வெள்ளி, 5 நவம்பர், 2010

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி


நீண்டகால பேர்ச்சூழலில் இருந்து விடுதலைபெற்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இம்முறை தீபாவளிப் பண்டிகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட இடங்களில் தீபாவளிப் பண்டிகை களைகட்டியுள்ளது. பண்டிகைக்கால வியாபாரங்கள் சூடுபிடித்துள்ளன. சிறப்பான கொண் டாட்டங்கள் விழாக்கள் என்பன பிரதேச மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் பின்பு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வீடுகள் வளவுகள் அலங்காரம் செய்வதிலும் துணிமணிகள் வாங்குவதிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் ஏறி இறங்குவதையும், வெளி இடங்களில் தொழிலுக்குச் சென்றவர்கள் விடுமுறையில் வந்துகொண்டிருப்பதையும், பிரதான வீதிக்கரைகளில் துணி வகைகளும் ஏனைய பொருட்களும் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டிருப்பதும் காண முடிகிறது.
பல்வேறு இந்து அமைப்புகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கையினால் இந்த வருட தீபாவளிமதுபானம் இல்லாத தீபாவளி”யாக அமைய வேண்டுமென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் சுவரொட்டிகளும் முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள எல்லா முருகன் ஆலயங்களிலும் கந்தசஷ்டி விரதம் 6ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவிருக்கின்றது.
அம்பாறை மாவட்ட திருப்பணிச் சபை உகந்தமலை முருகன் ஆலயத்தில் விரதத்தையும், அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும், தீர்த்தமும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் இம்முறை தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு உடு துணிகளை விற்பனை செய்யும் தென்னிலங்கை சிங்கள முஸ்லிம் நடைபாதை வியாபாரிகள் படையெடுத்திருப் பதால், உடுதுணிகளை மக்கள் வாங்கு வதற்காக முனீஸ்வரன் வீதி முற்றவெளிப் பக்கம் பெரும்கூட்டம் காணப்படுகின்றது.
இம்முறை தீபாவளி சகல இன மக்களும் குதூகலிக்கும் விழாவாக அமைவதால் பெரும் எண்ணிக்கையான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளனர்.
இம்முறை தீபாவளி வெள்ளிக்கிழமை வருவதாலும், மறுநாள் கந்தசஸ்டி விரதம் ஆரம்பமாகவிருப்பதாலும் மதுபானக்கடைகளில் வியாபாரம் சோபை இழந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் சகல ஆலயங்களிலும் விசேட அபிஷேகங்கள், யாகங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள், மகேஸ்வர பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கூட்டம் நகர் பகுதியில் அதிகரித்திருப்பதையடுத்து கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் இலங்கைப் போக்குவரத்துச்சபை டிப்போக்கள் சகல பாதை மார்க்கங்களிலும் கூடுதலான பஸ் சேவைகளை நடாதிவருகின்றன.
யுத்தம் நீங்கி முழுமையான சமாதான சூழலில் மலரவிருக்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மட்டக்களப்பு வாழ் இந்து மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பகுதிகள் உட்பட சகல பகுதிகளிலும் தீபாவளிக்கென பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
காத்தான்குடி, மட்டக்களப்பு, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, செங்கலடி உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ஜவுளி மற்றும் பாதணிகள் உட்பட பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இம்முறை தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவிலான தென்னிலங்கை வர்த்தகர்களும் கிழக்கு மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேபோல, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகளும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது. கிளிநொச்சி நகரில் ஏ 9 வீதி மற்றும் பஸ் டிப்போ வீதி உட்பட அம்பாள் குளத்தில் அமைந்துள்ள புதிய சந்தை பளை நகரம் ஆகியவற்றில் கடந்த இரு தினங்களாக வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
கிளிநொச்சி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. பஸ் டிப்போ சந்தி கனகபுரம் வீதியில் புதிதாக நடைபாதை வியாபாரிகள் நூற்றுக் கணக்கில் புடவை வியாபாரம் உட்பட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த யுத்தத்திற்கு பின்னர் அதிக அளவில் மீளக்குடியேற்றம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இம்முறை தீபாவளிப் பண்டிகையை சிறப்புற கொண்டாட விரிவான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது.
முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு நகரம் முதலானவற்றில் தீபாவளி பண்டிகை கால வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை: