வெள்ளி, 1 ஜூலை, 2011

தயாரிப்பாளர் கொலை- கன்னட நடிகைக்கு 3 ஆண்டு சிறை- காதலருக்கு 10 வருடம்

மும்பை: டிவி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் கன்னட நடிகை மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டும், அவரது காதலர் எமிலி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் இன்று விதிக்கப்பட்டது. மரியா ஏற்கனவே சிறைக் காலத்தை அனுபவித்து விட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் குரோவர். அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்தவர் மரியா சூசைராஜ். இந்தித் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்க மும்முரமாக இருந்தவர். இவருக்கும் குரோவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நட்பானது. இதை மரியாவின் காதலர் எமிலி ஜெரோம் விரும்பவில்லை.

இந்த நிலையில், 2008ம் ஆண்டு மே 27ம் தேதி இரவு மும்பை புறநகர்ப் பகுதியான மலட் பகுதியில் உள்ள மரியாவின் வீட்டுக்கு சென்றார் ஜெரோம். அங்கு தங்கியிருந்த குரோமுக்கும் அவருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் ஜெரோம், குரோவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

இதையடுத்து மரியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். கிட்டத்தட்ட 300 துண்டுகளாக உடலை குதறி எடுத்த இருவரும், அதை தானே அருகே ஒரு காட்டில் போட்டு விட்டனர்.

இந்த வழக்கில் இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த விசாரணையில் ஜெரோம் கொலையாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களை அழித்ததாக மரியா குற்றவாளி என்றும் மும்பை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.

அதன்படி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மரியாவுக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. மரியா 3 ஆண்டுகளை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

தண்டனை விவரத்தைக் கேட்டதும் குரோவரின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல அரசு வக்கீல் ஆர்.வி.கினியும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கினி கூறுகையில், இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார்.

குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர் கூறுகையில் இதுதான் தீர்ப்பா?. மிக அதிர்ச்சியாக உள்ளது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என இந்தக் கொலையாளிகளுக்கு தீர்ப்பளிக்க வேண்டும். எனது மகனைக் கொன்ற மரியாவும், ஜெரோமும் சாக வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது என்றார் கோபத்துடன்.

குரோவர் கொலை வழக்கில் ஜெரோமுக்கும், மரியாவுக்கும் மிகச் சாதாரணமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிலும், மரியாவை விடுதலை செய்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
English summary
Kannada Actress Maria Susairaj was sentenced 3 yrs imprisonment and her lover Gerome was given 10 yr jail term in Neeraj Grover murder case. Since Maria had spent 3 yrs in prison she was ordered to be released by a Mumbai court. Gerome killed Grover in Mumbai in 2008 at Maria's residence. Later both Maria and Gerome made Grover's body into 300 pieces and thrown them near Thane in a forest.

கருத்துகள் இல்லை: