வியாழன், 4 நவம்பர், 2010

சிறுவனை கடத்தியது ஏன்?என்ஜினீயர்கள் வாக்குமூலம்



சென்னையில் சிறுவன் கீர்த்திவாசனை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள என்ஜினீயர்கள் விஜய், பிரபு இருவரும் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள் ஆவார்கள். இவர்கள் துறையூரை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெற்றோருடன் சென்னையில் தான் வசித்து வந்தனர்.
விஜயின் தந்தை பெயர் ராமையா. இவர், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி ஆவார். சென்னை திருமங்கலம் பயோனியர் காலனியில் வசித்து வருகிறார்.
பிரபுவின் தந்தை பெயர் கேசவன். இவரும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்தான். பிரபு அண்ணாநகர் மேற்கு பஞ்சரத்னா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சிறுவனை விடுவித்துவிட்டு அவனது தந்தை ரமேஷிடம் ரூ.1 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு இருவரும் நேராக பிரபு வீட்டுக்கு சென்றனர்.
பணத்தை பிரபு வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு விஜய் அவரது வீட்டுக்கு போய்விட்டார். விஜயின் ஹீரோஹோண்டா மோட்டார் சைக்கிளில் தான் இருவரும் தப்பிச் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் டிஎன்.02, டி-2288 ஆகும். முதலில் இந்த நம்பர் தெரியாமல் இருக்க கைகுட்டையால் நம்பர் பிளேட்டை மறைத்து கட்டியிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்லும்போது கைகுட்டை காற்றில் பறந்து சென்றுவிட்டது. பின்னால் விரட்டிச் சென்ற போலீசார் மோட்டார் சைக்கிளின் நம்பரை குறித்துவிட்டனர்.
இந்த நம்பரை வைத்துத்தான் விஜயின் வீட்டு முகவரியை போலீசார் கண்டறிந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் விஜயின் வீட்டு கதவை போலீசார் தட்டினார்கள்.

போலீசை பார்த்ததும் விஜயின் பெற்றோர் பதறினார்கள். போலீசார் வீட்டுக்குள் சென்று விஜயை பிடித்தபோது அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உடனடியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்.

இதை கேட்டு விஜயின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். போலீசார் விஜயை அழைத்துக்கொண்டு பிரபுவின் வீட்டுக்கு சென்று அவரையும் பிடித்தனர். பிரபுவின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி பணத்தையும் மீட்டார்கள். அதன்பிறகு இருவரும் அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்தது.

விசாரணையில் சிறுவன் கீர்த்திவாசனை கடத்தியது ஏன்? என்பது குறித்து இருவரும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்கள். இருவரும் நல்ல கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

என்ஜினீயரிங் படிப்பும் படித்துள்ளனர். விஜய் லண்டனுக்கு சென்று படித்து வந்துள்ளார்.
லண்டனில் ஒரு வங்கியில் வேலை பார்க்கும் பெண் அதிகாரி ஒருவரை விஜய் காதலிக்கிறார்.

விஜயின் செல்போனில் காதலி அணைத்தபடி விஜய் எடுத்துக்கொண்ட படம் ஏராளமாக உள்ளது.
ஆனால் விஜய்க்கு நிரந்தரமான வேலை இல்லை. பிரபு சிங்கப்பூரில் ஒரு வருடம் வேலைபார்த்துவிட்டு பின்னர் வேலையை உதறிவிட்டு சென்னை வந்துவிட்டார்.

மிகவும் சீக்கிரமாக பணக்காரர்களாக வரவேண்டும் என்ற ஆசையில் இருந்ததாகவும், எப்படி பணக்காரனாக வரலாம் என்று யோசித்த போது ரமேஷின் செல்வ செழிப்பை பார்த்து அவரது மகன் கீர்த்திவாசனை கடத்தி ரூ.3 கோடி பணம் பறித்து சீக்கிரமாக பணக்காரனாக ஆகிவிடலாம் என்று திட்டமிட்டதாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இவர்களின் உறவினர்தான் ரமேஷிடம் மானேஜராக உள்ளார். அவரை பார்க்கும் போது சாக்கில் ரமேஷ் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு சாப்பிட்டுள்ளனர். ரமேஷோடு புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள்.

கடத்தல் திட்டத்தை வகுத்தவுடன் சிறுவன் கீர்த்திவாசன் பள்ளியில் எப்போது வருகிறான், எந்த வழியாக காரில் செல்கிறான், எந்த இடத்தில் இருந்து அவனை கடத்துவது என்பது பற்றி ஒரு வாரம் ஒத்திகை பார்த்துள்ளனர்.

இறுதியில் பள்ளியில் இருந்து வெளியில் வந்து காரில் ஏறி செல்லும் போது வழி மறித்து அதே காரில் சிறுவனை கடத்தி செல்வது என்றும், சற்று தூரம் போய்விட்டு வேறொரு காரில் சிறுவனை அழைத்து செல்வது என்றும் முடிவு செய்துள்ளனர்.

அதற்காகத்தான் மாங்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய காரை இருவரும் திருடி நம்பர் பிளேட்டை மாற்றியிருக்கிறார்கள். ரமேஷின் வீட்டுக்கு போகும்போது சிறுவன் கீர்த்திவாசனை பார்த்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபடும்போது சிறுவன் தங்களை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக இருவரும் தங்கள் முகத்தில் கலர் பவுடரை பூசி மாறுவேடம் பூண்டு சென்றுள்ளனர்.

சிறுவனை காரில் கடத்தியவுடன் `உன்னை ஒன்றும் செய்யமாட்டோம், உனது தந்தைக்கும், எங்களுக்கும்தான் பிரச்சினை, நீ பேசாமல் காரின் சீட்டுக்கு அடியில் படுத்துக்கொள்' என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். சிறுவன் கீர்த்திவாசன் பயந்துபோய் காரின் சீட்டுக்கு அடியில் படுத்துக்கொண்டான். தனது பெற்றோரிடம் செல்போனில் பேசியபிறகுதான் கீர்த்திவாசன் அழ ஆரம்பித்துள்ளான்.

ரமேஷ், போலீசுக்கு போகமாட்டார் என்று நம்பியதாகவும், சிறுவனை கடத்தி வந்து மிரட்டியவுடன் பணத்தை கொடுத்து விடுவார் என்று நம்பியதன் பேரிலும் பயமில்லாமல் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிரிமினல் தொழிலுக்கு புதிது என்பதால் எவ்வளவுதான் திட்டமிட்டு செயல்பட்டாலும் சில விஷயங்களில் கோட்டைவிட்டு போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்கள்.

என்ஜினீயரிங் மாணவர்களும், என்ஜினீயரிங் பட்டதாரிகளும் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு ஏற்கனவே சென்னையில் பலர் கைதாகியுள்ளனர். இப்போது கடத்தல் தொழிலிலும் குதித்து என்ஜினீயரிங் பட்டதாரிகள் கைதாகியுள்ளது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் விஜய், பிரபு ஆகியோர் தெரிவித்த வாக்குமூலம் மூலம் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: