பதற்றம் வீட்டுக்குள் மட்டும் அல்ல; வெளியிலும்தான். கருணாநிதியின் திருமண தினத்தன்றுதான் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார் பெரியார்.
எதற்காக இந்தப் போராட்டம்?
ராதா
திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். மாகாண அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். திராவிடர் கழக செயற்குழு கூடியது. அரசின் உத்தரவு திரும்பப்பெறும்வரை தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தான் திராவிட இயக்கத்தினர் இரண்டாவது மொழிப்போராட்டம் என்கிறார்கள்.
சென்னைக்கு வந்த கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டினர் திராவிடர் கழகத்தினர். பல பகுதிகளும் மறியல் போராட்டங்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. 15 செப்டெம்பர் 1948 அன்று திருவாரூரில் மறியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம். கருணாநிதிக்கு திருமணம் நிச்சயித்திருந்த அதே தேதி.
திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போதே வாசலில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் செல்லத் தொடங்கியது. தமிழ் வாழ்க! இந்தித் திணிப்பு ஒழிக! வீட்டுக்குள் இருந்த கருணாநிதியை போராட்ட கோஷங்கள் உந்தித்தள்ளின. மணமகன் என்பதை மறந்தார்.
நேரே ஊர்வலத்துக்குள் நுழைந்தார். கோஷம் எழுப்பியபடியே போராட்டத்தில் ஐக்கியமானார். கல்யாண அவசரத்தில் மாப்பிள்ளை வெளியே சென்றதை எவரும் கவனிக்கவில்லை.
ஊர்வலம் முடிந்த பிறகுதான் மாப்பிள்ளை, கல்யாணம் எல்லாம் நினைவுக்கு வந்தது கருணாநிதிக்கு. அடித்துப்பிடித்து வீட்டுக்கு ஓடிவந்தார். அங்கே அவருக்காகக் காத்திருந்தனர் மணப்பெண் தயாளு மற்றும் உறவினர்கள். உண்மையில் அண்ணா தலைமையில் திருமணம் நடத்தவேண்டும் என்பதுதான் கருணாநிதியின் விருப்பம். ஆனால் மொழிப் போராட்டம் நடந்துகொண்டிருந்ததால் அண்ணாவால் வரமுடியவில்லை. கருணாநிதியின் நண்பர்கள் கவிஞர் கா.மு. ஷெரீப், டி.கே. சீனிவாசன் (இன்றைய திமுக மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையார்) உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். திருமணம் இனிதே முடிந்தது.
அடுத்த மாதமே ஈரோட்டில் திராவிடர் கழக மாநாடு கூடியது. அதில் தனது தூக்குமேடை நாடகத்தை நடத்தினார். அந்த மாநாட்டில் கருணாநிதியின் நேசத்துக்குரிய பட்டுக்கோட்டை அழகிரி பேசினார். கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் ஆர்வத்துடன் வந்திருந்தார் அழகிரி. ஆவேசமாகப் பேசினார். கருணாநிதிக்குக் கண்கள் கலங்கின.
மாநாடு முடிந்த சில மாதங்களிலேயே அழகிரிசாமி மரணம் அடைந்தார். அப்போது கட்சிக்குள் ஒரு சர்ச்சை. பெரியார் நினைத்திருந்தால் பண உதவி செய்து அழகிரியைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அதைச் செய்வதற்குப் பெரியார் தவறிவிட்டார். இப்படித்தான் பலரும் நினைத்தனர், கருணாநிதி உள்பட. தன்னுடைய பேச்சுக்கும் எழுத்துக்கும் மானசீக குருவாக இருந்த அழகிரியைக் காப்பாற்றாமல் விட்டது அவரை அதிருப்தியடைச் செய்தது.
அந்த அதிருப்தி தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த அழகிரிசாமி படத்திறப்பு விழாவில் வெடித்தது. அழகிரியைக் காப்பாற்றாதது குறித்த தன்னுடைய மனக்குமுறல்களைக் காட்டினார். வார்த்தைகள் தடித்துவிழுந்தன. அப்போது பேசிய க. அன்பழகனும் அதே வேகத்துடன் பேசினார்.
இருவருடைய பேச்சுகளும் பெரியாரின் கவனத்துக்குச் சென்றன. உடனடியாக விடுதலைக்கு அறிக்கை எழுதினார் பெரியார். அண்ணாதுரையின் தூண்டுதல் காரணமாகவே கருணாநிதி தன்னைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் என்று சந்தேகப்பட்டார் பெரியார். அப்படியொரு முடிவுக்குப் பெரியார் வருவதற்கு இன்னொரு சம்பவமும் காரணமாக இருந்தது.
சுதந்தர தினத்தை இன்பநாளாகக் கொண்டாடுவதா, துக்கநாளாக அனுசரிப்பதா என்பது தொடர்பாக பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்துவேறுபாடு வெடித்திருந்த சமயம் அது. திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் திராவிட நாடு படத்தை அண்ணா திறந்துவைப்பதாக இருந்தது. ஆனால் அதிருப்தியில் இருந்த அண்ணா மாநாட்டுக்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக ஏ.வி.பி. ஆசைத்தம்பியே படத்தைத் திறந்துவைத்தார்.
அண்ணா வராததில் பெரியாருக்கு பலத்த ஆத்திரம். அப்போது மேடையேறினார் நடிகவேள் எம்.ஆர். ராதா. பெரியாரின் போர்வாள் என்ற பட்டம் பெற்றவர் அவர். திராவிடர் கழகத்தின் உறுப்பினராக இல்லாதவர். ஆனாலும் பெரியார் மற்றும் திராவிடர் கழகத்தின் ஆதரவாளர். கலகக்காரர் என்று அறியப்பட்ட எம்.ஆர். ராதா மைக்கைப் பிடித்ததும் அண்ணாவை விமரிசிக்கத் தொடங்கினார்.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக