா மூலமாக என்ன சொல்லப்போகிறீர்கள்?''
''மனிதத்தன்மை உள்ளவங்க இந்த உலகுக்கு ஏதாவது செய்யணும். நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இந்தப் பாடல்கள் உணர்த்தும். குரு பூர்ணிமா நேரத்தில் பாடப்பட்ட இந்தப் பாடல்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்தர்களின் சிந்தையில் உதித்தவை.''
''கனிமொழி வழக்கைக் கவனிக்கிறீர்களா?''
''கனிமொழி நல்லவங்க. எதை செய்யும்போதும் ஜாக்கிரதையா இருப்பாங்க. ஆனால், அடுத்தவங்களோட அட்வைஸுக்குத் தலை வணங்குறவங்க. எங்கள் மண வாழ்க்கை ஒரு வருஷம்தான். அப்புறம் பிரிஞ்சுட்டோம். ஆண்டவன் நடத்தும் விளையாட்டுகள் எல்லாமே அனுபவங்கள்தான். 1,000 வருடங்களுக்கு உரிய அனுபவங்களை நான் கத்துக்கிட்டது கனிமொழியின் பிரிவுக்குப் பிறகுதான். யாரும் யாரோட வாழ்க்கையிலும் தலையிட முடியாது. சில பிரிவுகளுக்குப் பின்னால்தான் அது புரியுது. வேறு என்ன சொல்றது?''
''கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை எப்படிப் பார்க்கிறீங்க?''
''ஆறுதல் சொல்லும் நிலையில் நான் இல்லை. இது எல்லாம் நேரத்தால் உண்டாகிறது. நாளைக்கே கடந்து போய்விடும். நித்தியானந்தா மிகுந்த அறிவார்ந்த ஆள். அவரைக் கடவுளாகவே மக்கள் கும்பிட்டாங்க. ஆனா, இன்னிக்கு என்னாச்சு? அவரைப் பார்க்கிறதே பாவம்னு நினைக்கிற அளவுக்குப் பேசுறாங்க. நாம எப்பவும்போல நார்மலாக இருந்தாலும், நம்ம சூழ்நிலை நமக்கு வேறு பிம்பத்தைக் கொடுத்துட்டுத்தான் இருக்கு. அதுக்குக் கவலைப்படக் கூடாது. கடந்து போற வாழ்க்கையில் எதுவுமே நிலை இல்லை. எதைப் பார்த்து கனிமொழி பயந்தாங்களோ, எது அவங்களைத் தயங்கவெச்சதோ... அது எல்லாத்தையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தி அவங்களுக்கு இப்போது கிடைத்து இருக்கும்!''
''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி தவறு பண்ணி இருப்பாங்கன்னு நம்புறீங்களா?''
''யாருக்கும் நாம ஜட்ஜ்மென்ட் எழுத முடியாது. ஒவ்வொரு மனுஷங்களோட நல்லது கெட்டது அவங்களோட மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். எனக்குத் தெரிஞ்சு கனிமொழி, லாப நோக்கம் பார்க்காத அப்பாவி. யாரையும் நம்பவைக்கிறதுக்காக நான் இதைச் சொல்றதா நினைக்கக்கூடாது. அது என்னோட வேலை இல்லை!''
''திருமண முறிவுக்கு அப்புறம் உங்க வாழ்க்கை எங்கெல்லாமோ போயிடுச்சே?''
''செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். பாதி இத்தாலி, பாதி இங்கிலீஷ்னு பேசிய யுனைடெட் நேஷனின் ஜர்னலிஸ்ட் பெண். குழந்தையும் பிறந்தது. கடவுளைத் தேடிப்போற பயணத்தில் என் குழந்தையும் இருக்குது. எனக்கும் கடவுளுக்குமான பயணம்தான் இந்த வாழ்க்கை. எது கையைவிட்டுப் போனப்பவும், நான் கவலைப்படவில்லை. வசதி வாய்ப்பாக இருந்தாலும் என் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. கனிமொழியைத் திருமணம் பண்ணினப்ப அத்தனை பத்திரிகையிலும் என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. 'ஏன் இப்படிப் பண்றாங்க?’னு கூச்சப்பட்டேன். திருமண முறிவையும் எழுதித் தள்ளினாங்க. ஏன் கொண்டாடினாங்க... ஏன் திட்டினாங்கன்னு எனக்கு கடைசி வரைக்கும் தெரியாது.
எல்லாத்தையும் விட்டுட்டு இந்தக் காவிக் கோலத்தில் நான் திரியும்போதுகூட, 'யூ அதிபன் போஸ்?’னு அடையாளம் கண்டு சிலர் பேசுவாங்க. 'ஆம்’, 'இல்லை’ன்னு எந்தப் பதிலையும் சொல்லாமல் சிரிச்சுக்கிட்டே போவேன்... போறேன்!''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக