சனி, 4 மார்ச், 2023

வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ பரப்பிய 4 பேர் மீது வழக்கு

 மாலைமலர் :சென்னை தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது.
அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும்,
இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன.


இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும்,
அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.

இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக களம் இறங்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். அப்போது வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்று வெளியாகி இருக்கும் வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 4 வீடியோக்கள் இதுபோன்று போலியாக தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது உறுதியானது. திருப்பூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை மையமாக வைத்து போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து இந்த வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் யார்-யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்றில் இந்த வீடியோக்கள் திரும்ப திரும்ப வெளியாகி பீதியை ஏற்படுத்தியது அம்பலமானது.

இது தொடர்பாக தமிழக போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் தலா ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது.
யூடியூப் சேனல், இந்தி ஆன்லைன் பத்திரிகை, வக்கீல் ஒருவர் மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தற்போது போலி வீடியோ விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாக வெளியான வீடியோக்களை பரப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளோம். இந்த வீடியோக்கள் வட மாநிலங்களில் இருந்துதான் பரப்பி விடப்பட்டுள்ளது. எனவே இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். வீடியோவை பரப்பியவர்கள் வட மாநிலத்தில் இருந்தே செயல்பட்டது தெரிய வந்ததால் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் தமிழக காவல் துறை தயாராகி வருகிறது.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர். எனவே தேவையில்லாத வகையில் வீடியோக்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்வேந்தன் என்ற போலீஸ் ஐ.ஜி. வந்துள்ளார். பீகாரில் இருந்து கண்ணன் என்கிற போலீஸ் அதிகாரி இன்று மாலை வர உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இந்த 2 அதிகாரிகளும் திருப்பூர் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு பற்றி அறிக்கை அளிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை: