செவ்வாய், 28 ஜூன், 2011

கணவருக்கு ராக்கி கட்டிய பெண்- இன்னொருவரின் மனைவி எனக் கூறி ஏற்க மறுத்த காதலர்!

மீரட்: அக்காவின் திருமணத்தன்று அவர் திடீரென காதலருடன் ஓடி விட, அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவருக்கு திடீர் மணப்பெண் ஆனார் தங்கை. ஆனால் அவரோ ஏற்கனவே தனது காதலரை ரகசியமாக மணம் புரிந்தவர். குடும்பத்தினரின் நெருக்குதல் காரணமாக அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவரை மணந்த அவர், முதல் இரவின்போது கணவரிடம் நடந்ததைக் கூறி அவருக்கு கையில் ராக்கி கட்டி சகோதரராக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது காதலரோ, இன்னொருவரின் மனைவியாகி விட்ட உன்னை எப்படி எனது மனைவியாக இனி ஏற்றுக் கொள்வது என்று கூறி விட்டார். இதனால் அந்தப் பெண் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

கிட்டத்தட்ட அந்த 7 நாட்கள் படக் கதை போல உள்ளது உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த இந்த சோகக் கதை. உ.பி. மாநிலமே இந்த காதல், கல்யாண, கலாட்டா செய்தியால் பரபரப்பாகியுள்ளது.

நடந்தது என்ன?

உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவருக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. நிதீஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேஹாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மே 6ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளில் நேஹா தனது காதலரான பயிற்சி சப் இன்ஸ்பெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹாவின் தந்தை, தனது இளைய மகள் ஆர்த்தியை மணந்து கொண்டு, தனது குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுமாறு நிதீஷிடம் கெஞ்சியுள்ளார். அதை ஏற்று நிதீஷும் ஆர்த்தியை மணந்தார்.

அண்ணா!
முதல் இரவும் வந்தது. அங்குதான் பெரும் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் சந்தித்தார் நிதீஷ். முதல் இரவுக் கனவுகளோடு உள்ளே நுழைந்த அவரை அண்ணா என்று அழைத்து அதிர வைத்தார் ஆர்த்தி.

அதிர்ச்சி அடைந்த அவரை உட்கார வைத்து ஒரு காதல் கதையைக் கூறினார். தானும், வினீத் என்ற என்ஜீனியரிங் மாணவரும் காதலித்து வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் ஆர்த்தி கூறவே பெரும் அதிர்ச்சியாகி விட்டது நிதீஷுக்கு.

உங்களை எனது கணவராக ஏற்க என்னால் முடியாது. உங்களை எனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் என்னை சகோதரியாக ஏற்று என்னை எனது காதலருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.

கணவர் கையில் ராக்கி
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆர்த்தி பேசியதால் நிதீஷ் நிலை குலைந்தார். இருப்பினும் தனது மனதைத் தேற்றிக் கொண்ட அவர் ஆர்த்தியை சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி தயாராக வைத்திருந்த ராக்கியை எடுத்து நிதீஷின் கையில் கட்டினார்.

பின்னர் இருவரும் வெளியே வந்து நிதீஷின் பெற்றோரிடம் நடந்ததை விளக்கினர். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆர்த்தியின் நிலையை உணர்ந்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஆர்த்தியை தங்களது மகளாக ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த நாள் இந்த விவகாரத்தை ஆர்த்தியின் பெற்றோரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தைய தக்கா என்று குதித்தனர். ஆர்த்தியின் செயல் தவறு என்று கூறினர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத நிதீஷ் மாவட்ட போலீஸ் ஆலோசனை மையத்தை அணுகி நடந்ததைக் கூறி வினீத்தையும், ஆர்த்தியையும் சேர்த்து வைக்க உதவி கோரினார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போலீஸார், முதலில் ஆர்த்திக்கும், நிதீஷுக்கும் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களை தங்களது முடிவில் தெளிவாக இருந்ததால் வினீத்தை வருமாறு அழைத்தனர்.

பாக்யராஜ் பாணியில் நிராகரித்த காதலர்

ஆனால் ஆர்த்திக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர முடியாது என்று வினீத் கூறி விட்டார். ஆர்த்திக்கு இப்போது இன்னொருவருடன் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவரை எப்படி எனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அது இயலாது என்று, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் கூறுவது போல கூறி விட்டார் வினீத்.

இதைக் கேட்டு ஆர்த்தியும், நிதீஷும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.

இதையடுத்து தற்காலிகமாக ஆர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதீஷ், எப்படியாவது வினீத்தை சமாதானப்படுத்தி அவருடன் ஆர்த்தியை சேர்த்து வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

அடுத்தது என்ன?
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்.

English summary
Meerut girl in high dilemma after rejected by her lover. This girl Arthi was in love with Vinit. Arthi's elder sister Neha was engaged to one Nitesh.But before marriage, Neha eloped with her lover. So Neha's family urged Arthi to marry Nithesh. Both got married on May 6. At the first night Arthi told her story to Nithesh and tied rakhi to him. Shocked Nithesh then accepted Arthi as his sister. Then he approached the police to unite Arthi and Vinit. But Vinit refused to accept Arthi as his wife, since she married another person.

கருத்துகள் இல்லை: