- நமது நிருபர்
நல்லூரில் தமிழர்களின் ராசதானி ஒன்று முன்னர் இருந்தது என்ற வகையில், நாடு கடந்த நல்லூர் அரசு அமைவது அவசியம் என இதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான லண்டன் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். இவரே நாடு கடந்த நல்லூர் அரசின் பிரதமராக அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
நாடு கடந்த நல்லூர் அரசு, உருத்திரகுமாரின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு போட்டியாக இருக்க மாட்டாதெனவும், அவர்களுடன் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தாங்கள் பணியாற்றப்போவதாகவும் இந்தச் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். உதாரணமாக, நாடு கடந்த தமிழீழ அரசு காசு சேர்க்கும் இடங்களில் தங்கள் நாடு கடந்த நல்லூர் அரசு காசு சேர்க்கப் போக மாட்டாதெனவும், மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசிலுள்ள அமைச்சுப் பெயர்களில் தாங்கள் அமைச்சுக்களை உருவாக்கமாட்டோமெனவும், உதாரணமாக – நாடு கடந்த தமிழீழ அரசு பெண்கள் விவகார அமைச்சு என்ற பெயரில் அமைச்சு ஒன்றை உருவாக்கியிருந்தால் தாங்கள் பெண்கள் வெளிவிவகார அமைச்சு என்ற பெயரிலேயே அமைச்சு ஒன்றை உருவாக்குவோம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்த முயற்சி இன்னும் பல ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு நாடு கடந்த அரசு அமைக்கும் ஆவலைத் தூண்டும் எனவும், இதனால் பல நாடு கடந்த அரசுகள் உருவாகி இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு ஈற்றில் தமிழ் ஈழம் உருவாக இது வழிசமைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக