செவ்வாய், 28 ஜூன், 2011

எங்கள் கை சுத்தம்: சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள்

புட்டபர்த்தி: சாய் அறக்கட்டளை பணத்தை எந்த ஒரு உறுப்பினரும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சம் சாய்பாபாவுக்கு சமாதி கட்ட ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் பாபாவின் தனி அறையில் இருந்து ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் 307 கிலோ வெள்ளி இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் வங்கியில் டெபாசிட் செய்யப்போவதாக அறக்கட்டனை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த 2 நாட்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான காரில் ரூ. 35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக சாய்பாபாவின் உறவினரான ரத்னாகரிடமும் விசாரித்தனர். அறக்கட்டளை நன்கொடை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரம் குறித்து அறக்கட்டளை உறுப்பினரான வி. சீனிவாசன் கூறியதாவது,

சாய்பாபாவின் உறவினரான ரத்னாகரை சில பக்தர்கள் அணுகி பாபாவுக்கு சமாதி கட்ட நன்கொடை அளிக்குமாறு கேட்டனர். அதற்காகத் தான் அந்த ரூ. 35 லட்சம் கொடுக்கப்பட்டது. அறக்கட்டளை செயல்பாடுகள் எந்த ஒளிவு, மறைவின்றி நடக்கின்றது.

கடந்த 18-ம் தேதி மகா சமாதி அமைக்க பெங்களூரைச் சேர்ந்த கட்டிட ஆலோசகர் ஒருவரிடம் பணம் கொடுக்கப்பட்டது. அவருடைய காரை போலீசார் வழிமறித்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

உடனே அந்த ஆலோசகர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மகா சமாதி அமைக்க கொடுக்கப்பட்டது என்றும், அதை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி போலீசாரிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.

இந்த பணத்தை நன்கொடையாகக் கொடுத்தவர்களும் மகா சமாதி அமைக்கத் தான் ரத்னாகரிடம் ரொக்கத்தை கொடுத்ததாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணையும் சமர்பித்துள்ளனர். இந்த நிதிக்கும், அறக்கட்டளைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.

அப்போது இன்னொரு அறக்கட்டளை உறுப்பினரான நாகானந்த் உடனிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ஆளுநர் நரசிம்மனை சந்தித்தார்.

கருத்துகள் இல்லை: