டெல்லி: பணிபுரியும் இடங்களில் செக்ஸ் தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அதில் செக்ஸ் தொல்லையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் `பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்-2010' என்ற சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பணி இடங்களில் `செக்ஸ் தொல்லை' என்பதற்கு உச்ச நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி உடலை தொடுதல், செக்ஸ் காரணத்துக்காக மிரட்டுதல் அல்லது வேண்டுகோள் விடுத்தல், உடல் மற்றும் வார்த்தை ரீதியாக விரும்பத்தகாத செயல்கள், வார்த்தைகளால் அல்லாத செக்ஸ் தொடர்பு போன்றவை செக்ஸ் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதிமொழி அளித்தோ அல்லது அச்சுறுத்தியோ செக்ஸ் தொல்லை கொடுப்பது மற்றும் செக்ஸ் தேவைக்காக பணியிடத்தில் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவது போன்றவையும் செக்ஸ் தொல்லைகளாக கருதப்படும்.
அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் அமைப்புசார நிறுவனங்களில் இத்தகைய தொல்லைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு இந்த சட்டத்தின் மூலமாக பாதுகாப்பு கிடைக்கும்.
பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளராகவோ, தொழில்ரீதியாகவோ, தினக் கூலி தொழிலாளராகவோ செல்லும் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தரப்பட்டாலும் இந்த சட்டப்படி தண்டனை தர முடியும்.
மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவிகள், மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் ஆகியோரும் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற முடியும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்காக, நிறுவனங்களிலேயே புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
10 பேருக்கு மேல் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களிலுமே இத்தகைய கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இது தவிர மாவட்ட கலெக்டர்களால் `புகார் கமிட்டியும்' அமைக்கப்படும். அதிலும் பெண்கள் புகார் தரலாம்.
பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் புகாரை முழுமையாக விசாரித்து தண்டனை அளிப்பதற்காக இந்த கமிட்டிகளுக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த சட்ட விதிகளை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில், தவறான புகார்கள் அளிக்கும் பெண்களை தண்டிக்கவும் இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது. பாதிப்புக்குள்ளான பெண் தனது புகாரை உறுதிப்படுத்தவோ அல்லது தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கவோ தவறினால் அவருக்கு தண்டனை கிடைக்கும்.
ஆனால், இந்தச் சட்டத்தின் கீழ் வீடுகளி்ல் வேலை பார்க்கும் பெண்கள் நிவாரணம் பெற முடியாது. வீட்டு வேலை செய்யும் பெண்களை இந்தச் சட்டத்தின் கீ்ழ் மத்திய அரசு சேர்க்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக