வெள்ளி, 5 நவம்பர், 2010

ஆஸ்கார ரவிச்சந்திரன்! முகம் காட்டாத முதலாளி

முகம் காட்டாத முதலாளி

அகர முதல எழுத்தெல்லாம் ஆஸ்கார் ரவி முதற்றே உலகு – கோடம்பாக்கத்தில் ஜீவிக்கும் அநேக உதவி இயக்குனர்களின் திருக்’குரல்’தான் இது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை குரல் விட்டு எண்ண நினைத்தால் அகர வரிசைப்படி மட்டுமல்ல, சிகர வரிசைப்படியும் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் பெயர்தான் முதலில் வரும். ஏன், ஏவிஎம் இல்லையா? அவர் இல்லையா இவர் இல்லையா என்று அடுக்குவோருக்கு ஒரே பதில்தான். ரவிச்சந்திரன் ஓடுகிற குதிரையை மட்டுமே நம்பினவர் இல்லை. பரியை நரியாக்குவார். நரியைப் பரியாக்குவார். அப்படி ஒரு அசாத்திய ராஜதந்திரம் அவருக்கு.
வேங்கடவனின் பிரசாதமான ‘லட்டு’ என்பது இவரது அலுவலகத்தின் பெயர். இறுக்கிப் பிடிச்சா லட்டு. உதறிப்போட்டா பூந்தி என்ற லாஜிக்கை ஒரு ‘குக்’கை விட நன்கு அறிந்தவர் என்பதால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் முதலாளி என்ற சகல திசைகளிலும் பயணம் போய் கொண்டிருக்கிறார். அதுவும் வெற்றிகரமாக!
“ஆஸ்கார்ல கதை சொல்லியிருக்கேன். பண்ணலாம்னு சொல்லிட்டார்” இந்த வார்த்தையை பல உதவி இயக்குனர்களிடம் கேட்டு அதிர்ந்திருக்கிறேன். இதிலென்ன அதிர்ச்சி?
அவர்களிடம், “எப்ப சொன்னீங்க?” என்று கேட்டுப்பாருங்களேன். “இப்பதான். நாலு வருஷம் ஆச்சு” என்பார்கள் கண்களில் ‘பல்ப்’ எரிய! இந்த நாலு வருடத்தில் ஒரு சந்திப்பில் கூட அவர்களது நம்பிக்கையின் ‘டங்ஸ்ட்டன்’ இழையை அறுத்திருக்கமாட்டார் ரவி.
மூன்று நான்கு கோடிகளில் படம் எடுப்பது பிரமாண்டம் என்று பேசிக் கொண்டிருந்த காலத்தில், முப்பது, நாற்பது கோடியை அசால்ட்டாக எடுத்து வைப்பார் ஒரு படத்திற்கு. அதில் பாதி விளம்பரத்திற்கு மட்டும் போய்விடும். இன்றைய மெகா விளம்பர  ‘சன்’னுக்கெல்லாம் டாடியே இந்த ஆஸ்கர் ரவிதான்!
‘வானத்தைப் போல’ என்கிற இமாலய வெற்றிப்படத்துடன் தொடங்கியது ஆஸ்கர் ரவியின் தயாரிப்பாளர் வாழ்க்கை. இவரது தயாரிப்பில் உருவான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் திரைக்கு வரவிருந்த நேரம். கவர்னர் மாளிகையில் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ஜெயா டிவியில். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ரோஜாக் கூட்டம் விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. கவர்னர் ஜெ.வை அழைத்தபின், அவர்  இருக்கையிலிருந்து எழுந்து வந்து ‘போடியம்’ முன் நிற்பாரல்லவா? அந்தச் சில நிமிடங்கள் எத்தனை முக்கியமானது? மொத்தத் தமிழகமும் உற்று நோக்குகிற நேரமல்லவா அது! நாற்காலிக்கும் போடியத்திற்கும் நடுவில் அம்மா நடந்த அந்தத் துளி நேரத்தில் நம்ம ரோஜாக்கூட்டம் விளம்பரம் வரணும் என்றார் ரவி.
ரோஜாக்கூட்டம்
அம்மா கவனித்தால் என்னாகும் என்பது ஜெயா டிவிக்காரர்களின் கவலை. கவனித்துக் கேட்டாலும், டேரிஃப் ரேட்டைச் சொல்கிற மாதிரி கவுரவமான தொகை இருந்தால் ஓ.கே என்றது அவர்கள் தரப்பு. அப்புறம் என்ன? ரவியின் ஆசைதான் நிறைவேறியது. இதற்காக அவர் கொடுத்த லட்சங்களை வைத்து ஒரு மினி பட்ஜெட் படத்தைத் தயாரித்திருக்கலாம். அதுதான் ரவிச்சந்திரன்!
ஆமாம்… ரவிச்சந்திரன் எப்படியிருப்பார்? யாராவது பார்த்திருக்கிறீர்களா? நேரில் போனால் மட்டுமே அது சாத்தியம். புகைப்படமோ, வரை(ந்த) படமோ எதுவாகவும் இருக்கட்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு, பார்ட் ‘போஸ்’ கூட தந்ததில்லை அவர். இதில் அவருக்குப் பல வசதிகள் இருந்தன.
தன்னிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டு வந்த ஓர் இளைஞருடன் பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு நாலைந்து நாட்கள் போய் வந்தார் ரவிச்சந்திரன். படகு காரில் போய் இறங்குவார்கள் இருவரும். லேசான டிபனுடன் சினிமாவையும் சேர்த்துக் கொறித்துவிட்டுத் திரும்புவார்கள். ஒருநாள் ரவிச்சந்திரன் போகாமல் நடிகர் மட்டும் போயிருந்தார் அங்கே. சார்… உங்க டிரைவர் வர்லியா? என்றாராம் சர்வர்! இதைக் கேள்விப்பட்டாலும் கவலைப்படமாட்டார் ரவிச்சந்திரன். ஏனென்றால் அவரது வெற்றி அதற்குள்தான் அடங்கியிருக்கிறது.
பட ரிலீஸ் தினத்தில், முன் வரிசை டிக்கெட்டில் கூட அவரைப் பார்க்கலாம். சி கிளாஸ் ரசிகனின் ஒவ்வொரு கமென்ட்டையும் காது குளிரக் கேட்பார். இப்படிப் பல தியேட்டர்களில் படம் பார்த்த அனுபவம்தான் எந்தெந்த இடங்களில் ரசிகன் பிரத்தியேக இன்டர்வெல் விடுவான் என்பதைக் கூட யூகிக்க வைக்கிறது அவரை. கோடம்பாக்கத்தில் எந்த முக்கியஸ்தர் படமெடுத்து முடித்தாலும் ‘ரவி சார்’ ஒருமுறை பார்த்துவிட்டால் நல்லது என்று நினைக்காமல் இருக்க மாட்டார்கள். ப்ரீ வ்யூ பார்த்துவிட்டு அவர் சொல்லும் ஒருவரிக் கருத்துக்கு ராணுவ மரியாதை தருவது கோலிவுட் கலாசாரம். ஒரே காரணம், அவர் சொன்னதுக்கு மாற்றாக ரிசல்ட் வந்ததில்லை இதுவரை என்பதுதான்!
அசோக் நகரைச் சுற்றியுள்ள ஏரியாவின் ஆட்டோ டிரைவர்களுக்கு ஓர் அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். தெரு முனையில் நின்று கொண்டிருப்பார் ரவிச்சந்திரன். ஏம்ப்பா ஆட்டோ வருமா? எங்க சார் போவணும்? என்ற டயலாக்குகளை அடுத்து இருவரும் போய் இறங்குகிற இடம் ஏதாவது ஒரு பிரிவியூ தியேட்டராக இருக்கும். தன்னுடன் வந்த ஆட்டோ டிரைவரையும் தியேட்டருக்குள் அழைத்துப் போவார். கையோடு கொண்டு போகிற ரீல்களைக் கொடுத்து அவர் தயாரித்து வரும் படத்தின் பாடல்களைப் போடச் சொல்வார். இது அவர் பார்ப்பதற்காக அல்ல. ஆட்டோ டிரைவர் பார்ப்பதற்காக!
எனக்காக சொல்லக் கூடாது. உன் அபிப்பிராயம் என்ன? நிஜத்தை சொன்னால் மீட்டர் சார்ஜ் ப்ளஸ் ஆயிரம்! யாருக்கு வலிக்கும்?
“இன்னா சார். ஈரோ மூஞ்சே சர்யா தெர்ல…” என்று டிரைவர் சொல்லிவிட்டால் போதும். அந்தப் பாடல் எத்தனை லட்சம் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரீ ஷூட் போகும். ஹீரோவுக்கு குளோஸ் அப் வச்சு ஒரு முறை எடுங்கப்பா என்பார் இயக்குனரிடம். சில நேரங்களில் இந்த ஆட்டோ ரேஞ்ச் இன்னும் குறைந்து காய்கறி வியாபாரி, கடலை மிட்டாய் வியாபாரி என்று இறங்கும்.
அவர் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் வேடிக்கை. தனது பட பாடல்களை ஒரு சிடியில் பதிந்து கொள்வார். இதைக் கேட்பதற்கென்றே அவரது அறையில் ஒரு பாடாவதி டேப் ரெக்கார்டர் இருக்கும். அதில் “குறையன்றுமில்லை… மறை மூர்த்தி கண்ணா” பாடலைப் போட்டாலும், “குறை தவிர வேறில்லை கண்ணா” என்றுதான் பாடும். அப்படியொரு பழ பழஸ்.
எல்லார் வீட்டிலேயும் காஸ்ட்லி செட் இருக்காதுல்ல சார். இந்த மாதிரி டேப்ல போட்டு கேக்கும்போதும்கூட அந்தப் பாட்டு புடிச்சிருக்கணும் சார், அதுதான் ஹிட் ஆவும் என்பார்.
அமாவசை, கார்த்திகை, பவுர்ணமி, பஞ்சமி, ஓரை, ராகு, குளிகை, எமகண்டம், சதுர்த்தி, கரிநாள்னு காசு பணத்தை மதிக்கிற மாதிரி பஞ்சாங்கத்தையும் மதிப்பார். இத்தனை சங்கதிகளும் இடம் கொடுக்கிற நேரத்தில்தான் அன்ன ஆகாரம், ஆழமான தூக்கம் எல்லாம்.
“ஆபிஸ் பாய் இருந்தா தண்ணி கொடுக்க சொல்லுங்களேன்” என்றால், “சாருக்கு சாப்பாடு வாங்க போயிருக்கான்” என்பார்கள் அலுவலக ஊழியர்கள். போன பையன் கேரியரோடு திரும்புவான் என்று எதிர்பார்ப்பவர்கள் பேஸ்த் அடித்துப் போவார்கள். நாலு கேரட், கொஞ்சம் முட்டைகோஸ், கால் கிலோ தக்காளியோடு வருவான் பையன். சாருக்கு அதுதான் மதிய உணவு. மாலை உணவு எல்லாம்!
தசாவதாரம் படம் எத்தனையோ கோடியில் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் இவர்தான் என்பது ஊர் உலகமே அறிந்த விஷயம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆசியாவின் பெரிய சம்பள நடிகர் ஜாக்கி சான். அப்புறம் மனிஷா கொய்ராலா, தமிழக முதல்வர் கலைஞர் இன்னும் இன்னும்… ஆனால் முக்கியமாக மேடையில் இருக்க வேண்டிய ரவிச்சந்திரன், அங்கு வரவேயில்லை. ஏன்? அதான் சொன்னோமே, பஞ்சமி சதுர்த்தி பிரதர்ஸ்… அவர்கள்தான் காரணம்.
முகம் வெளியே தெரியாத வரைக்கும்தான் உங்களுக்கு யோகம் என்று எந்த ஜோசியனோ சொல்லி வைக்க, கோடம்பாக்கத்தில் எத்தனையோ பேருக்கு முகவரி தருகிற மனுஷர், தன் முகம் மறைத்துக் கிடக்கிறார்.
அதனாலென்ன… காற்றுக்கு முகமா இருக்கிறது?

கருத்துகள் இல்லை: