வெள்ளி, 5 நவம்பர், 2010

சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, சேஷனை ஓட விட்டது போன்றவை திமுக ஆட்சியில் இல்லை-கருணாநிதி

சென்னை: சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, டி.என்.சேஷனை ஓட ஓட விரட்டியது, பல்வேறு படுகொலைகள் என இருந்த அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைவுதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் - குறிப்பாக ஜெயலலிதா தொடர்ந்து செய்துவரும் பொய்ப் பிரசாரத்திற்கு, உதவி செய்யும் நோக்கத்துடன்; என்ன செய்தாலும் ஜெயலலிதாவைப் போன்றவர்களை ஆதரிப்பதே பிறவிப்பயன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதைப் போல, நடுநிலை நாளேடு ஒன்று, நேற்று ஒரு தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் படிப்பவர்களை திசைதிருப்புவதற்காக, திட்டமிட்டு செய்திகளை எல்லாம் ஆங்கிலத்திலே சொல்வார்களே, அதைப் போல - ஊதி ஊதிப் பெரிதாக்கி, மிகைப்படுத்தி - கடுகுக்குள் மலையைப் புகுத்தி எழுதியிருக்கிறார்கள்.

நல்லாட்சி நடத்தி வரும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் சிறப்பான செயல்பாடுகளால் குறை ஒன்றும் கண்டுபிடிக்க இயலாததன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற கடைசி அஸ்திரத்தை எடுத்துக்கொண்டு, பொத்தாம்பொதுவாக, "வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ'' என்ற பாணியில் சட்டம் ஒழுங்கைப் பற்றியும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் திசை திருப்பும் வகையில் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

இந்தியாவிலேயே மிகச்சிறப்பாகச் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். சாதி மதப்பூசல்கள் தலையெடுக்காத வண்ணம் தமிழக அரசின் தொடர் கண்காணிப்பில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகிறது.

30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த "பசும்பொன் தேவர் குருபூஜை'' மிகவும் அமைதியாக நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நன்கு பராமரித்து வருவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள். அமைதிக்குக் குந்தகமின்றி நடத்தப்பட்டதும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரித்து வருவதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகக் கூறி 18.10.2010 அன்று மதுரையில் திட்டமிட்டபடி அவரது பொதுக் கூட்டத்தை நடத்த விடாமல், தடுத்திட முயற்சிப்பதாகவும், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தொடர்ந்து அவரது கட்சியினர் அறிக்கைகள் விடுத்தபோதும் கூட; காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளினால் 18.10.2010 அன்று எதிர்கட்சித் தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று கூட்டத்தை நடத்தி பாதுகாப்பாகச் சென்னைக்குத் திரும்பினார் என்பதை நாடே அறிந்துள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவது உண்மைக்கு மாறானது என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொலைக் குற்றங்களும், கொள்ளைகளும், கடத்தல்களும் நடப்பது போன்றும், இவற்றையெல்லாம் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்திற்கு அடிப்படை ஏதுமில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் 2004-ஆம் ஆண்டில் மிக உயர்ந்த எண்ணிக்கையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 817 குற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில்; தி.மு.க. ஆட்சியில், கடந்த 2009-ஆம் ஆண்டில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 957 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் நடக்கும் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால்கூட பிற மாநிலங்களை விடக் குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 322 குற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 286 குற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 266 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால்கூட; சென்னைப் பெருநகரில் குற்ற நிகழ்வுகள் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதும் புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகத் தென்படுகிறது. அண்மைக் கால குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால்கூட, குற்றநிகழ்வுகளில் குற்றவாளிகள் உடனடியாகக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

17.7.2010 அன்று நடந்த சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றவாளி 4 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் கொடும் குற்றவாளிகள் 2009-ஆம் ஆண்டில் 2220 பேரும், 2010-ஆம் ஆண்டில் இதுவரை 1808 பேரும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த போது - மயிலாடுதுறையில் காங்கிரஸ் தலைவர் குரு ஞானசேகரன் படுகொலை; முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் சம்பந்திகள் இரண்டு பேர் படுகொலை; வேலூர் நகைக்கடையைக் கொள்ளையடித்து மூன்று பேர் சுட்டுக் கொலை; மயிலாடுதுறை கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை; சென்னையில் தலித் மக்கள் முன்னணித் தலைவர் பாலு என்பவர், அவர் மகன் கண்ணெதிரே படுகொலை; சசி என்ற சசிகுமார் என்ற சினிமா ஸ்டண்ட் நடிகர் வெட்டிக் கொலை; திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மணி என்ற கழகத் தோழர் சுட்டுப் படுகொலை; திருமுல்லைவாயிலைச் சார்ந்த சப்-இன்ஸ் பெக்டர் மகன் விஜி வர்கிஸ் நடுரோட்டில் வெட்டிக் கொலை; சூனாம்பேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவலன் வெட்டிக் கொலை - என ஜெயலலிதா ஆட்சியில், 2003-ஆம் ஆண்டு மட்டும், சங்கிலித் தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்தபோது; அவற்றையெல்லாம் வெறும் செய்தி என்ற அளவில், வெளியிட்டனவே தவிர; "சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; நல்லாட்சிக்கு இது அழகல்ல'' என்று அறிவுரை கூற முன்வருவதற்கான திராணியும், தைரியமும் இருந்தனவா என்றால், இல்லை. இப்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறார்களே, என்ன காரணம்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?

ஜெயலலிதா ஆட்சியில் - காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் 3-9-2004 அன்று கொலை செய்யப்பட்டு; அந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது சகோதரர் ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவி சுப்பிரமணியன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்ட போதும்; சுந்தரேச அய்யர், அப்பு உட்பட 11 பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்ட போதும்; தலையங்கங்கள் தீட்டி தங்கள் சான்றாண்மையைக் காட்டிக்கொள்ள முயற்சித்தார்களா?

8-8-1993 அன்று சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பரிதாபமாக மரணமடைந்த போது 14-4-1995 அன்று சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்து "பைபிள்'' சண்முகம் என்பவர் மாண்டபோது; 10-7-1995 அன்று திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்தபோது; 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுக்கால ஜெயலலிதா ஆட்சியில் 333 வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து - 135 பேர் மரணமடைந்து, 394 பேர் காயமடைந்தபோது; சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தமது பேனா முனையைத் தீட்டிட முன்வந்தார்களா?

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.கே.பாலன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாரே; கழக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தின் தம்பி, ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை ஆய்வாளராக இருந்தவர்; திடீரெனக் காணாமல் போனாரே, இவற்றின் அடிப்படையில், ஜெயலலிதாவின் காவல் துறை செயலிழந்துவிட்டது என்று சுட்டிக்காட்ட முயற்சி செய்தனவா?

16-8-1991 அன்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கல்வீசித் தாக்கப்பட்ட போது; அ.தி.மு.க.வைச் சார்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்களே, அதாவது, ரமேஷ் என்பவரும், பி.சொக்கலிங்கம் என்பவரும் தாக்கப்பட்டபோது; 19-5-1992 அன்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது "ஆசிட்'' பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்டபோது; 2-12-1994 அன்று முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் சேஷன் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்ட போது; 26-7-2004 அன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டபோது; சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 2005 டிசம்பர் மாதம் நிவாரணம் பெறுவதற்காக ஜெயலலிதா அரசு கையாண்ட தவறான அணுகுமுறையின் காரணமாக, 40-க்கும் மேலான அப்பாவிப் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மாண்டபோது; சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்தார்களா?

ஆனால், இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்குத் தேவையான - ஆக்கப்பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நாகரிக - கலாச்சாரக் கேடுகளுக்குத் துணை புரியாத செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப் படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்! நடுநிலையாளர்க்குக் கெடுமதி; கூடாதல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: