இலங்கையின் முக்கிய கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதமர்கள், உயர்அதிகாரிகள், மாற்றுக்கருத்தாளர்கள், மாற்றுக்கட்சித் தலைமைகள் இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பொதுமக்கள் எனப் பல இன்னோரன்ன கொலைகளுக்கு விடுதலைப் புலிகளே வித்திட்டு அவற்றை நடத்தினர் என்பது யாரும் அறியாத புதுச் சங்கதியல்ல. இவை நாம் சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியமுமில்லை. உலகிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக சர்வதேச நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு பாரிசில் சிலை வைக்கப்பட்டுள்ளது ஜனநாயகவாதிகளை விழிபிதுங்க வைத்துள்ளது.
மனித உரிமைகளை மதிக்கும் முன்னணி நாடான பிரான்சில் இது எப்படி சாத்தியமாயிற்று?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் பல கொலைகளை தானே முன்னின்று தமிழ்ச்செல்வன் நடத்தியிருந்தார். அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற்றுத்தருவதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக நோர்வே, சுவிஸ், பிரான்ஸ் என்று பறந்து திரிந்தார். அவர் சமாதானத்தை பெற்றுத் தருவார் சமாதானப் புறா என்று தமிழ்மக்கள் கனவு கண்டிருந்த காலமும் ஒன்று உண்டு.
சுவிஸ் ஜெனிவாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டிருந்தபோது அந்த நிகழ்வுகளில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரும் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் தமிழ்ச்செல்வன் வகித்த பாத்திரத்தில் அவர் வெறும் சிரிப்பையே உதிர்த்துக் கொண்டதாகவும் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கையை சொல்லும்போது கூட சிரித்துக் கொண்டே சொன்னதாகவும் அந்த சுவிஸ் நாட்டு ஊடகவியலாளர் சொல்லிக் கொண்டே இப்பேற்பட்ட தலைவர்கள் உங்கள் மக்களுக்கு என்னத்தை பெற்றுத் தரப்போகின்றார்கள் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர் என்ற பாத்திரத்தை தவிர அவரிடம் எந்தவித அரசியல் சாணக்கியமோ அறிவோ இருக்கவில்லை. இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளில் குறைந்த பட்சத் தீர்வை எட்டியிருந்தால் கூட எமது மக்கள் முள்ளிவாய்க்கலில் சமாதியாக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.
இறுதி யுத்தத்தில் எமது மக்கள் பட்ட அவலங்கள் சொல்லொணாதவை. இன்றும் அதன் வடுக்கள் அழியாது அவர்களது துன்பங்கள் தொடர்கதைகளாக தொடர்கின்றன. இந்தத் துயரநிலைக்கு வழித்தடம் பதித்த அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பது எந்தவித்தில் தகும்? என்ன நியாயம்? பிரான்ஸ் நாட்டில் லாக்குர்நோவ் நகரசபை இந்த கைங்கரியத்திற்கு எப்படி அனுமதி வழங்கியது.
ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளரின் சிலை எப்படி வைக்கப்பட்டது? பிரான்ஸ் நாட்டுச் சட்டத்திட்டங்களின் படி அங்குள்ள இல்லங்களின் வெளிப்புறத்தில் நாம் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமாயின் என்றால் கூட அந்தந்த நகரசபைகளில் அதற்கான அனுமதியைப் பெற்றேயாகவேண்டும். நமது வீட்டின் வெளிக்கதவின் நிறத்தை மாற்றுவதென்றால் கூட அனுமதிபெற்றாகவேண்டும்.
இப்படியான சட்டதிட்டங்கள் நிறைந்த நாட்டில் இந்தச் சிலை நாட்டலுக்கான அனுமதி எங்கே எப்படிப் பெறப்பட்டது?
லாக்குர்நோவ் பிரதேசத்தில் பெரும்பாலான தமிழர்கள் வாழுகின்றார்கள். அத்துடன் பெரும்பாலான வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களையும் இந்த நகர சபை உள்ளடக்கியுள்ளது. இந்த நகரசபையில் லாக்குர்நோவ் தமிழ்ச் சங்கம் ஒரு அமைப்பாக பதிவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளே தமது பிரச்சாரங்களுக்காக இவ்வாறான சங்கங்களை பதிவிடுகின்றனர். பின்னர் இந்தச் சங்கங்கள் ஊடாக தமிழ் கற்பித்து கலை வளர்க்கின்றோம் என்பார்கள். ஆனால் அங்கு தமிழ் கற்பிக்கும் போர்வையில் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் பணமும் அறவிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றமும் வரலாறும் கற்பிக்கப்பட்டு புலம்பெயர் இளம் சமூகம் தவறான வழிகளில் இட்டுச் செல்லவே வழியமைக்கப்படுகின்றது.
இந்த வகையில் லாக்குர்நோவ் தமிழ்ச் சங்கமே இந்த சிலை வைப்பு ஏற்பாடுகளை செய்ததாக அறியமுடிகின்றது. லாக்குர்நோவ் நகர சபையின் அங்கத்தவராக இருக்கும் திரு.அந்தோனி றூசெல் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் கைப்பொம்மை என்பது ஒரு பக்கம் இருக்க, அவரே புலிகளின் ஊர்வலங்களில் முன்னின்று பேச்சாளராகியிருந்தார். பாரிசின் ஈபிள்கோபுர முன்றலில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் ஆம் திகதி நடைபெற்ற கண்டனப்பேரணி ஒன்றில் இவர் பிரசன்னமாகியிருந்தார். (இந்தப் பேரணி 2007 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுக் கிளையின் பணியாளர்களை விடுவிப்பதற்கான பேரணி)
தற்போது இந்த சிலையைத் திறந்து வைத்ததும் இவரே தான்.
இந்த சிலையை உருவாக்கிய பெண்மணி தான் இந்த சிலையை உருவாக்கிக் கொடுத்ததன் நோக்கமே இலங்கையில் சமாதானம் நிலவவேண்டும் என்று தனதுரையில் தெரிவித்தார்.
அந்தப் பெண்மணிக்கு தமிழ்ச்செல்வனால் தமிழருக்கே இரத்த ஆறு திறந்துவிடப்பட்டது எங்கே தெரியப் போகின்றது?
புலம்பெயர் புலிப்பினாமிகள் இந்த சிலையை உருவாக்கக் கூட இங்கு வாழும் தமிழ் மக்களிடம் பணம் வசூலித்தது என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.
முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்ட சோகத்தினால் மீளமுடியாதுள்ள எம்மக்களுக்கு இந்தப் பணத்தை அனுப்பி வைத்திருந்தால் அவர்கள் பயனடைந்திருப்பார்கள். யாரை வாழ வைக்க இவர்கள் சிலை வடித்து நட்டார்கள் என்பது யாருக்குமே புரியவில்லை. மேலும் மேலும் தமிழ்மக்களை முட்டாள்களாக்குவது அவர்களுக்கு கைவந்த கலையே.
பிரான்ஸ் நாட்டிலுள்ள லாக்குர்நோவ் நகரசபை நிர்வாகம் புலிப்பினாமிகளுக்கு விலை போய்விட்டதோ அல்லது அவர்களது வாக்கு வங்கிகளை நம்பி வலிமையிழந்து விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. பிரான்ஸ் நாட்டிலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் நிலையில் அந்த அமைப்பின் அங்கத்தவர் ஒருவருக்கு ஒரு நகரசபை வளாகத்தில் சிலை நாட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது?…….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக